செய்திகள்

பா.ம.க. வேட்பாளர் பட்டியலில் மாற்றம் தர்மபுரியில் சவுமியா அன்புமணி போட்டி

Makkal Kural Official

கடலூரில் தங்கர்பச்சான் களம் இறங்குகிறார்

சென்னை, மார்ச்.23-

நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் தர்மபுரியில் சவுமியா அன்புமணியும், கடலூர் தொகுதியில் இயக்குனர் தங்கர்பச்சானும் போட்டியிடுகிறார்கள்.

கூட்டணி பேச்சுவார்த்தை

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லாததால் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்தது.

அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. குறிப்பாக பா.ம.க.வை தங்களது கூட்டணியில் இணைக்க அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் தீவிர முயற்சி மேற்கொண்டன.

பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள்

இந்த போட்டியில் பா.ஜனதா வெற்றிபெற்றது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இணைந்தது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், பா.ம.க.வுக்கு, காஞ்சீபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

பா.ம.க. பலமாக உள்ள வடமாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளை பெற்றது. அதேநேரம் தென் மாவட்டத்தில் திண்டுக்கல் தொகுதியும், டெல்டா மாவட்டத்தில் மயிலாடுதுறையும் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டன.

வேட்பாளர் அறிவிப்பு

இந்த நிலையில், பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்த கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிவித்தார்.

அதன்விவரம் வருமாறு:-

தர்மபுரி – சவுமியா அன்புமணி (பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசின் மனைவி)

காஞ்சீபுரம் (தனி) – ஜோதி வெங்கடேசன்

திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா

அரக்கோணம் – வக்கீல் கே.பாலு

ஆரணி – அ.கணேஷ்குமார்

கடலூர் – தங்கர் பச்சான்

மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி – இரா.தேவதாஸ் உடையார்

சேலம் – ந.அண்ணாதுரை

விழுப்புரம் (தனி) – முரளி சங்கர்

இயற்கை ஆர்வலர்

தர்மபுரியில் போட்டியிடும் சவுமியா அன்புமணி சமூகவியல் துறையில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார். அமெரிக்காவில் போஸ்டன் ஹாவர்ட் பல்கலைக்கழகம், கென்னடி ஸ்கூல் ஆப் கவர்மென்ட் ஸ்டடிசின் முன்னாள் மாணவி. சமூக அக்கறை கொண்டவர். பசுமை தாயகம்-சுற்றுச்சூழல் தமிழ் மாத இதழ் ஆசிரியராகவும், பசுமை தாயகம் தொண்டு நிறுவனத்தின் தலைவராகவும், மக்கள் தொலைக்காட்சியின் ஆலோசகராகவும் இருக்கிறார். முதல் முறையாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.

திலகபாமா

* திண்டுக்கல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ம.திலகபாமா பி.காம். பட்டதாரி. எழுத்தாளரும் கூட. பல்வேறு நாவல்கள், கவிதை தொகுப்புகளை எழுதி உள்ளார். தற்போது, பா.ம.க. பொருளாளராக உள்ளார்.

* அரக்கோணம் தொகுதி வேட்பாளர் வக்கீல் பாலு, சட்டப்படிப்பை முடித்துள்ளார். வக்கீல்கள் சமூகநீதி பேரவையின் தலைவராகவும் உள்ளார். கட்சியின் செய்தித்தொடர்பாளராகவும் உள்ளார்.

* ஆரணி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். கட்சியின் மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.

இயக்குனர் தங்கர் பச்சான்

* கடலூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இயக்குனர் தங்கர் பச்சான், சினிமாத்துறையில் ஒளிப்பதிவாளராக அடிஎடுத்து வைத்து, பின்னர் ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

* மயிலாடுதுறை வேட்பாளர் ம.க.ஸ்டாலின் பி.எஸ்சி. பட்டதாரி. தஞ்சாவூர் பா.ம.க. மாவட்ட செயலாளராக உள்ளார்.

* கள்ளக்குறிச்சி வேட்பாளர் தேவதாஸ் உடையார் சட்டப்படிப்பை பயின்றுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். பா.ம.க.வின் மாநில துணைத் தலைவராக உள்ளார்.

* சேலம் வேட்பாளர் அண்ணாதுரை சட்டப்படிப்பை பயின்றுள்ளார். இவர், பா.ம.க.வின் சேலம் தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் ஆவார்.

* விழுப்புரம் வேட்பாளர் முரளி சங்கர் பி.காம். பட்டதாரி. பா.ம.க.வின் மாணவர் அணி மாநில செயலாளராக பதவி வகிக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *