செய்திகள்

பிரதமர் வருகை: ராமேஸ்வரத்தில் பொதுப் போக்குவரத்துக்கு தடை

ராமேஸ்வரம், ஜன. 19–

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, ராமேஸ்வரம் பகுதிகளில் பொது போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விளையாடு இந்தியா என்ற பெயரிலான இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதனைத் தொடர்ந்து நாளை திருச்சி திருவரங்கம் கோயிலுக்கு செல்கிறார். பின்னர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம் செல்ல உள்ளார். இதனையொட்டி இந்த மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாளை, நாளை மறுநாள் என 2 நாட்களுக்கு ராமேஸ்வரம் பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (20 ந்தேதி) மதியம் 12:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராமேஸ்வரம் நகர் பகுதியிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு தடை

21ஆம் தேதி ராமேஸ்வரம் நகரில் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் நகர் பகுதிக்குள் நாளை, நாளை மறுநாள் என 2 நாட்களுக்கு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தனுஷ்கோடி சுற்றுலா தலத்திற்கு நாளை நண்பகல் 12:00 மணி முதல் 21 ஆம் தேதி நண்பகல் 12:00 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அருள்மிகு ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனத்திற்கு நாளை காலை 08:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. எனவே பக்தர்கள் தரிசனத்திற்கு வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம் நகரம் முழுவதும் நாளை, நாளை மறுநாள் என 2 நாட்களுக்கு டிரோன் கேமரா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்களும், பொதுமக்களும் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *