முழு தகவல்

பிரசாந்த் பூஷண்: சர்ச்சை நாயகன்!

இந்திய உச்சநீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் 1956 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய தந்தை சாந்தி பூஷன் புகழ்பெற்ற வழக்கறிஞர் சமூக ஆர்வலர் என்பதோடு, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக பதவி வகித்தவர். சாந்தி பூஷன்-குமுத் பூஷன் பெற்றோரின் 4 குழந்தைகளில் பிரசாந்த் பூஷன் மூத்தவர்.

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். இவர் மாணவர் பருவத்திலேயே இந்திரா காந்தியின் 1974 ஆண்டு தேர்தல் வழக்கு குறித்து, ‘இந்தியாவை அதிரவைத்த வழக்கு’ (The Case that Shook India) என்ற புத்தகம் எழுதி பெயர் பெற்றவர். மேலும், ராஜிவ் காந்தி ஆட்சி காலத்தில் பூதாகரமாக பேசப்பட்ட போபர்ஸ் பீரங்கி முறைகேடு வழக்கு குறித்து, ‘நாட்டை விற்பனை செய்யும் போபர்ஸ்’ (Bofors: The Selling of a Nation) என்ற புத்தகம் எழுதி புகழ்பெற்ற பிரதமர்களையே எதிர்த்த வகையில் பெரும் புகழ் பெற்றார்.

2014 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சிக்கு வருவதற்கும் நரேந்திர மோடி பிரதமராவதற்கும், அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக ஆவதற்கும் காரணமாக இருந்த இயக்கம் அன்னா ஹாசரேவின் ஊழல் ஒழிப்பு போராட்ட இயக்கம் தான் காரணம். அந்த இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்களில் பிரசாந்த் பூஷனும் ஒருவர். அதன் பின்னர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி தோற்றுவித்த போது, அதன் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார். பின்னர், அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சியின் நிர்வாக தவறுகளைச் சுட்டிக்காட்டியதன் மூலம் அந்த கட்சியிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் சுவராஜ் அபியான் என்ற கட்சியை தோற்றுவித்து அதன் தலைவராக இருந்து வருகிறார்.

பல்வேறு பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் நடத்தியவர். மேலும், அவருடைய கருத்துகள் மூலம், சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதிலும் வாடிக்கையானவர்.

2020 ஜூன் மாதம், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஒரு உயர்தர மோட்டார் சைக்கிளில் இருப்பது போன்ற படம் மற்றும் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இதுவரை இருந்த நான்கு பேரின் பங்களிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷண் தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.

ஜூன் 29-ஆம் தேதி தமது டிவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரூ. 50 லட்சம் மதிப்பிலான பாஜக தலைவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளுடன் நாக்பூரில் உள்ள ராஜ் பவன் வளாகத்தில் ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுகிறார். அதுவும் உச்ச நீதிமன்றத்தை முடக்கி விட்டு குடிமக்கள் நீதி பெறும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிலையில் என்றவாறு குறிப்பிட்டிருந்தார். இந்த டிவிட்டர் சர்ச்சை தகவல் தொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றம் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என அறிவித்தது.

இது குறித்த மேலும் முழுமையான தகவல்களுக்கு… https://tinyurl.com/yy643fqp என்ற இணைப்பை பார்க்கவும்.

கிருஷ்ணர் பற்றி டிவீட்: மன்னிப்புக் கேட்ட பூஷன்

முன்னதாக, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 2017 ஆம் ஆண்டு, ஈவ் டீசிங்கை தடுக்கும் பொருட்டு சிறப்பு போலீஸ் படையை உருவாக்கி இருந்தார். அதற்கு ரோமியோ எதிர்ப்புப் படை என பெயரிட்டார். இதுகுறித்து ஸ்வராஜ் இந்திய கட்சியின் தலைவரும் பிரபல பொதுநல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன், ரோமியோ ஒரு பெண்ணைத்தான் காதலித்தான். ஆனால் பகவான் கிருஷ்ணன்தான் புகழ்பெற்ற ஈவ்டீசர். யோகி ஆதித்யநாத்துக்கு தையரியமிருந்தால், “கிருஷ்ணா எதிர்ப்பு படை” என பெயர்சூட்டி அழைக்க முடியுமா என்று டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இதனையடுத்து, அவருக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தது. அதனையடுத்து, எதிர்ப்பு அதிகமானதையடுத்து, தனது டுவிட்டர் பதிவை நீக்கியதுடன், மன்னிப்பும் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிய… https://tinyurl.com/yxg8o7z7

என்ன தீர்ப்பு வழங்குகிறார்கள்: பூஷன்

சென்னை ஐஐடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற சாஸ்திரா நிகழ்வில் பங்கேற்ற பிரசாந்த் பூஷன், சில சமயம் நீதிபதிகள் என்ன தீர்ப்பு எழுதுகிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடியவில்லை என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த நிகழ்வில் பேசிய அவர், நீதியரசர்கள் தேர்வுசெய்யப்படும் முறையிலும் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். ‘நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவது முறைசெய்யப்பட வேண்டும், வெளிப்படைத்தன்மை வேண்டும். ஒரு நீதியரசர் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டால், நடைமுறைக்குச் சிக்கலான கண்டனத் தீர்மானம் மட்டுமே கொண்டுவர முடியும். ஆதலால், இதுபோன்ற செயல்களை ஆய்வு செய்வதற்கு என்று தன்னாட்சியான நிறுவனம் ஒன்றை அமைத்தால் பொருத்தமாக இருக்கும்.

தனிநபர் உரிமையும் ஆதார் எண்ணும்:

“ஆதார் எண் என்பது அரசின் திட்டங்கள் மக்களுக்குச் சரியாகச் சென்று சேர்கிறதா, என்பதைச் சரிபார்க்க உதவும் ஒரு கருவி. அதற்கான முக்கியத்துவம் அவ்வளவுதான். தனிமனிதரின் எல்லா அடையாளங்களையும் அரசு சேர்த்துவைப்பது சரியல்ல. அதைப்போலவே, நாம் கொடுக்கும் தகவல்களுக்கு முழுமையான பாதுகாப்பு இருக்கிறதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. தனிமனிதனின் வங்கிக்கணக்கு எண், கைரேகை, கருவிழி அமைப்பு என்று அனைத்து தகவல்களையும் நூறுகோடி மக்களுக்கும் பாதுகாப்பாக சேமித்து வைப்பது சாத்தியமா என்று தெரியவில்லை என்றும் கூறி இருந்தார்.

மேலும் அறிய… https://tinyurl.com/y2wb78qq

பிரசாந்த் பூஷண் பற்றி மேலும் அறிய.. https://tinyurl.com/y5g7xboh, https://tinyurl.com/y4tey92l, https://tinyurl.com/y3sfphg8

தொகுப்பு: மா. இளஞ்செழியன்.

செய்திப்பிரிவு: மக்கள் குரல் இணையதளக் குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *