சிறுகதை

பாவம் பெற்றோர் | ராஜா செல்லமுத்து

புவனேஸ்வரியின் செல்போன் அலறியது.

எங்கம்மா பேசுறாங்க. சத்தம் போடாம இரு என்று அருகில் இருந்த காதலன் கார்த்திகை அமைதிப்படுத்திய புவனேஸ்வரி, அம்மா சொல்லுமா என்று கொஞ்சம் அமைதியாக கேட்டாள்.

புவி…. ஆபீஸ் முடிஞ்சுடுச்சா. இப்ப எங்க இருக்கா? என்று அம்மா கேட்டாள்.

அம்மா நான் சொல்ல மறந்துட்டேன்; ஸாரி. இன்னைக்கு ஆபீஸ்ல கொஞ்சம் வேல. முன்னைவிட அதிகமா என்னால இப்ப கொஞ்சம் லேட்டா தான் வரமுடியும் . நான் உனக்கு கால் பண்ண நினைச்சேன். மறந்துட்டேன் ஸாரி என்று நம்பத்தகுந்த வார்த்தைகளில் அம்மாவிடம் பேசினாள் புவனேஸ்வரி. சரிமா பார்த்துக்க. நீ எப்பவுமே ஆபீஸ் முடிஞ்சு ஆறு மணிக்கு வந்துருவே. இன்னிக்கி ஏழரை ஆயிடுச்சு. இன்னும் வரல என்று என் மனசு பதக் பதக்னு அடிச்சது. அதான் உனக்கு போன் பண்ணுேன். அப்பாகூட கேட்டாரு. புவி… ஏன் இன்னைக்கு லேட் ? ஏன் இன்னும் வரல அப்படின்னு? கேட்டுட்டு இருந்தாரு . நீ எப்பவும் சரியான நேரத்துக்கு வந்து விடுவே. லேட் ஆகுதேன்னு தான் உனக்கு நான் போன் பண்ணுேனேன். ஆபீஸ் வேலையா இருப்பே என்றாள் அம்மா. உன்னோட வேலையைப் பாரு என்று அம்மா மென்மையான குரலில் பேசினார்.

ஓகேமா ஒர்க் முடிஞ்சதுமே நான் வந்துடறேன். அப்பா கிட்ட சொல்லுங்க என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல ஒரு பொய்யைத் தூக்கி போட்டாள் புவனேஸ்வரி.

அதை உண்மை என்று நம்பிய புவனேஸ்வரி அப்பாவும் அம்மாவும் மகளுக்காக கரிசனையோடு இறங்கினர்.

பாவம் நம்ம பொண்ணு கஷ்டப்பட்டு உழைக்கிறா. அதுவும் ஓவர்டைம் வேற. எதுக்கு இப்படி உழைக்கணும். வேலை முடிஞ்சு வீட்டுக்கு வர வேண்டியதுதானே என்று அம்மா சொல்ல, நானா அவளை வேலைக்கா போகச் சொன்னேன். அவதான் போறா; வேலை நேரம் முடிந்ததும் வீட்டுக்கு வரலாம்; அவளை யாரு ஓவர்டைம் பார்க்கச் சொன்னது. வீட்டுக்கு வர வேண்டியது தானே என்று அப்பாவும் தன் முறைக்கு பேசினார்.

உழைக்கிற வயசு உழைக்கட்டும் அப்பத்தானே வயசான காலத்துல உட்கார்ந்து சாப்பிட முடியும் என் பொண்ணு கெட்டிகாரி. அதுதான் இப்ப நல்லா உழைச்சிட்டு இருக்கா. நம்மள எல்லாம் வயசான காலத்துல கண்டிப்பா காப்பாத்துவா. புவனேஸ்வரியைப் பெத்ததுக்கு நான் ரொம்ப மெச்சுகிறேன் என்று அம்மாவும் அப்பாவும் மாறி மாறி புவனேஸ்வரியை புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.

*

ஒரு பார்க்கில் அமர்ந்த புவனேஸ்வரியின் மடியில் காதலன் கார்த்தி படுத்திருந்தான்.

என்ன உங்க வீட்டில இன்னைக்கும் பொய் சொன்னியா என்று கார்த்திக் கேட்டான்.

ஆமா என்ன பண்றது. அப்புறம் உன் கூட திருட்டுத்தனமா காதல்.

காதல் பண்றதுக்கு அவங்க கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டா வர முடியும். இப்படி திருட்டுத்தனமாகத்தான் வரமுடியும் என்று புவனேஸ்வரி சொன்னாள்.

இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் பொய் சொல்லிட்டு இருக்க போறோம் என்று கார்த்திக் கேட்டான்.

கொஞ்ச காலத்துக்குத்தான். நம்ம விஷயம் வீட்டுக்கு தெரியிற வரைக்கும் . இல்ல நாம இந்த ஊரைவிட்டு ஓடுற வரைக்கும். இந்த பொய் சொல்லித் தான் ஆகணும் என்று புவனேஸ்வரி சொன்னாள்.

அவள் தலையில் அடித்தான் கார்த்தி.

ஆமா நீ வீட்டுக்கு ஒரு பொண்ணு தானே.

ஆமா

உன்ன கல்யாணம் பண்ணா. உங்க அப்பா அம்மா கூட இருப்பார்களா என்று கார்த்திக் கேட்டான்.

அவங்கள யார்கூட வச்சிருப்பாய்.

நம்ம கல்யாணம் பண்ணி தனி குடித்தனம் போயிருவோம். அவங்க தனியா இருக்கட்டுமே.

உண்மையாவா சொல்ற என்று கார்த்திக் கேட்டான்.

ஆமா, நிச்சயமா, அவங்க கூட எல்லாம் குடி இருக்க முடியாது.

வயசானவங்க; சும்மா பேசிட்டு இருப்பாங்க; எனக்கு பிடிக்காது; நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க; நம்ம காதல் வரைக்கும் இந்த மாதிரி பொய் சொல்லிக் கொண்டே இருப்போம் . வீட்டில சொல்லி பார்ப்போம்; கல்யாணம் முடிக்க. இல்லன்னா, ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குவோம் என்று புவனேஸ்வரி சொல்லிக்கொண்டிருந்தாள்.

*

நேரம் ஆக ஆக புவனேஸ்வரி அப்பா அம்மாவிற்கு அடி வயிற்றில் புளியை கரைத்தது. பாவம்

என் பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கிறா. அவள வேலை மட்டும்தான் பார்க்கச் சொன்னேன் . ஓவர் டைம் பார்க்கச் சொன்னது யார்? வீட்டுக்கு வர வேண்டியதுதானே? என்று அம்மா அப்பா மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

புவனேஸ்வரியின் மடியில் படுத்துக் கிடந்த காதலன் தலையை புவனேஸ்வரி லாவகமாக வருடிக்கொண்டிருந்தாள்.

அவன் தேவலோகத்தில் கனவு காண்பது போல அரை மயக்கத்தில் கண்களை மூடியபடியே மயங்கிக் கிடந்தான்.

புவனேஸ்வரி போன் மறுபடியும் அலறியது .

இந்த பெருசுகளுக்கு வேற வேலையே இல்லையா?என்று சலித்தபடியே அம்மாவின் போனை அலட்சியமாக எடுத்து ஹலோ சொல்லுமா இன்னும் வேலை முடியல என்றாள் புவனேஸ்வரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *