முழு தகவல்

பிரணாப் முகர்ஜி: சிறப்பும் சிந்தனையும்!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மேற்குவங்க மாநிலம் ‌பீ‌ர்கு‌ம் மாவட்டத்தில் மரா‌த்‌தி என்ற இடத்தில் மூத்த காங்கிரஸ் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான கமட‌ா ‌கி‌ங்க‌ர் முக‌ர்‌ஜி – ராஜல‌ட்சு‌மி தம்பதியருக்கு 1935ம் ஆண்டு மகனாக பிறந்தார்.

சிறு வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் வரலாறு, அரசியல் ஆகிய இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் சட்டமும் பயின்றுள்ளார். ஆசிரியர், பத்திரிகையாளர், எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவர் பிரணப். தமது 22 வது வயதில் ‌சு‌வ்ரா முக‌ர்‌ஜியை மணந்த இவருக்கு, அபிஜித் முகர்ஜி, இந்திரஜித் முகர்ஜி என இரண்டு மகன்களும், ஷர்மிஷ்தா முகர்ஜி என்ற மகளும் உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் கின்கர் முகர்ஜியின் மகனாக பிறந்த பிரணாப், தந்தையின் மறைவுக்குப் பின் 1960 களில் அரசியலில் நுழைந்தார். 1969 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக முதன் முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார். 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவைக்கும், 2004, 2009 ஆம் ஆண்டுகளில் மக்களவைக்கும் தேர்வானார் பிரணாப்.

காங்கிரசில் 45 ஆண்டுகள்

கரடு முரடான அரசியலிலும், ஆட்சியிலும் 45 ஆண்டுகள் கடந்த பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாக புதிய பயணத்தை தொடங்கிய போது வயது 77. அப்போதே அவருக்கு 45 ஆண்டுகால அரசியல் மற்றும் ஆட்சி அனுபவம் இருந்தது. இதுவரை இந்திய ஜனாதிபதிகளாக இருந்த யாருக்கும், இந்த அளவுக்கு அரசியல் மற்றும் ஆட்சி அனுபவம் கிடைத்ததில்லை என்று கூறலாம்.

பிரணாப் முகர்ஜியின் வளர்ச்சி ஆரம்பத்திலிருந்தே சீராக முன்னேற்றம் அடைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் கின்கர் முகர்ஜியின் மகனாக இருந்த பிரணாப், வரலாறு மற்றும் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார். வக்கீலாக, கல்லூரி பேராசிரியராக, பத்திரிக்கையாளராக பணியாற்றினார். 60ம் ஆண்டுகளில் வங்காள காங்கிரசில் இணைந்து பொது வாழ்வில் ஈடுபட்டார். கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.

கடந்த 1969ம் ஆண்டில் முதல் முறையாக மாநிலங்களவை எம்.பி.யானார். 1978ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் ஆனார். இந்திராகாந்தி ஆட்சி காலத்திலேயே பிரணாப் சிறந்த நபராக விளங்கினார். அவசரநிலை சமயத்தில் சக்திவாய்ந்த வருவாய்துறை இணையமைச்சராக இருந்தார். 80 ஆம் ஆண்டுகளிலேயே நிதியமைச்சராக இருந்தார். பிரதமர் இல்லாத நேரங்களில் மத்திய அமைச்சரவை கூட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.

1984ம் ஆண்டில் இந்திராகாந்தி மறைவுக்குப் பின், பிரதமராக பிரணாப் விருப்பப்பட்டார். ஆனால் அவரது ஆசை அப்போது நிறைவேறவில்லை. ராஜீவ்காந்தி பிரதமரானார். அதிருப்தியடைந்த பிரணாப் காங்கிரசை விட்டு விலகினார். சிறிது காலத்துக்குப் பின் காங்கிரசில் மீண்டும் இணைந்தார். அதன்பின் அவரது வளர்ச்சியில் தொய்வு ஏற்படவில்லை.

சிறந்த நாடாளுமன்றவாதி

பிரதமர் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் பிரணாபுக்கு மீண்டும் முக்கியத்துவம் கிடைத்தது. திட்ட கமிஷன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். கடந்த 1997ம் ஆண்டு அவருக்கு சிறந்த நாடாளுமன்றவாதி விருது கிடைத்தது.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்த பிரணாப், 2004ம் ஆண்டு மேற்குவங்கம் ஜாங்கிபூர் தொகுதியில் வெற்றி பெற்று முதல்முறையாக மக்களவை உறுப்பினர் ஆனார். 2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

நிதியமைச்சராகவும் கூடுதல் பொறுப்பு வகித்தார். 27 ஆண்டு இடைவெளிக்குப் பின் அவருக்கு மீண்டும் நிதியமைச்சகம் கிடைத்தது. இது தவிர வர்த்தகம், ஸ்டீல் மற்றும் சுரங்கம், கப்பல் போக்குவரத்து, தொழில்துறை அமைச்சர் என பல பதவிகளில் பிரணாப் இருந்துள்ளார். நாடாளுமன்றத்தின் பல குழுக்களுக்கும் பிரணாப் தலைமை வகித்துள்ளார். 2007ம் ஆண்டு அவருக்கு பத்ப விபூஷன் விருது கிடைத்தது.

2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அவர் மீண்டும் வெற்றி பெற்றார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் முக்கிய நபராக பிரணாப் திகழ்ந்தார். கடந்த எட்டு ஆண்டு கால ஐ.மு. கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சி சந்தித்த பல்வேறு சிக்கல்களை தீர்க்கும் பணியில் அவர் ஈடுபட்டார். லோக்பால் உட்பட முக்கிய பிரச்னைகள் பற்றி விவாதிக்கும் அமைச்சரவைக் குழுக்களுக்கு (ஜி.ஓ.எம்) பிரணாப்பே தலைமை வகித்துள்ளார். இதுவரை 33 அமைச்சரவை குழுக்களுக்கு பிரணாப் தலைமை தாங்கியுள்ளார். இதனால் அவர் ஜி.ஓ.எம் பிரணாப் என அழைக்கப்பட்டார். அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக ஐந்து புத்தகங்களை பிரணாப் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வரலாற்று புத்தகம் இவரது மேற்பார்வையில்தான் வெளியானது.

மேலும் அறிய… https://tinyurl.com/y29cc7lh

ஜனாதிபதி-பாரத ரத்னா

வயதாகிவிட்டதால் இனி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பிரணாப் முடிவு செய்திருந்த நிலையில், அவரை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அறிவித்தது. அவருக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு அளித்ததால் அமோக வெற்றி பெற்றார். அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் அவருக்கு ஜனாதிபதி வாய்ப்பு கிடைத்தது.

2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்வு பெற்ற பிரணாப் முகர்ஜி, 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து, பாரதீய ஜனதா கட்சி பொறுப்பேற்ற பின்னரும் அந்த ஆட்சிக்கும் கட்சிக்கும் இணக்கமாகவே நடந்து கொண்டார்.

பாரதீய ஜனதா நிறைவேற்றிய பல சட்ட மசோதாக்களை, குடியரசுத் தலைவராக கையெழுத்திட்டு சட்டமாக நிறைவேற்றித் தந்தார். அத்துடன், பாரதீய ஜனதா கட்சியின் கொள்கைகள், திட்டங்களை ஆமோதிக்கும் நிலையிலேயே இருந்து வருந்தார். இதன் காரணமாகவே, கடந்த ஆண்டில் பாரதீய ஜனதா அரசு பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

1000 எம்பிக்களாக உயர்த்த வேண்டும்

டெல்லியில் 2019 டிசம்பர் மாதம் இந்தியா ஃபவுண்டேஷன் சார்பில், அடல் பிகாரி வாஜ்பாயின் இரண்டாம் நினைவு தின சொற்பொழிவில் பேசிய பிரணாப் முகர்ஜி,

“இந்திய வாக்காளர்கள் 1952 முதல் வெவ்வேறு கட்சிகளுக்கு வலுவான பெரும்பான்மையை வழங்கியிருக்கலாம், ஆனால் அவர்களில் ஒரே கட்சிக்கு 50% க்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்கவில்லை. தேர்தல்களில், எண்ணிக்கையின் அடிப்படையிலான பெரும்பான்மை ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கான உரிமையை உங்களுக்கு வழங்குகிறது.

அதேநேரம், பாப்புலர் கவர்ன்மென்ட் எனப்படும் மக்கள் பெரும்பான்மை இல்லாத அரசு என்பது எண்ணிக்கையிலான பெரும்பான்மை பெற்றாலும் பெரும்பான்மை அரசாக ஆகாது. அதுதான் நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செய்தியும் சாரமும். வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து அரசாட்சி புரியவேண்டும்.

மேலும், “தற்போதுள்ள 543 என்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்துவதற்கும், மாநிலங்களவையின் வலிமையை அதிகரிப்பதற்கும் வழிவகை காண வேண்டும். மக்களவையின் வலிமை, கடைசியாக 1977இல் திருத்தப்பட்டது. இது 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அப்போதைய மொத்த மக்கள் தொகையை 55 கோடியாகக் கொண்டது. ஆனால் இன்று இரு மடங்கு மக்கள் தொகை அதிகரித்துவிட்ட நிலையில், மக்களவை தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு ஆயிரம் உறுப்பினர்களாக ஆக்கப்பட வேண்டும் என்று சீர்திருத்தங்கள் குறித்து வலியுறுத்தி உள்ளார்.

மேலும் அறிய… https://tinyurl.com/y47955oq

வானத்திலிருந்து வருமா ரூ.5 லட்சம் கோடி?

2019 ஆம் ஆண்டு ஜூலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி, “55 ஆண்டுகள் ஆட்சிக்காக காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பவர்கள் அனைவரும், நாம் விடுதலையடைந்த போது எந்த நிலையில் இருந்தோம் என்பதையும் இப்போது எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதையும் நினைவுகூர மறுக்கின்றனர். அவர்கள் திட்டமிட்ட பொருளாதாரத்தை உறுதியாக நம்பினர். ஆனால் இன்றோ திட்டக் குழு கூட கலைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த வேண்டுமென்றால், சுழியத்திலிருந்து 1.8 லட்சம் கோடி டாலர் வரை நாங்கள் வலுவான தளத்தை கட்டமைத்துள்ளோம். 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்ட வேண்டுமென்றால் அதற்கான அடித்தளங்கள் அனைத்தும் முந்தைய ஆட்சியாளர்களான ஜவஹர்லால் நேரு, மன்மோகன் சிங், நரசிம்ம ராவ் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டன.

2024ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலராக உயரும் என்று நிதியமைச்சர் கூறினார். அந்த வளர்ச்சி ஒன்றும் சொர்க்கத்திலிருந்து வரப்போவதில்லை. பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தை பிரிட்டிஷார்கள் அமைக்கவில்லை, விடுதலைக்கு பிறகு ஆட்சி செய்த இந்தியர்களே அமைத்தனர். ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோரால் அமைக்கப்பட்ட ஐஐடிகள், இஸ்ரோ, ஐஐஎம்கள், வங்கி அமைப்பு போன்றவற்றால் இந்தியா பன்மடங்கு வளர்ந்துள்ளது. இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துதான் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம் என நிதியமைச்சர் சொல்ல முடியும் என காட்டமாக கூறினார்.

மேலும் அறிய… https://tinyurl.com/y6pmbdr8

கொரோனா பாதிப்பு

இந்நிலையில் 2020 ஆகஸ்ட் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் மூளை ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளை ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மூளையில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டாலும், வயது முதிர்வு மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், 13 ந்தேதி அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. எனினும் அவருடைய முக்கிய உடல் உறுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவை நிலையாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: மா. இளஞ்செழியன்.

செய்திப்பிரிவு: மக்கள் குரல் இணையதளக்குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *