காந்தி நகர், ஜூன் 16–
பிபர்ஜாய் புயலின் கோரத்தாண்டவத்தில் குஜராத் மாநிலத்தின் 940 ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
வடகிழக்கு அரபிக் கடலில் நிலவிய அதி தீவிர புயலான பிபர்ஜாய் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, சௌராஷ்டிரா, கட்ச் மற்றும் பாகிஸ்தான் கடற்கரை, மாண்ட்வி (குஜராத்) மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே ஜக்காவு துறைமுகத்திற்கு அருகில் நேற்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது சுமார் 115 முதல் 125 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வப்போது 140 கிமீ வேகத்தீலும் காற்று வீசியது.
பின்னர் படிப்படியாக வலுவிழந்து தீவிர புயலாக மாறியது. தற்போது, ஜக்காவ் துறைமுகத்திற்கு (குஜராத்) வடக்கே சுமார் 10 கிமீ தொலைவில் மற்றும் நலியாவின் மேற்கு-வடமேற்கில் 30 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடகிழக்கு திசையில் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் அருகே புயலாக வலுவிழக்கும் என்றும் இன்று மாலை தெற்கு ராஜஸ்தான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் 940 கிராமங்கள்
பிபர்ஜாய் புயல் காரணமாக கட்ச், தேவபூமி, துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், ஜூனாகர், மோர்பி மாவட்டத்தில் மழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் 20 செ.மீ கடந்து மழை பதிவாகியிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்ததால் குஜராத் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு முறிந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 940 கிராமங்கள், கடலோர பகுதிகளில் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
குஜராத் புயல் நிவாரண ஆணையர் அலோக் சிங் கூறுகையில், இதுவரை 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சில இடங்களில் மின்கம்பங்கள் விழுந்துள்ளதால் 940 கிராமங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. கரையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளதாகவும், சுமார் 52,000 பேரை தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.