திண்டிவனம், நவ. 6
பா.ம.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்ய வலியுறுத்தி திண்டிவனம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ம.க.வினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் புவனகிரி மஞ்ச கொல்லை கிராமத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை வழிமறித்து குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சார்ந்தவர்கள் குடி போதையில் அந்த வாலிபரை கடுமையாக அடித்தும், காலால் முகத்தில் உதைத்தும் அராஜகம் செய்தாக கூறப்படுகிறது.அந்த வாலிபர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க.வினர் சாலை மறியல் செய்தனர். இந்த நிலையில் வன்னியர் சமூக மக்களிடம் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்க அப்பகுதிக்கு சென்று வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி சமாதானம் செய்துள்ளார். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர்.தா. அருள்மொழியை கழுத்தை அறுத்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அது காணொளியாக முகநூலில் வலம் வந்தது.
இந்த நிலையில் வன்னியர் சங்க தலைவர் மீது கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என திண்டிவனம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட 200-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் வந்தனர்.
அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் போராட்டம் செய்யவிடாமல் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளை போலீசார் தடுத்ததால் அப்பகுதியில் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.