சிறுகதை

பாஸ்பாேர்ட்- ராஜா செல்லமுத்து

தேவநேசனை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துப் போக போலீஸ்காரர்கள் வந்தார்கள்.

ஏன்? எதற்கு? என்று அவர் கேட்பதற்குள் அவரை அடிக்காத குறையாக இழுத்துக் கொண்டு போனார்கள்.

ஏன்? என் வீட்டுக்காரர போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போறிங்க ? என்று மனைவி கேட்டும் அதற்கு சரியான பதில் சொல்லாத காவல்துறை தேவநேசனை தரதரவென்று இழுக்காத குறையாக கையைப் பிடித்து இழுத்து சென்றார்கள்.

சார் நான் என்ன தப்பு பண்ணேன் . என்னைய ஏன் போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போறீங்க ? சொல்லுங்க சார் என்று அவர் கேட்க

இங்கே எல்லாம் சொல்ல முடியாது இன்ஸ்பெக்டர் இருக்கார் . அவர் கிட்ட சொல்லு என்று தேவநேசனை தெரு வழியாக இழுத்துப போனது அந்த தெருவில் உள்ளவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டுப் பார்த்தார்கள்.

தேவநேசன் ரொம்ப நல்லவர் ஆச்சே அவரையே ஏன் போலீஸ்காரங்க கூட்டிட்டு போறாங்க என்ன தப்பு செய்தார் என்று பேசாத உதடுகள் இல்லை.

போலீஸ்காரர்கள் தன்னை தெரு வழியாக இழுத்துப் போவது தேவநேசனுக்கு ரொம்பவே அவமானமாகப் போனது. பொசுக்கென்று அழுகை வந்தாலும் அதை அவர் அடக்கிக் கொண்டார்.

உள்ளுக்குள் அழும் கண்ணீரை அவர் விழிகள் வெளியில் உதிர்க்கவில்லை .ஒரு வழியாக காவல் நிலையத்தில் கொண்டு செல்லப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார்.

ஒரு மிடுக்கான போலீஸ் அதிகாரி . அதிகாரத் தோரணையில் தேவநேசனை குற்ற உணர்வோடு பார்த்து கத்தினார் .

நீ தான் அந்த இன்டர்நேஷனல் கிரிமினலா ? என்னென்ன பண்ண? என்னென்ன செஞ்ச? உனக்கும் அந்த இன்டர்நேஷனல் கிரிமினலுக்கும்,என்ன தொடர்பு ?ஏன் இப்படி செஞ்ச? தங்கம், வைரம் ,கஞ்சா, இப்படி நிறைய கடத்தல் என்று இன்ஸ்பெக்டர் சொன்ன போது தேவநேசனுக்கு தலையைச் சுற்றியது.

சார் என்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒன்னும் புரியல கொஞ்சம் தெளிவா சொல்லுங்க என்று மன்றாடினார் தேவநேசன்.

தன் கையில் சுழற்றிக் கொண்டிருந்த லத்தியை தேவன் நேசன் முதுகுக்கு பதம் காட்டினார், இன்ஸ்பெக்டர்.

ஐயோ அம்மா என்று அழுத தேவநேசன் எதற்கு அடிக்கிறார்கள்? என்று தெரியாமலே அழுது கொண்டிருந்தார்.

சத்தியமா எனக்கு நீங்க சொல்றது எதுவும் புரியல. என்ன நோக்கத்துக்காக என்ன கூப்பிட்டு வந்திருக்கீங்க. நான் என்ன தப்பு செஞ்சேன். நீங்க சொல்றது, எனக்கு ஒன்னும் வெளங்கலை என்று மறுபடியும் கேட்டார், தேவநேசன்.

இந்த துரைக்கு என்னென்ன சொல்லுங்க என்று ஒரு வயதான ஏட்டை காண்பித்தார், இன்ஸ்பெக்டர்

உன் பேர்ல பாஸ்போர்ட் எடுத்துட்டு பாேன இன்னொருத்தன், அந்த முகத்தை மாஃபிங் பண்ணி வெளிநாடு போய், அங்கிருந்து தங்கம் வைரம் இப்படி என்னென்னமோ கடத்திட்டு வந்திருக்கான் . பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்னு இன்னைக்கு எங்க கிட்ட மாட்டிக்கிட்டான்.

பாஸ்போர்ட்ல உன் வீட்டு அட்ரஸ் இருந்தது. ஆனா, அது அவனுடைய பேர்ல இல்ல. அப்படிங்கறது எங்களுக்கு தெரியும் .அவன விசாரிச்சு பார்க்கும்போது பாஸ்போர்ட் நீ கொடுத்ததா சொன்னான். உனக்கு அவனுக்கும் ஏதோ டீலிங் இருக்காமே ? என்ன சொல்லு என்று இப்போது எகிறினார் இன்ஸ்பெக்டர் சார் என் பாஸ்போர்ட் காணாம போய் ரெண்டு மாசம் ஆச்சு சார் இத எடுத்திட்டு போய் யார் என்ன பண்ண போறாங்க? அப்படின்னு அசால்டா விட்டுட்டேன்.

ஆனா அதை எடுத்தவங்க ஏதோ தப்பா யூஸ் பண்ணி இருக்காங்க பாேல. எனக்கும் நீங்க சொல்ற குற்றங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை சார் .என் பாஸ்போர்ட்ட எடுத்தது யாரு? அவன் என்ன பண்றாங்கன்னு எனக்கு தெரியாது சார் என்று தேவ நேசன் அழுது சொன்ன போது,

அட முட்டாள், ஆதார் கார்ட வச்சே என்னென்னமோ செஞ்சுட்டு இருக்காங்க.பாஸ்போர்ட்ட வச்சு என்ன வேணாலும் செய்யலாம்னு உனக்கு தெரியலையா? பாஸ்போர்ட்டு காணப்பாேன அன்னைக்கே நீ கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கனும். இல்ல அது ஏன் பண்ணல? என்று சொல்ல

சார் இதெல்லாம் வச்சு என்ன பண்ண போறாங்க அப்படின்னு அலட்சியமா இருந்துட்டேன் என்று தேவநேசண் சொன்ன போது,

அத வாயில சொல்லி பிரயோஜனம் இல்ல .உன் பாஸ்போர்ட் காணாம போனதுக்கான அத்தாச்சி என்ன? நீ இருக்கற ஏரியா வில்லேஜ் ஆபிஸர். வருமான வரித்துறை அதிகாரி எல்லாத்திட்டயும் சர்டிபிகேட் வாங்கிட்டு வந்து குடு. அப்பத்தான் நீ குற்றம் அற்றவன்னு விடுதலை செய்வோம். இல்ல தூக்கி உள்ள போட்டு லாடம் கட்டிடுவாேம் என்று இன்ஸ்பெக்டர் சொன்னபோது தேவநேசனுக்கு அழுகையும் அவமானமும் ஒட்டிக்கொண்டது.

பாஸ்போர்ட் காணாம போன அன்னைக்கே போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து எஃப் ஐ ஆர் காப்பி வாங்கி வச்சிருந்தா நமக்கு இவ்வளவு தொல்ல இல்ல. அத ஒரு அலட்சியமா விட்டது எவ்வளவு தூரத்துக்கு நம்மள கொண்டுவந்து விட்டுருக்கு என்று வருத்தப்பட்டு காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தான் தேவநேசன்.

அவன் மனைவி தேவநேசனை எவ்வளவோ கேவலமாக பேசினாள். அது எதற்கும் பதில் சொல்ல முடியாமல், அழுகையை மட்டுமே உதிர்த்தபடியே தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தான், தேவநேசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *