செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்கள் கூட்டம்

Makkal Kural Official

புதுடெல்லி, மே.26-

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-முதலமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது.

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. இதில் மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்கள் பங்கேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-மந்திரிகளின் ஒரு நாள் மாநாடு டெல்லியில் நடந்தது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த சுமார் 19 முதல்-மந்திரிகள் மற்றும் பல துணை முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பஹல்காம்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் ஆபரேஷன் சிந்தூர், சாதிவாரி கணக்கெடுப்பு, மோடி அரசின் 3-வது பதவிக்காலத்தின் ஓராண்டு நிறைவு, சிறப்பு நிர்வாக விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும் சர்வதேச யோகா தினம், அவசர நிலை அமல்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டு உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்த விவாதங்களும் மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்தன.

பின்னர் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக இந்திய ஆயுதப்படைகளை பாராட்டி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார்.

பயங்கரவாதிகளுக்கும், அதை ஆதரிப்பவர்களுக்கும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகுந்த பதிலடி கொடுத்திருப்பதாக அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. மேலும் ஆயுதப்படைகளுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதற்காக பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதைப்போல அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்ததற்காக மத்திய அரசை பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் சிறந்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் பல முதல்-மந்திரிகள் தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள் குறித்து மாநாட்டில் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இந்த மாநாட்டில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *