செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி 21ந் தேதி குவைத் நாட்டுக்கு செல்கிறார்

Makkal Kural Official

குவைத், டிச. 17–

குவைத் நாட்டுக்கு பிரதமர் இந்திரா காந்தி சென்று 43 ஆண்டுகளுக்கு பிறகு பிறகு, பிரதமர் மோடி டிசம்பர் 21, 22 ந் தேதிகளில் குவைத் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, 1981 ஆம் ஆண்டு குவைத் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு தற்போது தான் பிரதமர் மோடி செல்லவிருக்கிறார். வளைகுடா நாடுகளில் குவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.

ஆனால் கொரோனா பெருந்தொற்று, உள்நாட்டு விவகாரம், பிற வெளியுறவு கொள்கை சார்ந்த விஷயங்கள் போன்றவற்றால் குவைத் செல்வதற்கு திட்டமிடப்படவில்லை. அண்மையில் குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலி அல்-யாஹ்யா இந்தியா வருகை தந்தார்.

இந்த சந்திப்பின் போது மேற்கு ஆசியாவின் அரசியல் நிலை, வளைகுடா நாடுகளில் அமைதி நிலவவும், பாதுகாப்பு மற்றும் பிராந்திய நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதிலும் இந்தியா தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார். அப்போது தங்கள் நாட்டிற்கு வருமாறு அலி அல்-யாஹ்யா கேட்டுக் கொண்டார். இதையடுத்து பிரதமர் மோடியின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா – குவைத் உறவு

குவைத் நாட்டை பொறுத்தவரை இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி ஆகியவற்றை ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் குவைத்தில் தங்கி பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பிரதமர் மோடி மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்துவதுடன், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

குறிப்பாக கச்சா எண்ணெய் இறக்குமதி, ஃபார்மா, தொழில்நுட்பம், கல்வி ஆகியவை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி தான் குவைத் நாட்டில் 6 நாடுகள் அடங்கிய வளைகுடா கூட்டமைப்பின் மாநாடு நடந்தது. இதில் பல்வேறு உள் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக டிசம்பர் மாத இறுதியில் சவுதி அரேபியா செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டிற்கு பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *