செய்திகள்

பிகாரில் நிதிஷ் குமார் – பாரதீய ஜனதா கூட்டணி உடைகிறது

பாட்னா, ஆக. 8–

பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதீய ஜனதா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சித் தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் தலைமையில் நாளை அவசரமாக கட்சி எம்.பி.க்களுடன் அலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எட்டப்படும் எனத் தெரிகிறது.

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபகாலமாக இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பீகாரில் உச்சநிலையில் இருந்தபோது அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அந்த திட்டத்தை ஆதரித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும் பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் என்ற முறையில் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை.

மோதல்

இதற்கிடையே, ஐக்கிய ஜனதா தளத்தில் நிதிஷ் குமாருக்கும், கட்சியின் முன்னாள் தேசிய தலைவருவு ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஆர்.சி.பி. குமார் சிங்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் வாங்கிய சொத்துக்களில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அது தொடர்பாக பதிலளிக்கும்படியும், கட்சியின் சார்பில் சிங்குக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது. இந்த புகாரை அவர் மறுத்து உள்ளார்.

ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ஆர்.சி.பி.குமார் சிங்கின் பதவிக்காலம் கடந்த ஜூலை 31–ந்தேதியுடன் முடிந்தது. ஆனால், மறுவாய்ப்பு வழங்கவில்லை. இதன் காரணமாக மத்திய அரசில் உருக்கு துறை அமைச்சர் பதவியும் பறிபோனது. இந்நிலையில் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார். நிதிஷ் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் ஒரு மூழ்கும் கப்பல் என்று அவர் கூறினார். இந்நிலையில் பாட்னாவில் நேற்று ஐக்கிய ஜனதாதள தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர மாட்டோம். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மத்திய அமைச்சரவையில் இணைவதில்லை என்று முடிவு செய்தோம். அந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

மத்திய அமைச்சரவையில் சேரக்கூடாது என்ற முடிவை எங்கள் தலைவர் நிதீஷ் குமார் எடுத்தார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து நீங்கள் முதலமைச்சரிடம் கேட்க வேண்டும். பாரதீய ஜனதாவுடன் எங்கள் கட்சியின் உறவு சரியாக உள்ளது.

ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஐக்கிய ஜனதாதளம் ஆதரவளித்தது. கூட்டணி தொடர்பான எங்களின் உறுதிப்பாட்டை இதைவிட வலுவாக நிரூபிக்க முடியாது என்றார்.

இந்நிலையில் தான் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிதிஷ் குமார் தலைமையில் நாளை அவசரமாக கட்சி எம்.பி.க்களுடன் அலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எட்டப்படும் எனத் தெரிகிறது.

இதற்கிடையில், பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியை உடைக்க பாரதீய ஜனதா திட்டமிடுவதாக நிதிஷ் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனால் ஜக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் தேஜஸ்வினி யாதவுடன் கைகோத்து ஆட்சி அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.