நடிகை கவுதமி கடும் தாக்கு
சென்னை, ஏப்.5-
பா.ஜ.க.வில் போட்டியிட ஆள் இல்லாததால் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழிசை போட்டியிடுவதாக நடிகை கவுதமி தெரிவித்தார்.
தென் சென்னை தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தனை ஆதரித்து அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர் நடிகை கவுதமி, சென்னை ராஜா அண்ணாமலைபுரம், காமராஜர் சாலையில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் கச்சத்தீவு என்ற வார்த்தை தேசம் எங்கும் சென்று கொண்டிருக்கிறது. கச்சத்தீவை மீட்டு தமிழ்நாட்டின் கவுரவத்தையும், மீனவர்கள் நலனையும் பாதுகாப்போம் என்ற உறுதியை ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக சொல்லாமல், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நம்முடைய காதில் அந்த வார்த்தை விழுகிறது.
உண்மையான அக்கறை இருந்திருந்தால், 2014ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
கச்சத்தீவு பிரச்சினைக்கு மறைந்த ஜெயலலிதா பலமுறை குரல் எழுப்பி, சுப்ரீம் கோர்ட் வரை கொண்டு சென்றார். இந்த நேரத்தில் கச்சத்தீவு பிரச்சினையை எழுப்புவது சந்தர்ப்பவாத நடவடிக்கையாகத்தான் பார்க்க முடிகிறது.
குழந்தைகளின் எதிர்காலத்துக்காகத்தான் நாம் கஷ்டப்படுகிறோம். ஆனால் இப்போது போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகளவில் தமிழ்நாட்டில் இருக்கிறது. இதற்கான பொறுப்பு யாரிடம் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆளும் தி.மு.க.வின் மூத்த பொறுப்பாளரின் செயல் என்பது அனைவருக்கும் தெரியும். இதை வாக்காளர்களாகிய நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
கடந்த முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியனை பற்றி சொல்ல தேவையில்லை. கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர். வெள்ளம் சூழந்த நேரம் உள்ளிட்ட பல கஷ்டமான நேரங்களில் கூட அவர் தொகுதிக்கு வரவில்லை. அப்படிப்பட்ட நபர் உங்களுக்கு தேவையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், டாக்டர் ஜெயவர்தனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும்.
பா.ஜ.க. தமிழ்நாட்டில் பலமாக உள்ளது என்று அதன் தலைமை பேசியது. ஆனால் தேர்தலில் அவர்கள் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்துவதற்குகூட ஆள் இல்லாமல், கவர்னராக இருந்த ஒரு மூத்த தலைவரை (தமிழிசை சவுந்தரராஜன்) ராஜினாமா செய்ய வைத்து, போட்டியிட வைத்திருக்கிறார்கள்.
மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வின் அமைப்பு பலமானதாக இல்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.