சிறுகதை

பிடிச்சிருக்கு | ஆவடி ரமேஷ்குமார்

முதலிரவு அறையில் மனைவி நந்தினியின் வரவுக்காக ஆர்வமாக காத்திருந்தான் ஆனந்தன். அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

முதலில் பார்த்த பெண் ஷர்மிளா,

‘மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு’ என்று பெரியவர்கள் மத்தியில் சொல்லிவிட்டு தனியாக ஆனந்தனின் ஆபீஸுக்கு வந்து,” ஸாரி சார், நான் ஒருவரை காதலிக்கிறேன். என்னை என் வீட்டில் காட்டிக் கொடுக்காமல் இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடுங்கள் ப்ளீஸ்!’ என்று வேண்டிக் கொண்டாள். இதயம் இரண்டாக பிளந்ததை காட்டிக் கொள்ளாமல் தரகரிடம் ‘ பொய்’ சொல்லி ஷர்மிளாவின் காதலை வாழ வைத்தான். ஆனந்தன் இரண்டாவதாகப் பார்த்த பெண் தான் நந்தினி. இம் முறை பெரியவர்கள் மத்தியில் ‘ மாப்பிள்ளையை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று சொன்ன நந்தினியை தனியே அழைத்துப்போய் ” நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா” என்று விசாரித்து ‘ இல்லை ‘ என்ற பதிலை வாங்கிய பின் தான் நிம்மதியடைந்தான்.

இதோ கதவு திறக்க….

நந்தினி பால் சொம்பு டம்ளருடன் உள்ளே வருகிறாள்.

வந்தவளை வரவேற்க எழுந்து நின்றான் ஆனந்தன்.

சொம்பை வைத்த நந்தினி சட்டென்று ஆனந்தனின் காலில் விழுந்து,” என்னை மன்னிச்சிடுங்க. நான் ஒருத்தரை காதலிச்ச விஷயத்தை அன்னிக்கு உங்க கிட்ட சொல்லாம மறைச்சிட்டேன்” என்றாள்.

நெஞ்சு பகீரென்றது ஆனந்தனுக்கு.” என்னது மறைச்சிட்டியா…?!”” ஆமாம். என் கூட காலேஜ்ல படிச்ச ஒருத்தனை லவ் பண்ணினேன். அவனை தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தேன்.

இதை எப்படி வீட்ல சொல்லறதுனு நான் தவிச்சிட்டிருந்த போது, ஒரு நாள் ‘லாட்ஜ்ல ரூம் போடட்டுமா’ னு கேட்டான் அந்த ராஸ்கல்.

உடனே நான் உஷாராகிட்டேன்.

அந்த சமயத்துல நீங்க என்னை பெண் கேட்டு வரவே.. உங்களை எனக்கு பிடிச்சுப்போனதால நீங்க கேட்ட போது பொய் சொல்லிட்டேன். அன்னைக்கு உங்ககிட்ட உண்மையை சொல்லியிருந்தா எங்கே நீங்க மனசு மாறி என்னை வேண்டாம்னு சொல்லிடுவீங்களோனு தான் பொய் சொல்லும்படி ஆகிடுச்சு.

இனி நான் உங்களுக்கு உண்மையான மனைவியா இருப்பேன்.

இது சத்தியம். என்னை மன்னிச்சு ஏத்துக்குங்க ப்ளீஸ்!”

சிறிது நேரம் தடுமாறிய ஆனந்தன், ” நானும் ஒரு பொண்ணை காதலிச்சேன்”என்றான்.

” அப்படியா?” என்று ஆச்சரியப்பட்டு பார்த்தவளிடம்,

” அவளைத்தான் இப்ப நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு அவளை ஆசையாக அணைத்துக்கொண்டான்.

அவளும் அவனை இறுக்கமாக அணைத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *