செய்திகள்

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் குழாய் மூலம் கியாஸ் வினியோகம்: அண்ணாமலை

Makkal Kural Official

சென்னை, மார்ச் 26–

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் குழாய் மூலம் கியாஸ் விநியோகம் செய்யப்படும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்று பேசியதாவது:–

கொங்கு மண்டல விவசாயிகள் மற்றும் தொழில்துறையினரின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வட அமெரிக்காவில் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி வரியை நீக்கியதன் மூலம் குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசியலில் நான் விடுமுறை எடுத்ததே இல்லை, என் அம்மாவை பார்த்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. தொகுதிக்குத் தேவையானதை டெல்லியில் சண்டையிட்டு பெற்றுத் தருவேன்.

இப்போது மாற்றம் இல்லையென்றால், எப்போதும் இல்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 400 எம்.பி.க்களை பெற வேண்டும். 400 எம்.பி.க்களை பெற்றால் நதிநீர் இணைப்பை செயல்படுத்தலாம். அரசியல் கட்சிகளுடன் சண்டை போடுவதற்காக போட்டியிடவில்லை. மாற்றத்திற்காக நான் போட்டியிடுகிறேன். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் குழாய் மூலம் கியாஸ் விநியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

சூறாவளி பிரச்சாரம்

தமிழக பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டாலும், தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அவருடைய பிரச்சார பயண விவரம் வருமாறு:-

29ந்தேதி – ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, 30ந்தேதி – சிதம்பரம், நாகை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, 31ந்தேதி – கரூரில் பிரசாரம் செய்கிறார். மேலும் 31ந்தேதி முதல் ஏப்ரல் 3ந்தேதி வரையில் தான் போட்டியிடும் கோவை தொகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபடுகிறார். 4ந்தேதி – கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், 5ந்தேதி – ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

6ந்தேதி முதல் 8ந்தேதி வரையில் மீண்டும் கோவையில் வாக்கு சேகரிக்கிறார். 9ந்தேதி – கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, 10ந்தேதி நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, 11ந்தேதி கோவை, 12ந்தேதி – கோவை, நீலகிரியில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அதன்பின்னர் பிரச்சாரம் முடிவடையும் வரையில் கோவையில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *