சிறுகதை

பாஸ் வேர்டு – ராஜா செல்லமுத்து

முன்னிரவு முற்றி பின்னிரவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது இரவு .லேசாக தூறல் போட்டுக் கொண்டிருந்தது வானம். எங்கோ கத்திக் கொண்டிருந்தன நாய்கள். பரசுராமன் புரண்டு புரண்டு படுத்தான்.

வெப்பத்தை விட்டுக் குளிரை போர்த்தியிருந்தது தரை. வெறும் தரையில் பாயை மட்டும் விரித்துப் படுத்திருந்த பரசுராமனுக்கு கொஞ்சம் ஈரம் தட்டியது.

ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்த பரசுராமனின் காதில் பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்டை போடும் சத்தம் கேட்டது.

என்ன இது? இந்த நடு ராத்திரியில் அதுவும் மழை நேரம் யாரு சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க என்று கதவை திறந்து பார்த்தாள். அதுவரையில் தாழிட்ட கதவுக்குள்ளே வர முடியாத வார்த்தைகள்; கதவை திறந்ததும் மள மளவென்று சத்தம்; அவன் காதுகளை வந்து நிறைந்தது.

அவ மறைக்கிறா .அவ உண்மையான பொம்பளையா இருந்தா அவ செல்போனை புடுங்கி அதுல என்ன இருக்குன்னு பாருங்க என்று மாமியாரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தான் கணவன் ரவி.

என் பொண்ணு அப்படி செஞ்சிருக்கமாட்டப்பா .அவ நல்லவ என்று தன் மகளுக்குச் சான்றிதழ் வழங்கிக் கொண்டிருந்தாள் அந்தத் தாய்.

அப்படி நல்ல பொண்ண பெத்த நீங்க ஏன் அவ போனை வாங்கி பார்க்க கூடாது. எங்க உன் போனை குடு என்று மனைவி சங்கீதாவை திட்டிக் கொண்டிருந்தான் ரவி.

இல்ல தர முடியாது என்று தன் வலது கையில் வைத்திருந்த செல்போனை பின்பக்கமாக மறைத்து வைத்தாள் சங்கீதா.

பாத்தீர்களா? எவ்வளவு கள்ளத்தனம் பண்றான்னு. இவளப் போயி நல்லவன்னு சொல்றீங்க. இவ ஆயிரம் தப்பு பண்ணிக்கிட்டு இருக்கா. அது உங்களுக்கு தெரியாது. அந்த செல்போனை புடுங்கி பார்த்தா அத்தனை வண்டவாளம் தண்டவாளமும் உங்களுக்கு தெரிய வரும். அப்பதான் உங்க பொண்ணோட மகிமை உங்களுக்கு புரியும் என்று சங்கீதாவின் தாயிடம் முறையிட்டுக் கொண்டிருந்தான் ரவி.

அந்தத் தாய் தவறியும் தன் மகளின் பாஸ்வேர்டை கேட்கவே இல்லை. காலைல பாத்துக்கலாம் நீங்க தூங்குங்க இப்ப நீங்க குடிச்சு இருக்கீங்க என்ன பேசினாலும் உங்களுக்கு கேட்காது எதா இருந்தாலும் காலைல பாத்துக்கலாம் என்று மாமியார் மருமகனுக்கு புத்திமதி சொல்வது போல தன் மகளை காப்பாற்றிக் கொண்டிருந்தாள்.

என்னை என்ன கேனப் பையன்னு நினைச்சீங்களா? அவ யார் யார் கூடயோ பேசிகிட்டு இருக்கா. அத நான் பாத்து இருக்கேன். வாட்ஸ் அப்ல என்னென்னமோ படங்கள் இருக்கு. அதை நாம பார்த்துட கூடாதுன்னு தான் பாஸ்வேர்ட் போட்டு வச்சிருக்கா. அந்த பாஸ்வேர்ட நீங்க வாங்கிப் போன் ஓபன் பண்ணுங்க. அத்தனை பிரச்சனைக்கும் ஒரு முடிவு வரும். காலையில காட்டுறேன்னு சொல்லி அத்தனையும் அழிச்சிட்டு உங்க மகளை காப்பாத்த பாக்கறீங்களா ? என்று மாமியாரிடம் காரமாகப் பேசினான் ரவி.

ரவி சொல்வதை சங்கீதாவின் தாய் கேட்கவில்லை. இவர்கள் போடும் சத்தத்தில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் எழுந்து கொண்டார்கள்.

தம்பி சுத்தி இருக்கவங்க எல்லாம் பாக்குறாங்க. அசிங்கமா இருக்கு போய் தூங்குங்க. எதா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்

என்று சங்கீதாவின் தாய் மருமகனை சமாதானப்படுத்திக் கொண்டே இருந்தாள்.

அந்த பாஸ்வேர்டு தெரியாம நான் தூங்க மாட்டேன். உங்க மகள்ட்ட என்ன அந்த பாஸ்வேர்டு கேளுங்க என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தான் ரவி.

அவனுடைய இரண்டு குழந்தைகளும் அந்த சாமத்தில் கத்திக் கொண்டே இருந்தது . தூறல் போட்டுக் கொண்டிருந்தது வானம்.

நாய்கள் குரைக்கும் சத்தம் இப்போது கொஞ்சம் அதிகமாக கேட்டது.

பரசுராமனுக்கு தூக்கம் வரவில்லை.

என்ன இது இந்த ராத்திரில இப்படி சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. ஆள பாத்தா அதிகம் படிக்காத ஆளுக மாதிரி தெரியுது பாஸ்வேர்டு, whatsapp ,டுவிட்டர்னு எ பேசிட்டு இருக்காங்க. காலம் ரொம்ப கெட்டுப் போச்சு. விஞ்ஞானம் ஒரு வகையில நல்லது செஞ்சிருக்கு. பல வகையில மனுசங்களுக்கு கெட்டது செஞ்சிருக்கு. அந்தப் பொண்ணு தப்பு செஞ்சாலும் சரியா இருந்தாலும் அது நமக்கு தெரியாது. ஆனா ஏதோ தப்பு செஞ்சு இருக்காங்கறது மட்டும் கணவனுக்கு தெரியுது. .அதான் சண்டை போட்டுக்கிட்டு இருக்கான். பாஸ்வேர்டு போட்டு மறைச்சு வைக்கிற அளவுக்கு படிக்காத அந்த பொண்ணுக்கு இந்த விஞ்ஞானம் வழியிட்டு இருக்குன்னா ஒரு வகையில விஞ்ஞானத்துக்கு கேடுதான்.

என்று பரசுராமன் நினைத்துக் கொண்டிருந்தான்.

இதற்கு மேல் இவர்கள் சண்டை நாம் பார்த்துக் கொண்டிருந்தால் நாளைக்கு அலுவலகம் செல்ல முடியாது. இப்போதே மணி மூன்றை தாண்டி விட்டது .கொஞ்ச நேரம் தூங்கவில்லை என்றால் நாளை அலுவலகத்தில் தூங்கி வழிய வேண்டியதுதான் என்று நினைத்த பரசுராமன் கதவை அடைத்தான்.

அப்பாேது தூறல் கொஞ்சம் அதிகமானது. நாய்கள் குரைக்கும் சத்தம் குறைந்திருந்தது.

இப்போது தவளைகள் சத்தம் பாேட ஆரம்பித்தது .ஆனால் பாஸ்வேர்ட் கேட்கும் ரவியின் குரல் மட்டும் ஓயவே இல்லை. சங்கீதாவின் அம்மா அவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அவன் மனைவியின் பாஸ்வேர்டு என்ன? என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

பரசுராமன் காதுகளில் அது விழுந்து கொண்டிருந்தது.

அவன் எப்போது தூங்கிப் போனான் என்பது அவனுக்கே தெரியாது.

மறுநாள் காலை எழுந்து எதிர் வீட்டை பார்த்தான்.அப்பாேது பாஸ்வேர்டும் கிடைக்கவில்லை பூஸ்வேர்டும் கிடைக்கவில்லை.

அந்தப் போனை சுக்கு நூறாக உடைத்திருந்தாள் சங்கீதா. உடைந்து போன அந்த செல்போனுக்குள் பாஸ்வேர்ட் மட்டுமல்ல.பல விஷயங்களும் மறைந்து போனதாக வருத்தப்பட்டு அழுது கொண்டிருந்தான் ரவி.

மழை நின்று, சுள்ளென்று உதித்திருந்தது சூரியன்.

விஞ்ஞானத்தை நினைத்து சிரித்தபடியே அலுவலகம் செல்வதற்கு தன் இரு சக்கர வாகனத்தை முடுக்கினான், பரசுராமன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *