பெங்களூரு, மே.20-–
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் நடவடிக்கைக்காக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய சிறப்பு புலனாய்வு குழு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஹாசன் நாடாளுமன்ற தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது. இவரது தந்தையான முன்னாள் மந்திரியும், ஒலேநரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ.வுமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் தொல்லை, கடத்தல் வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்த வழக்குகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார்.
அவர் ஜெர்மனியில் இருந்து லண்டனுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. பலாத்கார வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத பிரஜ்வல் ரேவண்ணாவை தேடப்படும் நபராக அறிவித்து, அவருக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வழக்கு சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அளிக்க வேண்டும்.
அதாவது பலாத்கார வழக்குகளில் அவருக்கு எதிராக கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பிப்பதுடன், கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, நேற்று முன்தினம் பலாத்கார வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பெங்களூரு கோர்ட் கைது வாரண்டு பிறப்பித்துள்ளது. அத்துடன் அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும் கோர்ட் அனுமதி வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே பிரஜ்வல் ரேவண்ணாவின் 7 வங்கி கணக்குகளை முடக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு போலீசார், அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணா, எம்.பி.யாக இருப்பதால், அவரிடம் டிப்ளோமேடிக் பாஸ்போர்ட் உள்ளது. அந்த பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி ஏற்கனவே பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதி இருந்தார்.
ஆனால் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படவில்லை. தற்போது அவருக்கு எதிராக கோர்ட் கைது வாரண்டு பிறப்பித்திருப்பதால், அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய சிறப்பு புலனாய்வு குழு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஓரிரு நாட்களில் பிரஜ்வல் ரேவண்ணா வழக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன், அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு போலீசார் கடிதம் எழுத உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே அவரை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போலீசார், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வ தற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.