செய்திகள்

பிரதமர் மோடியின் ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இல்லை: இந்தியா டுடே சர்வே

டெல்லி, பிப். 17–

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இல்லை என்று இந்தியா டுடே சர்வேயில் தெரிவித்துள்ளது.

கடந்த 2020-21 காலக்கட்டத்தில் ஒன்றிய பாரதீய ஜனதா அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாக பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஒன்றிய அரசு அந்த சட்டங்களை திரும்ப பெற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் பஞ்சாப், அரியானா விவசாயிகள் பாஜக அரசுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

டெல்லி சாலோ என்ற பெயரில் விவசாயிகள் டெல்லியை நோக்கி கடந்த 13ம் தேதி முதல் புறப்பட்டனர். ஆனால் அவர்கள் பஞ்சாப், இரியானா எல்லைகளில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. தற்போதும் விவசாயிகள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 5 வது நாளை போராட்டம் எட்டி உள்ளது.

வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இந்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

விவசாயிகளிடம் மகிழ்ச்சி இல்லை

விவசாயிகளிடம் நடத்தப்பட்ட 3 கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இத்தகைய சூழலில் தான் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலானஒன்றிய அரசால் விவசாயிகளின் பொருளாதார நிலைமை உயர்ந்துள்ளதா? சரிந்துள்ளதா? என்பது தொடர்பான சர்வே முடிவு வெளியாகி உள்ளது.

அதாவது ‘இந்தியா டுடே’ – சி வோட்டர் சார்பில் “நாட்டின் மனநிலை’ (Mood Of The Nation) என்ற பெயரில் இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பற்றி மாநில வாரியாக கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே 2023 டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் ஜனவரி 28 ம் தேதி வரை மொத்தம் 35 ஆயிரம் பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. இந்த கருத்து கணிப்பின்போது விவசாயிகளின் நிலைமை, பொருளாதார சூழல் பற்றிய கேள்விகளும் கேட்கப்பட்டு பதில் பெறப்பட்டது.

தற்போது விவசாயிகள் போராட்டம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் இந்த சர்வே முடிவு வெளியாகி உள்ளது. அதில் ஒட்டுமொத்த சர்வேயின் அடிப்படையில் பார்த்தால் 34.8 சதவீதத்தினர் தங்களின் பொருளாதாரத்தில் சரிவை சந்தித்துள்ளதாகவும், 32.6 சதவீதம் பேர் தங்களின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் என இந்தியா டுடே – சிவோட்டர் நடத்திய ‘மூட் ஆப் தி நேஷன்’ சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *