செய்திகள்

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை: ஜெயக்குமார் பேட்டி

சென்னை, செப்.19-

‘‘அண்ணா தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சனாதனம் குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, சென்னையில் தமிழக பா.ஜ.க. சார்பில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணா குறித்து சில சர்ச்சையான கருத்துகளை குறிப்பிட்டார்.

அண்ணாமலையின் இந்த கருத்து, அ.தி.மு.க.வில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலைக்கு கடும் கண்டனங்களும் வெளிப்பட்டன. இதற்கிடையில் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அண்ணாமலை, ‘அண்ணாவுக்கு ஆதரவாக பேசுபவர்கள், அவரது வழிப்படி நடக்கலையே… நான் கூறியதை கருத்தாக மட்டுமே பார்க்கவேண்டும். அண்ணா குறித்து தவறாக பேசவில்லை. அதேவேளை சரித்திரத்தை மறைத்து பேசவேண்டிய அவசியம் எனக்கில்லை. நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. தனிக்கட்சி. சனாதனம் எங்களது உயிர் மூச்சு. பெரியார் அடிவாங்கியது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பற்றியும் இன்னும் பல விஷயங்களை நான் சொல்லமுடியும்’ என்று கூறி மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தினார்.

இதற்கிடையில் அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருந்தவில்லையே

ஏற்கனவே தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வதற்காக ஜெயலலிதா குறித்து விமர்சித்து அண்ணா தி.மு.க.வினரின் கடுமையான கண்டனத்துக்கு அண்ணாமலை ஆளானார். பின்னர் ஜெயலலிதாவை மதிக்கிறேன் என்றெல்லாம் கூறி, அண்ணாமலை மன்னிப்பு கேட்டார். இதற்கிடையில் நாங்கள் தெய்வமாக வணங்கக்கூடிய அண்ணாவை சிறுமைப்படுத்தி அண்ணாமலை பேசியுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையிலும், கொஞ்சம் கூட திருந்தாமல் ‘பெரியார் அடி வாங்கியதை சொல்வேன், எடப்பாடி பழனிசாமி பதவி வாங்கியதை பற்றி சொல்வேன்’ என்று கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை மீண்டும் பேசியிருக்கிறார். இந்த கருத்தை தன்மானமுள்ள அண்ணா தி.மு.க. தொண்டன் ஏற்றுக்கொள்ளவே மாட்டான். ‘சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால், அது திமிர் பிடித்து ஆடும். வீட்டில் உள்ள பண்டம் பாத்திரத்தை கொட்டும்’ அதுபோல அண்ணாமலைக்கு தகுதிக்கு மீறிய பதவி தான் உள்ளது.

தனித்து போட்டியிட முடியுமா?

அண்ணா தி.மு.க. இல்லாமல், அண்ணாமலை தனித்து தேர்தலை சந்தித்தால் நோட்டாவுக்கு கீழ் தான் ஓட்டு வாங்குவார். இப்படிப்பட்ட செல்வாக்கு கொண்ட அண்ணாமலைக்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வதற்கு கூட்டணி கட்சியை விமர்சிப்பதா? பலமுறை எச்சரிக்கை விடுத்துவிட்டோம். இனிமேல் அண்ணா தி.மு.க.வினர் விடமாட்டார்கள்.

அண்ணாமலையை சமூக வலைதளங்களில் தாறுமாறாக விமர்சனம் செய்வார்கள். ஒரு கருத்து சொன்னா, ஓராயிரம் கருத்து இனி பதிலடியாக வரும்.

உங்களை சுமக்க வேண்டுமா?

அண்ணாமலையை திருத்துங்க… என்று மேலிடத்திலும் சொல்லியாச்சு. பா.ஜ.க. தேசிய தலைமையிடம் சொல்லியும் கூட அண்ணாமலை அடங்க மறுக்கிறார் என்றால், அப்போது மேலிடம் சொல்லித்தானே எல்லாமே நடக்கிறது என்று அர்த்தம். இதனால் அண்ணா தி.மு.க.வுக்கு இழப்பில்லை. அவர்களுக்கு தான் இழப்பு.

அண்ணா தி.மு.க.வுடன் இணைந்திருக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் விரும்புகிறார்கள். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. எங்கள் தலைமையிலான கூட்டணியில் இருந்துகொண்டு இப்படி விமர்சிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அப்படி பா.ஜ.க.வை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கென்ன இருக்கிறது? யார் மீதாவது நிற்கத்தான் முடியுமே தவிர அண்ணாமலைக்கு காலே கிடையாது. பா.ஜ.க.வும் இங்கு காலூன்றவும் முடியாது. பா.ஜ.க.வின் ஓட்டு வங்கி எப்படி என்பது எங்களுக்கும் தெரியும். எங்களை வைத்து தான் பா.ஜ.க. வுக்கு அடையாளமே இருக்கிறது.

இனியும் நாங்கள் பொறுத்துப்போவதாக இல்லை. எனவே இப்போது சொல்கிறேன், கூட்டணியை பொறுத்தவரையில் அண்ணா தி.மு.க.வுடன் பா.ஜ.க. இல்லை. தேர்தல் வரும்போது தான் முடிவு செய்யமுடியும். இதுதான் எங்கள் நிலைப்பாடு. இனியும் அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சனம் செய்தால், அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும்.

பா.ஜ.க. வேஸ்ட் லக்கேஜ்

நான் எப்போதுமே எனது தனிப்பட்ட கருத்தை பொதுவெளியில் பேசியது கிடையாது. கட்சியின் கருத்தை தான் பேசுவேன். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை. இது தான் கட்சியின் முடிவு. தகுதி இல்லாத தலைவராக அண்ணாமலை இருக்கிறார். பா.ஜ.க. எங்களுக்கு ஓவர் லக்கேஜ் அல்ல, வேஸ்ட் லக்கேஜ். நாங்கள் இல்லாமல் ஆட்சியை பிடித்துவிட முடியுமா? பா.ஜ.க. முதலில் நோட்டாவை ஜெயிக்க முடியுமா? என்று பார்க்கட்டும்.

இப்படியே போனால் தனிமரமாகத்தான் நிற்பார் அண்ணாமலை. அண்ணாமலை தனியாக ஒரு தொகுதியில் போட்டியிட முடியுமா? எங்கள் கூட்டணியில் இருந்துகொண்டு எங்களையே விமர்சிக்கும் அண்ணாமலை இன்னும் எங்கள் தோழமையுடன் நீடிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அண்ணாமலையை மாற்றுவதும், வைத்திருப்பதும் அவர்களது கட்சி விவகாரம். ஏற்கனவே ஜெயலலிதா குறித்து விமர்சிக்கும்போது கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்வோம் என்று சொன்னோம். இப்போது மறுபரிசீலனை செய்துவிட்டோம். கூட்டணி கிடையாது.

இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *