அந்த அரசு மருத்துவமனையில் எத்தனையோ அறைகள் இருந்தன. ஆனால் பிண அறை மட்டும் மருத்துவமனையை விட்டுக் கொஞ்சம் தள்ளியே இருந்தது. அந்த வழியாகச் செல்பவர்கள் அந்த அறையைத் திரும்பிப் பார்ப்பதற்குக் கூடப் பயப்படுவார்கள். அகால மரணம் விபத்து , சந்தேகப்படியான பிணங்களைப் பாதுகாக்கும் இடமாக இருந்தது, அந்தப் பிண அறை.மருத்துவர்கள் போஸ்ட்மார்ட்டம் செய்து அந்தப் பிணங்களை அனுப்பும் முறையைப் பார்த்தால் பயப்படாதவர்கள் கூட நடுநிசியில் திடுக்கிட்டு எழுந்து கொள்வார்கள்.அவ்வளவு பயம் நிறைந்தது, அந்தப் பிண அறை.அந்த அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதெல்லாம் அத்தனையும் பிணங்கள். மண்ணில் புதைக்கப்படாத உடல்கள். பதப்படுத்தப்பட்டு, பெட்டியில் அடைத்து வைக்கப்பட்ட சடலங்கள் என்று பிணங்களின் கருவறையாக இருந்தது,
அந்தப் பிண அறை. பூச்செடிகளைக் காவல் காத்துக் கொண்டிருந்த பழனியப்பன், பிணங்களைக் காவல் காக்கும் காவலாளியாக நியமிக்கப்பட்டான்.
முதலில் பயந்து நடுங்கியவன், இப்போதெல்லாம் பதப்படுத்தப்பட்ட மாமிசத்தைத் தூக்கிக் கொடுப்பது போல பரிசோதனை செய்யப்பட்ட பிணங்களைப் பார்சல் செய்து வேண்டப்பட்டவர்களிடம் கொடுப்பதில் அவனுக்கு எந்த வேதனையும் இப்போது இருப்பதில்லை.
சில நேரங்களில் சில இரவுகளில் பிணங்களாேடு பிணமாகத் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தான், பழனியப்பன். சுற்றிலும் அடுக்கி வைக்கப்பட்ட உயிரற்ற உடல்களுக்கு மத்தியில் அசைவ உணவைக் கூட சாப்பிட்டுக் கொண்டு இருப்பான். எந்தப் பயமும் அவனுக்கு இருந்ததில்லை. யாராவது கேட்டால்,
“இறந்தவர்கள் எல்லாம் சாமிகள். சாமிகள் எதுவும் பேசுவதில்லை . அதுபோல் இந்தப் பிணங்களும் எதுவும் பேசுவதில்லை .அதனால் எனக்கு எந்தப் பயமும் இல்லை. எனக்குத் தெரிந்து, வெளியில் இருக்கும் மனிதர்களை விட, இந்த உயிரற்ற உடல்கள் மேலானவை. பிணங்களுக்குப் பொய் பேசத் தெரியாது .உண்மை மட்டுமே உரைக்கும். அதை விட வாய் திறந்து பேசவே தெரியாது. மௌனமே சாட்சியாக இருக்கும் .எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் எத்தனையோ சம்பாதித்து இருந்தாலும் இந்தச் சவக்கிடங்கில் வந்து விழும்போது, அத்தனை மனிதர்களும் சாந்தமாகி விடுகிறார்கள். இந்த ஊனுடம்பில் உயிர் இருக்கும் போது எத்தனை ஆட்டங்கள். எத்தனை பிரச்சனைகள் .எத்தனை கௌரவம் எத்தனை மமதை ” என்று திமிர் பிடித்து வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள், எல்லாம் இங்கே வந்து குளிரூட்டப்பட்ட பெட்டியில் இருக்கும் போது அடங்கிப் போகிறார்கள். நான் சில சமயம் அவர்களைப் பார்த்துச் சிரிப்பதுண்டு.
” ஏ மனிதா உன் ஆட்டம் அடங்கி விட்டதா? பார்த்தாயா? நீ மரணத்திற்காகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? இந்த பூமி உனக்குச் சொந்தம். இந்த வானம் உனக்கே சொந்தம் என்று அத்தனை பேரையும் அடக்கிக் கொண்டிருந்தாயே ? இப்போது பார் உன் நிலையை? “என்று எனக்கு நானே சிரித்துக் கொள்வேன்” என்று சொல்வான் பழனியப்பன்.
அவன் பேசும் சித்தாந்தத்தைக் கேட்டுச் சிலர் சிரிப்பார்கள். சிலர் வியப்பார்கள். சிலர் சிலாகித்துச் செல்வார்கள். பழனியப்பன் வசிக்கும் தெருவில் இருப்பவர்கள் அவனைப் பார்த்தால் காத தூரம் பயந்து ஓடுவார்கள்.
“என்ன, என்ன பாத்து எல்லாரும் இப்படி பயந்து
ஓடுறீங்க ?. ” என்று கேட்டால்
” நீ பிணத்தோட வாழ்ற மனுஷன். உனக்கு குணம் இருக்குமா என்ன?” என்று கேட்பவர்களிடம்
“நான் தான் உண்மையான மனுசங்க கூட வாழ்ந்துட்டு வர்றேன். நீங்க எல்லாம் நடமாடுற பிணங்களாேட தான் வாழ்ந்துகிட்டு இருக்கீங்க ” என்று நக்கலாகப் பேசி கேள்வி கேட்பவர்களை மூக்குடைப்பான் பழனியப்பன்.
அதனால் பழனியப்பனுடன் நிறையப் பேர் பேசுவதைத் தவிர்ப்பார்கள்.
” ரொம்ப ஏடாகூடம் புடிச்ச ஆளா இருக்கானே , இந்தப் பழனியப்பன்?” என்று அவனைப் பார்த்தால், நெடுந்தூரம் ஓடும் மனிதர்களும் அங்கு நிறைய இருந்தார்கள்.
அன்று அந்த அரசு மருத்துவமனையில் இருந்த பிண அறையில் பெட்டிகள் தவறாமல் பிணங்கள் இருந்தன. ஒரு இரவு, மருத்துவமனையில் இருந்தவர்கள் எல்லாம் வீட்டிற்குச் சென்று விட சன்னமான மின்சார ஒளியில் மிதந்து கொண்டிருந்தது, அந்தப் பிண அறை. வெளிநோயாளிகள் அற்று உள்நோயாளிகளின் சின்னச் சின்ன சத்தம் மட்டும், அவர்கள் தங்கி இருந்த அறைகளிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. பழனியப்பன் பிண அறையில் இருந்து பேசும் சத்தம் மட்டும் அவர்களுக்குக் கேட்டது. அத்தனையும் அடுக்கி வைக்கப்பட்ட பிணங்களுக்கு நடுவே அன்று அசைவ உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தனக்குத்தானே சிரித்தும் கொண்டிருந்தான். ஒவ்வொரு பெட்டியாகத் திறந்து உறங்கிக் கொண்டிருக்கும் உயிரற்ற உயிர்களைப் பார்த்துச் சிரித்தான்.
” நீ அந்தப் பணக்கார வீட்டு ஆளு தானே? நீ அந்த அரசியல்வாதி தானே? பாத்தியா? இப்ப எங்க வந்து கிடக்கிறேன்னு ?”என்று போதையில் உளறி அசைவ உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான், பழனியப்பன்.ஒவ்வொரு பெட்டியைத் திறந்ததும் அதிலிருந்து வந்த ஐஸ் புகை பிண அறையை முழுவதுமாய் நிரப்பி இருந்தது. மெல்ல மெல்லச் சாப்பிட்ட பழனியப்பன், கடைசியாக உயிரற்ற சில உடல்களிடம் பேசிவிட்டு, ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்துக் கையும் கழுவித் தூங்கலாம்” என்று முடிவு செய்தான்.
உள் நோயாளிகள் இருக்கும் அறையில் இருந்தவர்களுக்கு அந்தப் பிண அறை, அன்று இரவு ரொம்பவே பயத்தைத் தந்தது.
“இங்க தான் பிண அறை இருக்குன்னு சொன்னாங்க. அங்க யாரோ பேசுற சத்தமும் கேட்குது ?என்று அந்த உள்நோயாளிகள் அறையில் இருப்பவர்களில் ஒருவர் சொல்ல
” அப்படி எல்லாம் எதுவும் இல்ல. மனப்பிராந்தியா இருக்கும். நீங்க படுங்க ” என்று திறந்திருந்த ஜன்னலை இழுத்து மூடி, ஜன்னல் கர்ட்டனைப் போட்ட போது, ஜன்னலை மூடியவருக்கும் ஒருவிதமான பயம் ஏற்படத்தான் செய்வது.திறந்திருந்த ஜன்னல் கதவை அடைக்கும் போது, அங்கிருந்து ஒரு விதமான சத்தம் ஒலிப்பது போல் இருந்தை அவன் யாரிடமும் சொல்லவில்லை.
மறுநாள் காலை, வழக்கம் போல இயங்கியது . அந்த அரசு மருத்துவமனை. உள்நோயாளிகள், வெளி நோயாளிகளின் வரத்து அன்று அதிகமாக இருந்தது. அன்று பிண அறையின் முன்னால் ஒரு பிணத்தை வாங்குவதற்காக கூட்டம் கூடி இருந்தார்கள்.
“எப்படியும் போஸ்ட்மார்ட்டம் முடியறதுக்கு ரெண்டு மணி நேரம் ஆகும்னு சொல்றாங்க. அதுக்கப்புறம் தான் பிணத்தை நம்மகிட்ட கொடுப்பாங்களாம்” என்று அங்கு இருப்பவர்களில் ஒருவர் சொல்ல
“சரி,வந்தது வந்துட்டோம். இங்கே இருந்து கையோடு பிணத்தை வாங்கிட்டு போயிரலாம்” என்று வந்திருந்த உறவினர்கள்,அருகில் இருந்த டீக்கடையில் டீ ,காபி சாப்பிட்டுவிட்டு அங்கேயே அமர்ந்து கொண்டார்கள்.
சற்று நேரத்திற்கெல்லாம் போஸ்ட்மார்ட்டம் செய்யும் மருத்துவர்கள் வந்து பிணத்தை போஸ்ட்மார்ட்டம் செய்ய ஆரம்பித்தார்கள். அங்கே இருந்த சிலர், இங்கே பழனியப்பன்னு ஒருத்தர் வேலை பாத்துட்டு இருந்தாரே? அவர் எங்க இருக்காரு, ? அவர் இருந்தா, இங்க எல்லா வேலையும் சரியா முடிச்சிடுவாரு ஆளக் காணோமே? என்று ஒருவர் கேட்டபோது,
அங்கிருந்தவர்கள் திருதிருவென விழித்தார்கள் .
“என்ன எதுவும் பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க ? என்று நினைத்தவர்கள் அந்த இடத்தை விட்டு நகர
“பழனியப்பன் வீட்டில இருந்து யாராவது வந்திருக்கிறாங்களா ? என்று புதிதாக வந்த பிண அறைக் காவலாளி கன்னியப்பன் குரல் கொடுக்க,
” பழனியப்பன் குடும்பத்துக்காரங்க அந்தா வந்து நிக்கிறாங்க பாருங்க “என்று ஒருவர் கைகாட்ட,
“வாங்க பழனியப்பன், பாடிய போஸ்ட்மார்ட்டம் பண்ணியாச்சு,பாடிய நீங்க வாங்கிட்டு போகலாம் “என்று கன்னியப்பன் சொன்னபோது
“அடப்பாவிகளா, இத்தனை வருஷமா , எவ்வளவோ பிணங்களைக் காவல் காத்துக்கிட்டிருந்த பழனியப்பன்,இன்னைக்கு பிண அறையில பிணமா இருக்கிறாரா? என்ன ஆச்சரியம் ? என்று ஒருவர் சொன்னபோது
“எத்தனையோ மனிதர்களைப் போஸ்ட்மார்ட்டம் செய்து வெளியே அனுப்பிய பழனியப்பன் ஒரு விபத்தில் மரணமடைய அவரின் உடல், போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்தப் பிண அறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த கன்னியப்பன் பிணங்களைக் காவல் காக்க ஆரம்பித்தான்.
#அறைகள் சொல்லும் கதைகள்
பிண அறை. தானும் ஒரு நாள் அந்த அறையில் இருப்போம் என்று தெரிந்த பழனியப்பன் .சார் உண்மையில் நீங்க ரொம்ப ரொம்ப வித்தியாசமான நபர். வாழ்க வாழ்க வாழ்க வளர்க.
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து.