செய்திகள்

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு

Makkal Kural Official

புதுடெல்லி, ஜூன்.11-

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முதலாவது மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதிய மத்திய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நேற்று பிரதமர் மோடி இல்லத்தில் நடந்தது. அதில், கூட்டணி கட்சிகளின் அமைச்சர்கள் உள்பட அனைவரும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி, கிராமப்புற, நகர்ப்புறங்களில் தகுதியான 3 கோடி குடும்பங்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு நிதி உதவி வழங்கப்படும். தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, இம்முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டம், 2015-2016 நிதியாண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 கோடியே 21 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கழிப்பறை, சமையல் எரிவாயு இணைப்பு, மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு ஆகிய அடிப்படை வசதிகளுடன் கட்டப்படுகின்றன.

இதற்கிடையே, பிரதமர் மோடி நேற்று பிரதமர் அலுவலகத்துக்கு சென்றார். அப்போது, பிரதமர் அலுவலக ஊழியர்களிடையே அவர் பேசினார். அவர் பேசியதாவது:-

எனது ஒரே இலக்கு, ‘தேசம் முதலில்’ என்பதுதான். எனது ஒரே செயல்நோக்கம், வளர்ந்த பாரதம். இதைத்தான் ஊழியர்களிடம் இருந்தும் நான் எதிர்பார்க்கிறேன். எனது ஒவ்வொரு தருணமும் நாட்டுக்காகத்தான். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்க 24 மணி நேரமும் பணியாற்றுவதாக நான் வாக்குறுதி அளித்துள்ளேன்.

பிரதமர் அலுவலகம், சேவைக்கானதாக இருக்க வேண்டும். அது மக்களின் பிரதமர் அலுவலகமாக இருக்க வேண்டுமே தவிர, மோடியின் அலுவலகமாக இருக்கக்கூடாது. நான் ஆட்சி செய்வதற்காக பிறக்கவில்லை. அதிகாரத்தை குவிப்பது பற்றி நான் யோசிக்கவில்லை.

140 கோடி மக்களும் எப்போதும் என் மனதில் இருக்கிறார்கள். அவர்களை கடவுளின் வடிவமாக பார்க்கிறேன். கடந்த 3 மாதங்களில் மக்களின் வலிமை, அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றை பார்த்தேன். அதனால்தான் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *