செய்திகள்

பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி விமானத்தை தரையிறக்கிய விமானி: மியான்மரில் பெரிய விபத்து தவிர்ப்பு

மியான்மர், மே. 13–

மியான்மரில் 89 பேர் சென்ற விமானத்தில், திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி விமானத்தை விமானி தரையிறக்கினார். இதில் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் நேற்று நடந்தது.

மியான்மர் ஏர்லைன்சுக்குச் சொந்தமான யுபி-103 விமானம், அந்த நாட்டு சுற்றுலா நகரமான மாண்டலேவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை 9 மணிக்கு (உள்ளூர் நேரம்) தரையிறங்க முயன்றது. அந்த விமானத்தில் 7 பணியாளர்கள் உள்பட 89 பேர் இருந்தனர்.

அப்போது, அந்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரியவில்லை. அதைத் தொடர்ந்து, உடனடியாக பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி அந்த விமானத்தை விமானி தரையிறக்கினார். இதனால், விமானத்தின் முன்பகுதி தரையில் உராய்ந்தவாறு சென்றது. இது விமான நிலையத்தில் நேரில் பார்த்தவர்களை பதற வைத்தது. எனினும், இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மியான்மரில் ஒரு வார கால இடைவெளிக்குள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது இது 2-வது முறையாகும். கடந்த 8ந் தேதி பலமாக வீசிய சூறைக்காற்றில் விமானம் தரையிறங்கியபோது, திடீர் குலுக்கலில் பயணிகள் 17 பேர் காயமடைந்தனர்.

விமானியின் புத்திசாலித்தனம் – சமயோசித புக்தி – மின்னல் வேகத்தில் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது என்று பாராட்டினார் போக்குவரத்துத்துறை அமைச்சர் வின்காந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *