தூத்துக்குடி, மார்ச்.27-
“பாரதீய ஜனதாவுடன் கள்ளக்கூட்டணி வைத்திருப்பது தி.மு.க.தான்” என்று தூத்துக்குடி பிரச்சார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணா தி.மு.க. வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் நேற்று மாலையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அண்ணா தி.மு.க., தே.மு.தி.க. இணைந்து பலமான கூட்டணி அமைத்துள்ளோம். ஆனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் எப்போதோ தி.மு.க.விலே ஐக்கியமாகி விட்டன. அந்த கட்சிகள் 5 ஆண்டுகளாக மக்கள் பிரச்சினை குறித்து பேசவில்லை. அதனால் தி.மு.க. மட்டுமே தனித்து போட்டியிடுவது போன்றுள்ளது.
தி.மு.க. கூட்டணி கட்சிகள் தி.மு.க.வில் ஐக்கியமாகி விட்டதால், அ.தி.மு.க. கூட்டணி மட்டுமே தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலை சமாளிக்க முடியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுமாறி விட்டார். கடந்த டிசம்பர் 17, 18-ந்தேதிகளில் பெய்த கனமழையில் தூத்துக்குடி மாநகர், மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்தது. அதைப் பார்க்க மு.க.ஸ்டாலின் வரவில்லை. 18ந்தேதி டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று விட்டார். அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் மட்டுமே முக்கியம். ஆனால், அண்ணா தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்களுக்கு சேவை செய்யும் முதல் கட்சியாக உள்ளது. 18ந்தேதியே வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதை அறிந்ததும் அன்றைய தினமே தூத்துக்குடிக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினேன்.
அண்ணா தி.மு.க. ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூத்துக்குடி மாநகருக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கினோம். பக்கிள் ஓடையில் 80 சதவீத சீரமைப்பு பணிகளை முடித்தோம். அதன்பிறகு வந்த விடியா தி.மு.க. அரசு 2 ஆண்டுகளாக கமிஷன் கேட்டு அந்த பணிகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டனர். சீரமைப்பு பணிகளை முறையாக முடித்து இருந்தால் பக்கிள் ஓடையில் வெள்ளம் வடிந்து இருக்கும். அவ்வாறு செய்யாததால்தான் தூத்துக்குடி மாநகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? என்பதை மக்கள் உணர வேண்டும்.
நாம் நிறுத்தி இருக்கும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி தனது கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 200 பேரை 3 நாட்கள் தங்க வைத்து உணவு வழங்கியவர்.
அண்ணா தி.மு.க. கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இது அவருக்குதான் பழக்கதோஷம். தி.மு.க.தான் பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளது. (அப்போது பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெருங்கியிருந்து பேசும் புகைப்படங்களைக் காண்பித்தார்)
அண்ணா தி.மு.க. மறைமுகமாக யாருக்கும் ஆதரவு தரமாட்டோம். உங்களைப் போல் பதவி வெறி பிடித்த கட்சி அண்ணா தி.மு.க. அல்ல. எங்களுக்கு மக்கள்தான் பெரிது, பதவி பெரிதல்ல.
எங்களை வெற்றி பெற செய்தால் தமிழக மக்களை பாதுகாப்போம், தமிழகத்துக்கு தேவையான நிதியை பெற்று தருவோம், சிறுபான்மை மக்களை பாதுகாப்போம், சுதந்திரமாக செயல்படுவோம்.
அண்ணா தி.மு.க மட்டுமே கொள்கையுடைய கட்சி. காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி அமைத்து இருப்பதுதான் இரட்டை வேடம்.
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வந்தபோது மு.க.ஸ்டாலின் கருப்பு பலூன் பறக்கவிட்டார். ‘கோபேக் மோடி’ என்று கூறினார். ஆளுங்கட்சியான பிறகு ‘வெல்கம் மோடி’ என்கிறார்.
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் விற்காத இடமே இல்லை. சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி நிர்வாகி ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு 3 ஆண்டுகளாக போதைப்பொருட்கள் கடத்தி வந்துள்ளார். அவர், முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் நெருங்கி பழகியுள்ளார். (அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் ஜாபர் சாதிக் இருந்த புகைப்படங்களை காண்பித்தார்.)
போதைப்பொருட்கள் கடத்தல் மன்னனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் என்ன தொடர்பு?, தி.மு.க. நிர்வாகிகள் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த தேர்தலில் தி.மு.க.வின் முகத்திரை கிழிக்கப்படும். அண்ணா தி.மு.க. மிகப்பெரும் வெற்றி பெறும்
தேர்தல் பத்திரம் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.650 கோடி தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளது. ஆனால் மு.க.ஸ்டாலின் தேர்தல் பத்திரம் மூலம் மற்ற கட்சிகள் கொள்ளையடித்ததாக பேசுகிறார். தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க.வுக்கு இவ்வளவு பணம் வந்தது என்றால் ஊழல் பணம் மூலம் எவ்வளவு வந்திருக்கும்.
வருகிற 2026-ம் ஆண்டு மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி மலரும். அப்போது இதற்கெல்லாம் விடிவுகாலம் பிறக்கும். அண்ணா தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி மாநகரில் ரூ.250 கோடியில் 4-வது குடிநீர் திட்டம் செயல்படுத்தி நானே திறந்து வைத்தேன். ரூ.99 கோடியில் கோவில்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தையும் திறந்து வைத்தேன். தாமிரபரணி–வைப்பாறு இணைப்பு திட்டத்துக்கு நிலம் எடுக்கும் பணியை தொடங்கினோம். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தி கொடுத்தோம். குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு 2255 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தோம். அதனால் இங்கு இந்தியாவில் 2-வது பெரிய ராக்கெட் ஏவுதளம் தொடங்கப்படுகிறது.
வஉ.சி., ஓமந்தூரார் உருவப்படங்களையும் சட்டசபையில் திறந்து வைத்தோம். தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தேன். திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டி திறந்து வைத்து, அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டேன்.
குரூஸ் பர்னாந்து பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தேன். வெள்ளையத்தேவன், வீரன் சுந்தரலிங்கம் ஆகியோருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைத்தோம்.
எனவே தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச்செய்யுங்கள். அண்ணா தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் ஆதரவு தாருங்கள். நமது வேட்பாளர் மூலம் உங்களது குரல் தூத்துக்குடி மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம், தமிழர் உரிமையை மீட்போம். தமிழ்நாட்டை காப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் பி.வி.கதிரவன் பேசினார். முன்னதாக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.த.செல்லப்பாண்டியன், மாபா பாண்டியராஜன், அமைப்பு செயலாளர் சின்னதுரை, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் அடைக்கலாபுரம் ஆனந்தராஜ், வர்த்தக அணி துணை செயலாளர் டி.நகர் மாரியப்பன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சுரேஷ், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் முருகேஷ் பாண்டியன், புதிய தமிழகம் கட்சி எஸ்.ஆர்.ரமேஷ், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அஷ்ரப் பைஜூ, பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மாரியப்பன், இந்திய குடியரசு கட்சி சிவலிங்கம் உள்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வடக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.
––––––
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து வி.வி.டி. சிக்னல் அருகே நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது எடுத்த படம்.