செய்திகள்

பாஸ்போர்ட்டை ரத்து: பிரஜ்வல்–க்கு வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ்

Makkal Kural Official

டெல்லி, மே 25–

பாஸ்போர்ட்டை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்குமளிக்குமாறு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். ரேவண்ணாவின் மகன். கடந்த மாதம் 26-ம் தேதி நடந்த மக்களவை 2-ம் கட்ட தேர்தலில், இவர் ஹாசன் மக்களவை தொகுதியிலிருந்து பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார்.

இதனிடையே தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளன. இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார்.

இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவரை சர்வதேச அளவில் ‘இன்டர்போல்'(Interpol) போலீசார் தேடிவருகிறார்கள்.

ரத்து செய்ய பரிந்துரை

அரசின் உயா் பதவிகளில் உள்ளோருக்கு வழங்கப்படும் ராஜாங்க பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அவர் வெளிநாட்டுக்குச் சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரின் பாஸ்போர்ட்டை ரத்துசெய்ய கர்நாடக அரசு வெளியுறவு அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது.

அதை வெளியுறவு அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், பாஸ்போர்ட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்குமளிக்குமாறு ரேவண்ணாவுக்கு அமைச்சகம் மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாஸ்போா்ட் சட்டம் 1967-ன் படி பிரஜ்வல் ரேவண்ணாவின் ராஜாங்க பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அவரின் ராஜாங்க பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டால் அவர் எந்த நாட்டில் இருந்தாலும் அந்நாட்டு அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையும் எம்எல்ஏவுமான ஹெச்.டி.ரேவண்ணாவும் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#prajwalrevanna #BJP #Corruption #politics

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *