செய்திகள்

பிரதமரின் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை: சைலேந்திர பாபு விளக்கம்

தமிழ்நாடு காவல்துறையில் தான் நவீன பாதுகாப்பு கருவிகள் உள்ளன

சென்னை, நவ. 30–

மத்திய அரசு ஏஜென்சிகள் தமிழ்நாடு அரசுக்கு எந்தவிதமான அறிவுறுத்தலும் வழங்கவில்லை என்பதுடன், சென்னை வந்த பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை என்றும் தமிழ்நாடு காவல்துறையில்தான் நவீன பாதுகாப்புக் கருவிகள் உள்ளன என்றும் டிஜிபி சைலேந்திரபாபு இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர், தமிழ்நாடு காவல் துறைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். “செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தபோது, பாதுகாப்புப் பணியில் பயன்படுத்தப்பட்டிருந்த பல மெட்டல் டிடெக்டர்கள் பழுதடைந்திருந்தன. பிரதமரின் வருகை நிகழ்வு முடிந்தபின்னர், மத்திய அரசின் ஏஜென்சிகள், மாநில அரசுக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.

குறைபாடுகளே இல்லை

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது:–

“பிரதமர் வருகையின்போது, பாதுகாப்பில் குளறுபடிகள் நடந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை. நல்ல முறையில் பாதுகாப்பு இருந்தது. அதுதொடர்பாக எந்த தகவல் பரிமாற்றங்களும் கிடையாது. பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு காவல்துறை பயன்படுத்தக்கூடிய அனைத்துவிதமான கருவிகளும், பாதுகாப்பு கருவிகள் உள்பட அனைத்தும் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து, ஏதாவது உபகரணங்கள் காலாவதியாகியிருந்தால், அதனை மாற்றும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. அதுதான் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, இப்போது இருப்பதிலேயே தமிழ்நாடு காவல்துறை வசம்தான் நல்ல தரமான உபகரணங்கள் உள்ளன. அதன் அடிப்படையில், தற்போதுகூட, தமிழ்நாடு காவல்துறையின் இரண்டு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், மோப்ப நாய்களுடன் அந்தமான் சென்றனர். அங்கு பணி முடிந்து, திரும்ப உள்ளனர். அவர்களைத் திரும்பவும் கேரளாவுக்கு அனுப்ப இருக்கிறோம். இப்படி அண்டை மாநிலங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை உதவி செய்து கொண்டிருக்கிறது. எனவே அதில் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லை. பழையனவற்றை மாற்றுவதும், புதியவற்றை வாங்குவதும் காலங்காலமாகச் செய்வது.

2 மடங்கு நவீன கருவிகள்

தமிழ்நாடு காவல்துறையில் பழைய தொழில்நுட்பங்களை எல்லாம் பின்பற்றவில்லை. தமிழ்நாடு காவல்துறையிடம் இருந்து மற்ற மாநிலங்கள் எல்லாம் கேட்டு வாங்குகின்றனர் என்றால், பழைய தொழில்நுட்பம் இருந்தால் வாங்கமாட்டார்கள் அல்லவா? நவீன தொழில்நுட்பக் கருவிகளைத்தான் வைத்திருக்கிறோம். தமிழ்நாடு காவல்துறை வசம் அளவுக்கு அதிகமாகவே உபகரணங்கள் உள்ளன. கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உபகரணங்கள் உள்ளன.

அதேநேரம் எதை வைத்திருக்க வேண்டும், எதை களைய வேண்டும் என்ற பயிற்சிக்கான நிலையாணை உள்ளது. அந்த நிலையாணையைத்தான் பின்பற்றுகிறோம். மேலும், பிரதமர் வருகையின்போது, பாதுகாப்பு குறைபாடு என்று எஸ்பிஜியிடம் இருந்து எந்தவிதமான தகவலும், குற்றச்சாட்டும் இல்லை. ரொம்ப சிறப்பாக நடந்து முடிந்ததாகத்தான் வாய்மொழியாக அவர்கள் கூறினர் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *