சினிமா செய்திகள்

“பிதா”: 24 மணி நேரத்தில் எடுத்து மறுநாளே திரையிடும் சாதனையில் இயக்குனர் சுகன், சங்கர், ஆதேஷ் பாலா!

ஒரே நாள் ஷூட்டிங் – ‘எடிட்டிங்’ – ரீடிக்கார்டிங்

சென்னை, ஏப்.2–

ஆதேஷ் பாலா, திரைத் தோட்டத்தில் மலர்ந்து கொண்டு வரும் ‘தாடிக்கார’ இளம் நடிகரிடம் இருந்து ஓர் அழைப்பு, இன்ப அதிர்ச்சி;

நாளை( 3ம் தேதி) காலை 9.05 மணிக்கு சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்கும் “பிதா” படத்தின் பூஜை வடபழனி கமலா தியேட்டரில்.

‘‘பூஜை முடிந்த பிறகு 7ஆம் தேதி ஷூட்டிங். அன்று ஒரு நாளில் முழுப் படத்திற்கான அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு( பின்னணி இசை உள்பட), மறுநாள்( 8ம் தேதி) திரையிட இருக்கிறோம்.’’

என்ற அழைப்பிதழை பார்த்ததும், இது என்ன மந்திரத்தில் மாங்காய் காய்க்கிற விஷயம் மாதிரி இருக்கிறதே… நடக்கிற காரியமா என்று சந்தேகத்தோடு அதிர்ச்சி கேள்வியை எழுப்பியபோது,

எண்ணம் -எழுத்து இரண்டையும் தன் கையில் எடுத்திருக்கும் இளைஞர் எஸ் சுகன், சிரித்துக் கொண்டே சொல்கிறார்:

“பகலவனுக்கு அடியில் எல்லாமே சாத்தியம். முயன்றால் முடியாததில்லை.”

ஆதேஷ் பாலா (நகைச்சுவை நடிகர் – அமரர் சிவராமனின் கலைவாரிசு), அனு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தவிர அருள்மணி, நகைச்சுவை சாம்ஸ் உள்பட பலரும் உண்டு.

வசனம்: பாபா கென்னடி, ஒளிப்பதிவு: இளையராஜா, இசை: நரேஷ், படத்தொகுப்பு: ஸ்ரீ வத்சன், லைவ் சவுண்டு ஒளிப்பதிவு :வினோத் ஜாக்சன், படத்தொகுப்பு: தீபக், கலை: கே பி நந்து, தயாரிப்பு நிர்வாகி: பிவி பாஸ்கரன், புகைப்படங்கள்: ரிஷால், ஈஸ்வர், லக்ஷ்மன், தயாரிப்பில் படத்தொகுப்பாளர்: தீபக், டிசைனர்: விவேக் சுந்தர், நிர்வாக தயாரிப்பாளர் சதீஷ்குமார், தயாரிப்பாளர் விச்சூர் எஸ் சங்கர் ஆகிய இளைஞர் பட்டாளத்தை துணைக்கு நிறுத்திக் கொண்டு இந்த சாதனை முயற்சியில் இறங்குகிறார் சுகன்.

ஆரம்பத்தில் பிரபல டான்ஸ் மாஸ்டர் கலாவிடம் ஆறு ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார் சுகன். பின்னர் டான்சில் இருந்து டைரக்ஷன் பக்கம் நுழைந்து இருக்கிறார். உளவுத்துறை, ஜனனம், கலவரம் என்று அடுத்தடுத்து பல ஜனரஞ்சக சித்திரங்களை எடுத்து கடைசியில் 2020– ல் “சுவாதியின் கொலை வழக்கு” வரை பரபரப்பாக இருந்த இயக்குனர் ரமேஷ் செல்வனிடம் உதவி- துணை இணை- இயக்குனர் அந்தஸ்தில் படிப்படியாக அனுபவப் பாடம் படித்து, இன்று தனியாக “பிதா” படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் சுகன்!

‘‘பிதா’’ எழுத்துக்களின் நடுவில் துப்பாக்கித் தோட்டாக்கள் ஊடுருவுவதைப் பார்த்தால் ஆக்ஷன்- சஸ்பென்ஸ்- திரில்லர் என்று யாரும் ஊகிக்கலாம், அது நூற்றுக்கு நூறு சரிதான். ஆக்ஷன் திரில்லர்.

ஒரே லொக்கேஷனில் மட்டும் படப்பிடிப்பு நடத்தவில்லை. அடுத்தடுத்து ஐந்து லொக்கேஷன்கள். அதுவும் நகருக்கு பக்கத்து பக்கத்திலேயே. மொத்தம் ஒன்பது கேமராக்கள் மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும் என்பதற்காக.

முதல் நாள் காலை துவங்கும் படப்பிடிப்பு நள்ளிரவு வரை தொடரும். படத்தில் 80 சதவிகிதம் நைட் எஃபெக்ட்.

“இயக்குனராக வருகிறோம் , ஏதாவது புதுமையாக இருக்க வேண்டும், ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும், யார் இந்த சுகன் என்று படவுலகம் திரும்பி பார்க்க வேண்டும்…” என்ற ஒரே ஒரு சின்ன ஆசை தான் இந்தப் புதுமை முயற்சி’’ என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் சுகன்.

இதுவரை எட்டு குறும்படங்கள இயக்கி இருக்கிறார்.

வித்தியாச சிந்தனைகள் வேர் விடும் இளம் நடிகர் ஆதேஷ் பாலா, புதுமை முயற்சியா… ஓகே என்று உதவிக்கரம் நீட்டி இருக்கும் விச்சூர் எஸ்.சங்கர் மற்றும் இளைஞர் பட்டாளம் என்கூட நடக்கிற போது நிஜத்தில் கனவு- நிழலில் பலிக்கும் என்ற உடும்பு பிடியோடு நடக்கிறார் சுகன்.

வெற்றி வேண்டுமா போட்டு பாருடா எதிர்நீச்சல் பாடல் வரிகளுக்கு கண் முன் ஓர் உதாரணம் சுகன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *