ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் துணை முதலமைச்சர் ஆனார்கள்
மும்பை, டிச.6-
பிரதமர் மோடி முன்னிலையில் நடந்த பிரமாண்ட விழாவில் மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் பதவி ஏற்றனர்.
மும்பை ஆசாத் மைதானத்தில் பதவி ஏற்பு விழா பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. 2 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். மேலும் 40 ஆயிரம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தேசிய கீதம் இசைக்கப்பட்டு பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. விழாவில் மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவார் துணை முதலமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
பதவி ஏற்ற தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல கவர்னரும் வாழ்த்து கூறினார். பதவி ஏற்பு விழா 20 நிமிடங்களில் நிறைவு பெற்றது.
இதில் தேவேந்திர பட்னாவிஸ் 3-வது முறையாக முதலமைச்சர் பதவி ஏற்றுள்ளார். இவர் 2014 முதல் 2019 வரை 5 ஆண்டு காலமும், 2019 தேர்தலில் அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் வெறும் 72 மணிநேரமும் முதலமைச்சர் பதவி வகித்து உள்ளார்.
நேற்றைய விழாவில் முதலமைச்சர் மற்றும் 2 துணை முதலமைச்சர் மட்டும் பதவி ஏற்றனர். வேறு அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை. கூட்டணி கட்சிகள் இடையே இலாகா பகிர்வு செய்யப்பட்ட பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மகராஷ்டிராவில் சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 43 பேர் அமைச்சர் பதவி ஏற்க முடியும்.
விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி, சிவ்ராஜ்சிங் சவுகான், முதலமைச்சர்கள் யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), நிதிஷ்குமார் (பீகார்) உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இதேபோல சல்மான்கான், ஷாருக்கான், சஞ்சய்தத், ரன்வீர்சிங், ரன்பீர் கபூர் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழில் அதிபர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.