செய்திகள் நாடும் நடப்பும்

பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்கப் பயணம்


ஆர். முத்துக்குமார்


கடந்த மாதம் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அங்கு ஆட்சியை இழந்த பாரதீய ஜனதா இது பெரிய சரிவா? எனக் கவலையுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கையில் பிரதமர் மோடியின் அமெரிக்க அரசுமுறை சுற்றுப் பயணம் மிகப்பெரிய ஊட்ட டானிக் என்றே சொல்ல வேண்டும்.

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் வரலாற்று சிறப்புமிக்கது என்று தான் கூறியாக வேண்டும். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நமது பிரதமர் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார்.

இதற்கு முந்தைய பயணங்கள் இந்திய வம்சாவளியினர் அல்லது அமெரிக்க கூட்டமைப்புகள் நடத்திய நிகழ்வுக்காகவே இருந்தது. அல்லது ஐ.நா. சபையில் நடக்கும் ஏதேனும் மிக முக்கிய அலுவலர் காரணமாக அதில் பங்கேற்க சென்றுள்ளனர்.

அது தவிர பிரதமர் மோடி 2 வது முறையாக அமெரிக்க காங்கிரசின் கூட்டு அமர்வில் உரையாற்றும் வாயப்பை பெற்றிருந்தார்.

அமெரிக்க காங்கிரஸ் என்பது அந்நாட்டு ஜனநாயக அமைப்பின் உச்சமாகும். அங்கு தான் அவர்கள் நாட்டின் வளர்ச்சி, பொருளாதார மற்றும் வெளியுறவு முடிவுகள் இறுதி வடிவம் எடுக்க முடியும்.

இம்முறை மோடியின் உரையை கேட்க ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சி அங்கத்தினர்களும் முழுமையாக கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடியின் ஒவ்வொரு கருத்தையும் பலத்த கைத்தட்டலுடன் வரவேற்றனர். பலமுறை எழுந்து நின்றும் தங்களது வாழ்த்தையும் வரவேற்பையும் வெளிப்படுத்தினர். மொத்தம் 79 முறை கைத்தட்டல்களும் 15 முறை எழுந்து நின்று பாராட்டிய ஆரவாரமும் இருந்துள்ளது. இதையெல்லாம் விட அந்த பவ்வியமான சர்வதேச அரங்கில் சில பெண் உறுப்பினர்களும் விசில் அடித்த காட்சி உண்மையிலேயே விசித்திரமானது!

இது பிரதமர் மோடியின் ஆங்கிலப் பேச்சு வல்லமைக்கு கிடைத்திருக்கும் புகழாரம்; சர்வதேச அரங்கில் அவருக்கு கிடைத்து வரும் அங்கீகாரம்.

அமெரிக்காவில் அவரது புகழின் சிறப்புக்கு அங்கீகாரமாய் ராணுவ தளவாட உற்பத்தி, நவீன தொழில்நுட்ப மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க பல புதுப்புது ஒப்பந்தங்களை மேற்கொண்டு நமது பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் தந்துள்ளார்.

எக்ஏஎல் நிறுவனமும் அமெரிக்காவின் பிரபல ஜிஇ நிறுவனமும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் பயனாக மிக நவீன எப்414 விமான என்ஜின்கள் இந்திய மண்ணில் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

உலகெங்கும் மிக அவசியமாக தேவைப்படுவது செமி கண்டக்டர்கள் கொண்ட ‘சிப்ஸ்’ ஆகும். எல்லா ஸ்மார்ட் கருவிகளுக்கும் தேவைப்படும் அதிமுக்கிய கருவி இந்த செமி கண்டக்டர்கள் ஆகும்.

இதுவரை இன்டல் நிறுவனம் தனது வடிவமைப்பை தாய்வானில் உருவாக்கி வந்தது.

சீனாவின் சமீபத்து போக்கால் அமெரிக்கா தனது பிரீமியம் செமி கண்டக்டர் தயாரிப்பை இந்தியாவில் செய்ய மோடியின் முன்னிலையில் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் காரணமாக செமி கண்டக்டர்கள் தயாரிப்பு அடுத்த சில மாதங்களில் நம் மண்ணில் துவங்கி விட்டால் குறைந்த விலை தயாரிப்புகள் நம் மண்ணில் தயாரிக்க முடியும்.

தற்சமயம் வாகனங்கள், கணினிகள், துல்லிய இயந்திரங்கள் தயாரிப்பு உலகெங்கும் சீனாவின் கெடுபிடியால் செமி கண்டக்டர் தட்டுப்பாடுகள் காரணமாக முடங்கி இருக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் நாம் தயாரிப்பை துவக்கிவிட்டால் சர்வதேசப் பொருளாதார எழுச்சிக்கும் நமது பங்களிப்பு இருக்கும்.

இவற்றுடன் பிரதமர் மோடி கிட்டத்தட்ட 135 நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்ற சர்வதேச யோகா தின நிகழ்வில் யோகா உடற்பயிற்சியில் அனைவருடன் இணைந்தும் இருந்தார்.

ஐ.நா. தலைமையகத்தில் உள்ள திறந்தவெளி புல்வெளியில் இப்படி சர்வதேச நிகழ்வை நடத்திய பிரதமர் மோடி அடுத்து எகிப்து நாட்டுக்கு ப் பயணமானார். எகிப்தில் 13 வது சர்வதேச விருதாக ‘ஆர்டர் ஆப் தி நைல் (Order of the Nile) விருதும் மோடிக்கு வழங்கப்பட்டு அவர் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம் அவருக்கு பெருமை சேர்த்து நமது பொருளாதாரத்திற்கு வலு சேர்த்திருப்பதுடன், நமது பாரம்பரிய புகழ் உலகப் பார்வையில் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *