வயநாடு, மார்ச் 2–
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்திக்கு வீடு கேட்டு பாஜக தலைவர் விண்ணப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு அண்மையில் நடைபெற்றது. அதில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இப்போது எனக்கு 52 வயதாகிறது, இன்னும் எனக்கென ஒரு வீடுகூட இல்லை. அலகாபாத்தில் இருக்கும் குடும்ப வீடு எங்களுடையது அல்ல. நான் துக்ளக் லேனிலுள்ள 12-ம் எண் வீட்டில் தங்கியிருக்கிறேன். ஆனால், அது என்னுடைய வீடல்ல எனக் குறிப்பிட்டிருந்தார்.
பாஜக விண்ணப்பம்
ராகுல் காந்தியின் பேச்சை பா.ஜ.க தலைவர்கள் பலரும் விமர்சித்தனர். இந்த நிலையில், ராகுல் காந்தி எம்.பி-யாக இருக்கும் வயநாடு மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர், ராகுல் காந்திக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் வீடு கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய பா.ஜ.க வயநாடு மாவட்டத் தலைவர் கே.பி.மது, “ராகுல் காந்திக்கு மாவட்டத்தின் மையப் பகுதியில் உள்ள கல்பெட்டாவில் வீடு, நிலம் பெற்றுத் தர முயல்கிறோம். அதற்காக ராகுல் காந்தியின் பெயரை பிரதமர் மோடியின் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் சேர்த்திருக்கிறோம். அதோடு, கல்பெட்டா நகராட்சி செயலாளரிடமும் விண்ணப்பித்திருக்கிறோம்.
விடுமுறையைக் கழிக்க ராகுல் காந்தி இங்கு வருவதால், அவருக்குச் சொந்த வீடு இருக்க வயநாடு உகந்த இடம். எனவே பா.ஜ.க-வால் முடிந்த உதவியை அவருக்குச் செய்வோம் என்று கிண்டலாகத் தெரிவித்திருக்கிறார்.