செய்திகள்

பிரதமர் மோடிக்கு 71வது பிறந்தநாள்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து

ராகுல், ஸ்டாலின், எடப்பாடி டுவிட்

புதுடெல்லி, செப். 17–

இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு 71வது பிறந்தநாள். இதை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திரமோடி குஜராத் மாநிலத்தில் 1950ம் ஆண்டு செப்டம்பர் 17–ந்தேதி பிறந்தார். மோடி இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிரதமர் மோடிக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி,

துணை ஜனாதிபதி

பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, கிரண் ரிஜிஜு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், புத்த மத தலைவர் தலாய் லாமா, தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் பதிவில் கூறியிருப்பதாவது:–

‘‘பிறந்த நாள் வாழ்த்துக்கள், உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெற உங்களை நான் வாழ்த்துகிறேன், மேலும் ஆத்மார்த்தமான மனப்பான்மையுடன் தேசத்திற்கு தாங்கள் செய்து வரும் சேவை தொடர்ந்து செய்திட விரும்புகிறேன் “என்று கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘பிரதமர் மோடியின் தனித்துவமான தொலைநோக்கு, முன்மாதிரியான தலைமை, அர்ப்பணிப்பு, சேவை தேசத்தின் சகல வளர்ச்சிக்கும் வழிவகுத்துள்ளன. அவருக்கு நீண்டநாள், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி ஒரே வரியில் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக ராகுல்காந்தி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோடி ஜி” என தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின், எடப்பாடி வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

மோடிக்கு, தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தேசத்துக்கு சேவை செய்வதில் உங்கள் அர்ப்பணிப்பு உணர்வும், உறுதியும் பாராட்டுக்குரியவை.

தாங்கள் நீண்ட ஆயுளும் நல்ல உடல்நிலையுடனும் இந்த தேசத்துக்கு நீண்ட காலம் சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

71 கிலோ லட்டு

பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றார். அன்றுமுதல் அவரின் ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளும் சேவா திவஸ் என்ற பெயரில் பாரதீய ஜனதாவினர் கொண்டாடி வருகின்றனர். மோடியின் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில், நேற்று இரவில் 71 தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டன. பிரதமரின் பிறந்தநாளுக்காக 71 கிலோ எடை கொண்ட விசேஷமான லட்டு தயாரிக்கப்பட்டது. போபாலில் 71 அடி நீள தடுப்பூசி வடிவிலான கேக்கை வெட்டி பாரதீய ஜனதாவினர் பிறந்தநாளை கொண்டாடினர். நாடு முழுவதும் மக்களுக்கு பல்வேறு இலவச சேவைகளை பாரதீய ஜனதாவினர் வழங்கி வருகிறார்கள்.

இன்று முதல் அக்டோபர் 7–ந்தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு 20 நாட்கள் பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.

பிரதமர் மோடியின் 20 ஆண்டுகால அரசியல் பயணத்தை விளக்கும் வகையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பாரதீய ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார்.

1.50 கோடி தடுப்பூசிக்கு இலக்கு

மோடியின் பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இன்று 1.50 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தடுப்பூசி போடாதவர்கள், இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதுவே பிரதமருக்கு நீங்கள் கொடுக்கும் பிறந்த நாள் பரிசாக அமையும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் சார்பில் பிரதமர் மோடி பரிசாகப் பெற்ற அயோத்தி ராமர் கோயில் மாதிரி சிலை, சார் தாம், சிலைகள், ஓவியங்கள், அங்கவஸ்திரங்கள் ஆகியவற்றை மின்னணு முறையில் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது. இந்த மூலம் கிடைக்கும் பணம், கங்கை நதியை பாதுகாக்கும் மற்றும் புதுப்பிக்கும் நமாமி கங்கை திட்டத்துக்கு வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *