நாடும் நடப்பும்

‘பாஸ்டேக்’ ஈட்டும் வசூல் சாலை மேம்பட உதவுகிறதா?


ஆர். முத்துக்குமார்


நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்து மிகப்பெரிய பங்களிப்பு தரும் துறையாகும். குறிப்பாக சாலை போக்குவரத்து, வளர்ச்சிகளுக்கு உந்து சக்தியாக இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் முன்பே அமெரிக்காவும், பல ஐரோப்பிய நாடுகளும் அதில் சாதித்தது.

கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் சாலை புரட்சியை ஏற்படுத்தியது, அங்கே நாட்டில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது உலகிலேயே மிகப்பெரிய பொருளாதாரமாகவும் உயர்ந்து விட்டது. சீனாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள முதன்மையான சாலைகள், நமது நாட்டின் தங்க நாற்கர சாலைகளை விட பிரமாண்டமானதாக இருக்கிறது. அதன் காரணமாக, சீனாவிலுள்ள முதல் 5 மாநிலங்கள் நிச்சயம் உலகப் பணக்கார நாடுகளின் அமைப்பான ஜி–20 யில் இடம்பெறும் பொருளாதாரமாக இருக்கிறது.

உந்து சக்தியாக சாலைகள்

அந்த சாலை வசதிகள், எந்த நீர் நிலையையும் பாதிக்காது அமைந்துள்ளது. நகர, கிராம வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக இருந்தும் விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் அமைத்துள்ளார்கள். அங்கும் மாறி மாறி வரும் பருவநிலை இருக்கிறது. அதீத மழை, கடும் குளிர், ஓரளவு கடுமையான கோடை என்று மாறிமாறி தாக்கினாலும் சாலைகள் உறுதியாக இருக்கிறது.

எங்கு பார்த்தாலும் வெண்ணைபோல் சாலைகள் வழு வழுவென்று இருப்பதுடன் துருத்திக் கொண்டிருக்கும் கற்களையோ, மண்ணையோ காண முடியாது! அது எப்படி சாத்தியம்? குறிப்பாக நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இருந்தும் சாலைகள் சுத்தமாக இருப்பது எப்படி?

இது பற்றிய ஆராய்ச்சியை நமது போக்குவரத்துத் துறையும், பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்ட குழுமமும் மேற்கொண்டு அதற்கு இணையான செயல்பாடுகளை நம் மண்ணில் கொண்டு வர வேண்டும்.

நாம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வல்லரசாக உருவாகி கொண்டிருக்கையில் நமது சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தால் போக்குவரத்து சேவைகள் சரிந்து விடலாம்! அப்படி ஒரு மகத்தான சாலை போக்குவரத்தை பெற மிகப் பெரிய முதலீடுகள் தேவைப்படத் தான் செய்யும். அதற்காகத்தான் சுங்கச்சாவடிகளில் வசூல் செய்கிறோம்.

சுங்கச் சாவடி வசூல்

2021 டிசம்பரில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ‘பாஸ்ட் டேக்’ வழியாக வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணம் ரூ.3679 கோடியாகும். அதாவது டிசம்பரில் நாள்தோறும் பெற்றுள்ள சராசரி வருவாய் ரூ.119 கோடி வசூலாகும்! நவம்பர் மாதத்தில் பெற்ற வசூலை விட டிசம்பரில் பெற்ற கட்டண வசூல் ரூ.502 கோடி அதிகமாகும்.

போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் நாடெங்கும் அதிகரித்து வருவதுடன் மின்னணு ” ‘‘பாஸ்ட் டேக்’’ முறையால் கட்டாய கட்டண வசூல், அதிவிரைவு வசூலும் சாத்தியமாகி விட்டது. நாம் சாலைகள் போட செய்த முதலீட்டையும், அதை பராமரிக்க ஆகும் செலவுக்கும் தான் சுங்க வரி வசூல் நடைபெறுகிறது. நெடுஞ்சாலை பாலங்கள், சுரங்கங்கள் போன்ற கட்டமைப்புகளுக்கு அதிக முதலீடு செய்வதால் பயண தூரம் குறைகிறது. அதற்காக ஒரு முறை பெரிய முதலீடு அவசியமாகிறது.

அப்படி செய்யப்பட்ட முதலீட்டை தனியார் நிறுவனங்கள் வசம் தந்து விட்டு அந்த முதலீட்டை திரும்பப் பெற சுங்கச்சாவடிகளை நடத்த அனுமதிக்கிறோம். அப்படி கிடைக்கும் சுங்க வரி வருவாய், உரிய வகையில் மீண்டும் முதலீடு செய்யப்பட்டால் அது நாட்டின் சாலை போக்குவரத்து மேம்பாடை உறுதி செய்து விடும். கூடவே பொருளாதார வளர்ச்சியையும் அதிவேகமாக முன்னேற செய்து விடும்.

சுங்கச்சாவடி வருவாயை மத்திய -– மாநில அரசுகள் எப்படி செலவு செய்கிறது என்பது சாமானியனுக்கு தெரியாது. ஆனால் வரும்கால, நவீன தொழில்நுட்பங்களில் இயங்கும் வாகனங்கள் பயணிப்பதற்கு தேவைப்படும் தொழில் நுட்பங்களை உருவாக்கும், அவை பற்றிய புரிதல் பெற நவீன உயர் கல்விக்கும் செலவு செய்யப்பட வேண்டும் என்பது மிக அவசியமாகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *