போஸ்டர் செய்தி

பிரதமர் மோடியை இன்று தமிழக கவர்னர் சந்திக்கிறார்

சென்னை,டிச.7–
கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ள நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் நரேந்திரமோடியை இன்று மாலையில் சந்தித்து பேசுகிறார்.
மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது. ஆய்வு நடத்த வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும் என நேற்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. உடனடியாக இந்த தீர்மானத்துடன் பிரதமருக்கு முதல்வர் கடிதமும் அனுப்பினார்.
கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் வழங்கியது. அந்த ஆணையம் அதை ஏற்றுக்கொண்டு, விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபையில் நேற்று, கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளக்குழுமம் வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதனி தீர்மானம் கொண்டு வந்து, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கவர்னர் டெல்லி பயணம்
இந்த சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று பிற்பகல் 1 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். மாலை 5.30 மணியளவில் பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, மேகதாது அணை பிரச்சினையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து பிரதமரிடம், அவர் விளக்குகிறார். இந்த சந்திப்பை முடித்து விட்டு இரவே விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். டெல்லி செல்லும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துடன் அவரது கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபாலும் உடன் சென்றுள்ளார்.
மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசும்போது:–
உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களின் வாதங்களை முழுமையாகக் கேட்டறிந்த பின்னர், கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேல்படுகை மாநிலங்கள் எவ்விதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தெளிவான ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
மேகதாது திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்ற நமது நிலைப்பாட்டை, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரும், பின்னரும், 25.2.2017, 27.2.2017, 4.9.2018, 8.10.2018 மற்றும் 22.11.2018 ஆகிய நாட்களில் நான் பாரதப் பிரதமருக்கு கடிதங்கள் மூலமாகவும், நேரடியாக சந்தித்தும், அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளேன். மேலும், 5.7.2017 மற்றும் 23.11.2017 ஆகிய நாட்களில் மத்திய நீர்வள ஆதாரத் துறை அமைச்சரையும் நேரில் சந்தித்தும், கடிதங்களின் வாயிலாகவும் கர்நாடக அரசுக்கு எவ்வித அனுமதியையும் மத்திய அரசு வழங்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளேன்.
மத்திய அரசின்
ஒருதலைபட்ச போக்கு
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சம நிலையில் வைத்துப் பார்க்க வேண்டிய மத்திய அரசு, காவேரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை பலமுறை எடுத்துரைத்தும் அதை கருத்தில் கொள்ளாமல் ஒருதலைபட்சமாக செயல்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது.
ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் பெங்களூரு நகரின் குடிநீர் தேவை உள்ளிட்ட பிற பயன்பாடுகளுக்காக 14.75 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகாவிற்கு கூடுதலாக அளித்து உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை கணக்கிட்டு ஏற்கனவே காவேரியில் தண்ணீர் பெற்ற பின்னர், மீண்டும் பெங்களூருவின் குடிநீர் தேவைக்கென 67 டி.எம்.சி. அடி நீர் கொள்ளவு கொண்ட மேகதாது அணையை கட்ட கர்நாடகா முயற்சிப்பது, தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் உள்நோக்கம் கொண்ட ஒரு செயலாகும். இதற்கு துணைபோகும் மத்திய நீர்வள குழுமத்தின் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.
பெங்களூருக்கு குடிநீர் வழங்குதல் என்ற போர்வையில் கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தினால் நீர் தேக்கும் கொள்ளளவு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அம்மாநிலத்தின் பாசனப் பரப்பும் விரிவுபடுத்தப்படும். எனவே, இவ்வணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரமும், உரிமையும் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் ஆண்டுகளில், கடந்த காலங்களைப் போலவே காவேரி நீரை முழுமையாக தனது உபயோகத்திற்காகவே கர்நாடகா பயன்படுத்தும் நிலை உருவாகும்.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவியது. மேட்டூர் நீர்த் தேக்கத்தில் மிகக் குறைவான அளவே நீர் இருந்தது. அப்போது கர்நாடக அணைகளில் சுமார் 50 டிஎம்சி அடி அளவு வரை தண்ணீர் இருந்தது. எனவே, தமிழ்நாட்டு மக்களின் தாகத்தினைப் போக்க மனிதாபிமான அடிப்படையில், கர்நாடக முதலமைச்சருக்கு நான் 13.1.2018 அன்று தமிழ்நாட்டின் நிலைமையை விளக்கி, உடனடியாக காவேரியில் 3 டிஎம்சி அடி நீரைத் திறந்துவிடுமாறு கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டேன். மேலும், நான் நேரில் சந்திப்பதற்கு அவரிடம் நேரம் கேட்கப்பட்டது. ஆனால், அவர்கள் சந்திக்க நேரமும் ஒதுக்கவில்லை; நீரையும் தரவில்லை.
குடிக்க தண்ணீர்
தரவில்லை
அந்த காலக் கட்டத்திலே அவர்கள் நமக்கு 70 டிஎம்சி தண்ணீர் தர வேண்டிய நிலையில், 3 டிஎம்சி தண்ணீர் குடிப்பதற்காக நாம் கேட்டோம். காங்கிரஸ் கட்சித் தலைவர் சொல்கின்றார், ஏன் செய்யவில்லை ? என்று. அப்பொழுது காங்கிரஸ் கட்சி ஆட்சி தான் கர்நாடகத்தில் இருந்தது. தமிழ்நாட்டு மக்கள் குடிப்பதற்கு 3 டிஎம்சி தண்ணீர் கேட்டார்கள். அதைக் கூட தர மறுத்தது உங்களுடைய தேசிய கட்சி, காங்கிரஸ் கட்சி என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன். ஏனென்றால் இதை விளக்கமாக சொல்ல வேண்டும். நீங்கள் அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டே இருந்தீர்கள். அதைத்தான் நான் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.
அதை விடுத்து, மேகதாது அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தில் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வது என்பது காவேரி நதிநீர் பிரச்சனையை தேவையில்லாமல் பெரிதுபடுத்தும் நோக்கத்துடன், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை தூண்டிவிடும் விதமாக உள்ளது. இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *