வயநாடு, மார்ச் 22–
காங்கிரஸ் கட்சி மக்களின் கோரிக்கைகளில் இருந்து திட்டங்களை வகுத்த நிலையில், பாரதீய ஜனதா கட்சி அதிகார வர்க்கத்தின் கோரிக்கைகளை திட்டங்களாக நிறைவேற்றுகிறது என்று ராகுல்காந்தி ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கல்பேட்டாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மத்தியில் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதிலளித்து கூறியதாவது:–
பாஜக அரசில் பல திட்டங்கள் மையப்படுத்தப்பட்ட முறையில் செயல்படுத்தப்படுகிறது. அதனால் அவை வலுவில்லாமல் போய் விடுகின்றன. ஏனென்றால், அந்த திட்டங்களை வடிவமைப்பதிலும், சிந்திப்பதிலும் பஞ்சாயத்துகளின் பங்களிப்பு இல்லை. மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைப் பாருங்கள். பாஜகவின் திட்டங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள்.
வேறுபாடு புரிகிறதா?
அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும், மக்களிடமிருந்தும், பஞ்சாயத்துகளிலிருந்தும் உருவானவை என்பது வெளிப்படையாக தெரியும். ஆனால் பாஜகவின் அனைத்து திட்டங்களும் அதிகாரவர்க்கத்தில் இருந்து கோரிக்கையாக வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டவை.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் இந்திய மக்களிடமிருந்து வந்தது. மக்கள் வேலை கேட்டனர். அரசு பதில் அளித்தது. இந்த திட்டம் பல பங்குதாரர்களுடன் உருவாக்க பல ஆண்டுகள் ஆனது. இது இந்திய மக்களின் ஞானத்தில் இருந்து வந்ததாகும். இந்த திட்டத்தை பிரதமர் மோடி கேலி செய்தார். ஆனால் கொரோனா காலத்தில், அவர் இந்த திட்டத்தை விரிவுபடுத்தினார் என்பதை மறக்கலாகாது.
அதேவேளை, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தார். இது அவரது மனதில் இருந்து, முதலாளிகளின் கோரிக்கைகளுக்காக வந்தது. அவர் நாட்டு மக்களுடன் ஆலோசிக்கவில்லை. அவர் வங்கி அமைப்பினரைக்கூட கலந்து ஆலோசிக்க வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.