அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

பிரசவ அறை – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அந்த அரசு மருத்துவமனையில் தினம் தினம் பிறப்பு, இறப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஒரு பக்கம் சந்தோஷத்தின் சிரிப்பொலி. மறுபக்கம் அழுகையின் ஓலம் என்று இரண்டையும் சமமாகச் சுமந்து நிற்கும் அந்த மருத்துவமனை. உள்நோயாளிகள் புற நோயாளிகள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் வந்து போகும் அந்த இடத்தில் ஜோதிக்கு பிரசவறை மட்டும் தான் பிரதானம். அவள் வெள்ளை உடை உடுத்திய தேவதை. கோபம் என்பதை கொழுந்திலேயே கிள்ளி எறிந்து விட்டு அன்பை அடர்த்தியாய் அணிந்திருக்கும் அன்பு மகள். அவள் சிரித்து பேசும் போதே சிலருக்கு நோய்விட்டுப் போகும். பிரசவ வழியில் வரும் பெண்களை அவள் பிரியமாகத் தொட்டு

“ஒன்னு இல்ல. இப்ப சரியாயிடும் இப்ப பாப்பா வந்துரும். பயப்படாதீங்க. எல்லா மனுசங்களும் அப்படித்தானே பிரசவம்ங்கிறது ஒரு பொண்ணுக்கு மறுபிறவிதான். ஆனா அதுதான் ஒரு பெண்ணின் பூரணம் ” என்று அத்தனை ஆறுதல் வார்த்தைகளைச் சொல்வாள் ஜோதி.

அந்தக் கருணைக் குரலில் அத்தனை அடர்த்தியிருக்கும். இதுவரை அவள் பிறக்கும் எத்தனை சிசுக்களைச் சுமந்து இருப்பாள் என்று எண்ணிக்கை இல்லை. ரத்தமும் சதையுமாய் பிசுபிசுத்து வரும் குழந்தையை அவள் இரு கைகளில் ஏந்தி குழந்தைகளைக் கழுவாமலே தன் உதடுகளால் உச்சி மோந்து

” உங்களுக்கு ஆம்பள புள்ள பிறந்திருக்கு .உங்களுக்கு பொம்பள புள்ள பிறந்திருக்கு ” என்று கண்களை அகல விரித்து அது வரை அழுது துடித்த அந்தத் தாயின் கரங்களில் குழந்தையைக் கொடுக்கும் போது ஜோதிக்கு அன்பு ஜோதியாய் மின்னும். அந்தப் பிரசவப் பணி அவளுக்கு அலுப்பு தட்டவே இல்லை. இந்த பூமிக்கு ஒரு உயிரைக் கொண்டுவரும் ஒரு உயிரை முதன் முதலில் தரிசித்து அதைத் தொட்டு தூக்கி தாயிடம் ஒப்படைக்கும் போது இருக்கும் ஒப்பற்ற பணியை இறைவன் தனக்கு இட்டதாகவே நினைப்பாள்.

அன்றும் அந்த மருத்துவமனையில் நிறையப் பெண்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்கள். அந்தக் கர்ப்பிணிகளின் குடும்பம் அவர்களை கவனிக்கிறதோ இல்லையோ ஜோதி அவ்வளவு அக்கறையாக கவனிப்பாள். எப்படி நடக்க வேண்டும் ? எப்படிச் சாப்பிட வேண்டும் ? எப்படிப் படுக்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு எம்பிபிஎஸ் படித்த டாக்டர் போல அவ்வளவு அன்பாய் சொல்லிக் கொடுப்பாள். அன்று பத்து , பதினைந்து பெண்களுக்கு பிரசவ நாள் குறிக்கப்பட்டிருந்தது. அதிகாலை ஐந்து மணியிலிருந்து அவளுக்கு பணி தொடங்கினால் அதிகாலை மூன்று மணிக்கே மருத்துவமனைக்கு வந்து விடுவாள். அந்தக் கர்ப்பிணி பெண்களைத் தெய்வத்தின் சாயலாக பாவித்து வணங்குவாள். உப்பி நிற்கும் பிரசவித்த வயிற்றை கை கூப்பித் தொழுவாள்

“நீங்கள் எல்லாம் கடவுளின் பிரதிநிதிகள். கடவுள் ஒரு மனிதனை உருவாக்குகிறானோ இல்லையோ? உங்கள் வயிற்றில் இறைவன் உருவாகிறான் மாதர்கள் தான் இறைவனின் தாய் ” என்று கர்ப்பிணிப் பெண்களை தொட்டு வணங்குவதில் அவளுக்கு அனாதிப் பிரியம். அதனால் ஜோதிக்கு செவிலித்தாய் என்பதை விட சேவைத்தாய் என்று அந்த மருத்துவமனையில் இன்னொரு பெயர் வைத்திருந்தார்கள். அவள் ஓடி ஆடி அங்கும் இங்கும் அலைந்து திரியும் அழகைப் பார்த்து பிரசவத்திற்கு வந்த குடும்பத்தார்கள் ஜோதியை பிரியமாக தங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்துக் கொள்வார்கள்.

இப்படி ஒரு பொண்ணா? கொஞ்சம் கூட முகத்துல கவலை இல்லை. வெறுப்பு இல்ல. இவங்கெல்லாம் யாரோ அப்படிங்கற நினைப்பு இல்ல. எல்லாத்தையும் தன்னோட குடும்பமா நினைக்கிற இந்தப் பொண்ணோட மனசு எவ்வளவு பெரியது? என்று அந்த மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் அத்தனை குடும்பங்களும் பேசிக்கொள்வார்கள். அவர்கள் குழந்தை பிறந்த பிறகு ஜோதிக்கு ஏதாவது கொடுக்கலாம் என்றால் தவறியும் அதை வாங்க மாட்டாள்

” இது என்ன பழக்கம்? எனக்கு இதெல்லாம் வேண்டாம் .நீங்களே வச்சுக்கங்க” என்று திருப்பிக் கொடுத்து விடுவாள். ஒரு சிலர் உணவு எடுத்துக் கொடுத்தால் அதை சாப்பிட்டுக் கொள்வாள். யாராவது சிலர் புடவை வாங்கி கொடுத்தால், அதை தங்கள் உறவுகள் வாங்கிக் கொடுத்ததாக நினைத்து வாங்கிக் கொள்வாள். மற்றபடி பணம், காசு எல்லாம் அவள் ஏற்றுக் கொள்வதில்லை.

அன்றும் சில பல மணித்துளிகள் கழித்துக் கழித்து அந்தப் பிரசவ அறையில் குவா… குவா சத்தங்கள் கேட்க ஆரம்பித்திருந்தன. மற்ற நர்சுகள் இருந்தாலும் அத்தனை குழந்தைகளையும் தான் ரத்தமும் சதையுமாக தூக்க வேண்டும் என்று அடம் பிடிப்பாள் ஜோதி .அவளின் ஆசைக்கு எந்த நர்சுகளும் குறுக்கே நிற்பதில்லை.

“அம்மா உங்களுக்கு ஆம்பள புள்ள பிறந்து இருக்கு.உங்களுக்கு பொம்பள புள்ள பிறந்திருக்கு ” என்று அவள் சொல்லும் போது அவளின் இரு கண்களும் பிரசிவித்த தாய்க்கும் பிரசவமான பெண்ணின் குடும்பத்திற்கும் இருக்கும் சந்தோசத்தை விட அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்

அன்று ஒரு பிரசவமான குடும்பத்தார்கள் ஜோதிக்குப் புடவை எடுத்துக் கொடுத்தார்கள். அதை மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்ட ஜோதி

“ரொம்ப நன்றி குழந்தையை நல்லா பாத்துக்கோங்க” என்று கலங்கியபடியே சொன்னாள்.

அங்கிருந்த ஒரு பெண்

“ஏம்மா,குழந்தைங்கன்னா இவ்வளவு பாசமா இருக்கியே? உனக்கு எத்தனை குழந்தைங்க ” என்று கேட்டபோது ,அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்து பதில் சொல்ல முடியாமல் கண்ணீர் வடித்தாள் ஜோதி

“ஐயோ எதுவும் தப்பா கேட்டுட்டனா?” என்று அந்தப் பெண் பதற

“இல்ல இல்ல அதெல்லாம் ஒன்னும் இல்லங்க நீங்க சரியாதான் கேட்டு இருக்கீங்க”என்று சொன்னவள்

” அம்மா எனக்கு கல்யாணம் ஆகி பதினஞ்சு வருஷம் ஆச்சு. இன்னும் எனக்கு குழந்தை பாக்கியம் இல்ல. கடவுள் அதைக் கொடுப்பாரா இல்லையான்னு எனக்கு தெரியாது? ஆனா இங்க பிறக்குற அத்தனை குழந்தைகளையும் என்னுடைய குழந்தையா தான் நினைக்கிறேன். எனக்குன்னு தனியா குழந்தை வேணுமா என்ன? உங்க குழந்தைகள நான் எப்ப வேணாலும் வந்து பாக்கலாம் இல்லையா? அதுக்கு நீங்க அனுமதி கொடுப்பீங்களா?” என்று கண்ணீர் மல்க ஜோதி கேட்டாள்.

அப்போது….

அன்று பிரசவமானப் பெண்களுக்குப் பிரசவ வலியை விட , ஜோதியின் மன வலி அவர்களுக்கு அதிகமாக வலித்தது.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *