மும்பை, ஜூன் 25–
பிரதமரின் பிஎம் கேர்ஸ்க்கு வரும் நிதி, செலவளிக்கப்படும் விதத்தை விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைவதற்கு முக்கிய காரணமானவராக இருந்த பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸும், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயும் அண்மை காலமாக கடுமையான முறையில் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி அருகில் உத்தவ் தாக்கரே அமர்ந்திருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், `குடும்பத்தை காப்பாற்றுவதற்கான கூட்டம்’ என்று விமர்சனம் செய்திருந்தார். அதோடு மெஹ்பூபா முப்தி அருகில் உத்தவ் தாக்கரே அமர்ந்து இருந்ததையும் விமர்சனம் செய்திருந்தார்.
வாட்ஸ்அப் சாட்டிங்
இதற்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, `உங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. உங்களது வாட்ஸ்அப் சாட்டிங் விபரம் வெளியில் வந்துள்ளது. நாங்கள் அதைப்பற்றி பேசவில்லை என்றும், காஷ்மீரில் மெஹ்பூபாவுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து ஆட்சி செய்ததையும் உத்தவ் தாக்கரே சுட்டிக்காட்டியுள்ளார்.
அதோடு மும்பை மாநகராட்சியில் கொரோனா காலத்தில் சிகிச்சைக்காக பொருள்களை வாங்க ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைத்திருப்பதையும், அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்துவதையும் உத்தவ் தாக்கரே விமர்சித்தார். மும்பை மட்டுமல்லாமல் தானே, புனே, நாக்பூர் மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் ‘பிஎம்கேர்’ நிதிக்கு வரும் கோடிக்கணக்கான ரூபாய் எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்று உத்தவ் தாக்கரே குறிப்பிட்டு உள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டக்காரர் அனில் ஜெய்சிங்கானியின் மகளுடன், துணை முதல்வர் பட்னாவிஸ் மனைவி அம்ருதா வாட்ஸ்ஆப் மூலம் சாட்டிங் செய்ததைதான் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டு உள்ளார்.