உத்தரபிரதேசம், ஏப். 27–
பிகாரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 95 குழந்தைகளை உத்தரபிரதேச மாநில குழந்தைகள் ஆணையம் பத்திரமாக மீட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிகார் மாநிலம் ஆராரியா பகுதியிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 2 அடுக்குகள் கொண்ட பேருந்து ஒற்றில் 95க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தி செல்லப்படுவதாக குழந்தைகள் நல ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உத்தர பிரதேச குழந்தைகள் நலவாரியத்தின் தலைவர் பகிர்ந்த தகவலின் அடிப்படையில் குழந்தைகள் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அயோத்தி குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் சர்வேஷ் அவஸ்தி கூறுகையில், உத்திரபிரதேச குழந்தைகள் ஆணைய உறுப்பினர் சுசித்ரா சதுர்வேதி பிகாரில் இருந்து சஹரன்பூருக்கு சட்டவிரோதமாக குழந்தைகள் கடத்தப்பட்டு வருவதாகவும், அவர்கள் கோரக்பூரில் இருப்பதாகவும், அயோத்தி வழியாகச் செல்வதாக தகவல் தெரிவித்தார். உடனே நாங்கள் காவல்துறை உதவியை நாடினோம்.
இதையடுத்து கோரக்பூரில் அயோத்தி செல்லும் வழியில் தேவ்காலி புறவழிச் சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்த குழந்தைகள் ஆணையம் குழுவினர் மற்றும் போலீசார் காலை 9 மணியளவில் குழந்தைகளை ஏற்றி வந்த பேருந்தை நிறுத்தி குழந்தைகளை மீட்டனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது மற்றும் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக ஒப்படைக்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குழந்தைகள் 4–12 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பது கூட தெரியவில்லை.
குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் எதுவும் இல்லை. பெற்றோர்களை தொடர்பு கொண்டு குழந்தைகள் ஒப்படைக்கப்படுவார்கள் என்று சர்வேஷ் அவஸ்தி கூறினார்.
பெற்றோரின் ஒப்புதலின்றி குழந்தைகள் எதற்காக பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குழந்தைகளை கடத்தி சென்று பணத்திற்கு விற்பனை செய்ய முயற்சி நடந்ததாக, கூறப்படுகிறது. தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக ஒப்படைக்க நடந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டுள்ளது.