சென்னை, மே 23–
பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இந்தியில் பேசிய மர்ம நபர், பிரதமர் மோடியை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் ஏற்கனவே இதுபோன்று மிரட்டல் விடுத்த நபரா? அல்லது புதிதாக மிரட்டல் விடுக்கும் நபரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று தினங்களுக்கு முன்பு குஜராத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையம் வழியாக அகமதாபாத் சென்ற நான்கு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள். இந்த நிலையில் தான் தற்போது பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
#pm #narendramodi #chennai