செய்திகள்

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை அனைவரிடமும் திட்டவட்டமாக சொல்லுங்கள்

மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்

சென்னை, நவ.22-

பாரதீய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று அனைவரிடமும் சொல்லுங்கள் என அண்ணா தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், பி.தங்கமணி, சி.வி.சண்முகம், டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாலை 5 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 6.15 மணிக்கு நிறைவு பெற்றது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி, பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துவது தொடர்பான களப்பணிகள் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.

அண்ணா தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 87 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த மாவட்டங்களில் பூத் கமிட்டிகள் முறையாக அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் தலா 19 உறுப்பினர்கள் வீதம் அமைக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே கடந்த 5ந் தேதிக்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிக்க கட்சியின் தலைமை அறிவுறுத்தியது. ஆனால் மாவட்ட செயலாளர்கள் அவகாசம் கேட்ட நிலையில், 20ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இருப்பினும், சில மாவட்டங்களில் அதற்கான பணிகள் நிறைவு பெறாமல் இருப்பதாக எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை அடுத்த மாதம் (டிசம்பர்) 3ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், பாரதீய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்ற விஷயத்தை எல்லோரிடமும் சொல்லுங்கள் என்றும் மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார்.

மேலும் சிறுபான்மையின மக்களை சந்தித்து, அவர்களுடைய அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளுங்கள் என்றும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள் என்றும், பூத் கமிட்டியிலும் அவர்களுக்கு உரிய பிரிதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தொய்வில்லாமல் பணியாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *