போஸ்டர் செய்தி

பிரதமர் மோடி ஆட்சியின் 100 நாள் சிறப்பு திட்டம் தயார்

Spread the love

புதுடெல்லி, ஜூன் 19–

பிரதமர் மோடி ஆட்சியில் 100 நாள் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி தலைமையிலான பாரதீய ஜனதா 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றி பதவி ஏற்றுள்ளது.

மோடி அரசு ஜூலை 5–ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறது. இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி, நிதி அமைச்சகம் மற்றும் இதர முக்கிய அமைச்சகத்தை சேர்ந்த செயலாளர்களையும், உயர் அதிகாரிகளையும் அழைத்து தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் நிதி அமைச்சகத்தை சேர்ந்த 5 செயலாளர்களும் மற்றும் முக்கிய அமைச்சகத்தை சேர்ந்த உயர் அதிகாரிகளும், நிதி ஆயோக் அமைப்பை சேர்ந்த உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதில் நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துணர்வு ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான திட்டங்கள் குறித்தும், அடுத்த 100 நாட்களுக்கு என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.

5 ஆண்டு இலக்கு

இந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்த அரசின் இலக்கு என்ன என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறுகிய காலக்கட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை 5 ட்ரிலியன் டாலர் அளவுக்கு உயர்த்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதேபோல பிரதமர் மோடியின் முக்கிய திட்டங்களாக விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவது, பிஎம் கிசான் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல், அனைத்து இல்லங்களுக்கும் மின்சார வசதி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் சிக்கலை எதிர்க்கொண்டு வரும் விவசாயத்துறையை மேம்படுத்துவது குறித்தும், வேளாண்மையில் பல்வேறு சீரமைப்புகளை மேற்கொள்ளுவது குறித்தும், விவசாயத்துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பது பற்றியும், சரக்கு கையாளுதலை வலுப்படுத்துவது பற்றியும், விவசாயிகளுக்கு ஆதரவான சந்தை சூழலை உருவாக்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல் நாட்டில் நடைபெறும் வர்த்தகத்தை எளிதாக்குவது பற்றியும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்தும் ஒவ்வொரு துறையிலும் மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டிய திட்டம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

தமிழகத்திற்கு திட்டங்கள்…

அதேபோல் உற்பத்தி துறையில் முதலீடுகளை அதிகரிப்பதை முக்கிய இலக்காக வைத்தும் அந்த விவாதம் நடைபெற்றது. விவசாயிகள் வருமானத்தை உயர்த்துவது குறித்தும், விவசாயத்துறை மேற்கொண்டு வரும் சிக்கல்களுக்கு தீர்வு காணுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதோடு, இது தொடர்பான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல்முறையாக தாக்கல் செய்ய இருக்கும் மத்திய பொது பட்ஜெட்டில் பொருளாதார மந்தநிலையை போக்கி, வளர்ச்சி நோக்கிய பயணத்திற்கு ஆதரவான திட்டங்களும், வராக்கடன் உள்ளிட்ட நிதித்துறை சந்தித்து வரும் பிரச்சினைக்கு தீர்வு காணும் திட்டங்களும், வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களும், தனியார் முதலீடு, ஏற்றுமதியை அதிகரித்தல், வேளாண் பிரச்சினை தீர்க்கும் திட்டங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்களும், அறிவிப்புகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாலை போக்குவரத்து திட்டங்கள், ரெயில் சேவையை அதிகரித்தல், தொழிற்சாலைகளை உருவாக்குதல், வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், பல்வேறு பாசன குடிநீர் திட்டங்கள் போன்றவை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஏழை மக்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களும், வருமானத்தை அதிகரிக்கும் சிறப்பு திட்டங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *