செய்திகள்

பிப்ரவரி 14-ந் தேதியை பசு அரவணைப்பு தினமாக கொண்டாடுவோம்: மத்திய விலங்குகள் நல வாரியம் அறிவிப்பு

புதுடெல்லி, பிப். 9–

பிப்ரவரி 14-ந்தேதியை பசு அரவணைப்பு தினமாக கொண்டாடுவோம் என மத்திய விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் இப்போது காதலர் தின கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகிறது. பெரு நகரங்களில் இதற்காக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்களில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுபோல காதலர் தினத்தன்று சுற்றுலா தலங்கள், பூங்காக்களில் காதலர்கள் ஜோடி ஜோடியாக சுற்றி திரிவதையும் காணலாம். மேலும் அன்றைய தினத்தில் காதல் ஜோடிகள் பரிசு பொருட்கள் பரிமாறி கொள்வது, காதலை வெளிப்படுத்துவது என சுவாரசியமான சம்பவங்களும் நடைபெறும்.

இப்படி களை கட்டும் காதலர் தினத்திற்கு இந்தியாவில் ஆதரவு தெரிவிப்போரும், எதிர்ப்பு காட்டுவோரும் உள்ளனர். காதலர் தினம் மேற்கத்திய கலாச்சாரம் என்றும் அதனை புறந்தள்ள வேண்டும் என்று ஒரு சாராரும், இல்லவே இல்லை, காவிய காலம் தொட்டு காதல் இருந்து வருகிறது. அதனை வெளிகாட்டும் நாள் தான் காதலர் தினமென்று இன்னொரு சாராரும் கூறி வருகிறார்கள்.

இதனால் இந்தியாவில் காதலர் தினத்தன்று காதல் ஜோடிகளை விரட்டும் சம்பவங்களும், கழுதை, நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுவது உண்டு. இதுபோல சில காதல் ஜோடிகள் பொதுவெளியில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சாலையில் நடந்து செல்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தவும் செய்வார்கள்.

இந்த நிலையில் வருகிற 14-ந் தேதி காதலர் தினத்தன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதற்கு பதில் பசுக்களை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துவோம் என்று மத்திய கால்நடை பராமரிப்பு துறை அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பசு பால் தருவதோடு மட்டுமல்ல அன்னையாகவும் கொண்டாடப்படுகிறது. எனவே தாய் பசுவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வருகிற 14-ந் தேதி பசுக்களை அரவணைத்து அன்பை வெளிப்படுத்துவோம். பசுக்களை அணைப்பதன் மூலம் உணர்ச்சி பெருகி, மகிழ்ச்சி அதிகரிக்கும். எனவே மேற்கத்திய கலாச்சாரத்தை கைவிட்டு நமது பாரம்பரியத்தை பாதுகாப்போம்.

வேதங்களில் பசுக்களின் முக்கியத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த மரபுகளை தொடர்ந்து செய்ய 14-ந் தேதி பசுக்களை அரவணைத்து அன்பை வெளிப்படுத்துவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *