கமலேஷ் தனியார் பள்ளியில் பிளஸ் டூ படிப்பு படிக்கும் மாணவன். அவன் தன் தந்தை வரதராஜனிடம் ஒரு நாள் அப்பா எனக்கு என்னோட பள்ளிக்கூடத்தில் எக்ஸாம்பீஸ் ஐயாயிரம் ரூபாய் இன்னும் ஒரு வாரத்தில கட்டச் சொல்றாங்க. நீங்க பணத்தை ரெடி பண்ணிக் கொடுங்கப்பா என்று கேட்டான்.
சரிப்பா என்று பதிலளித்தார் வரதராஜன். மகன் கமலேஷ் வெளியே போனதும் தனக்குத்தானே புலம்ப ஆரம்பித்தார்.
நம்ம மகன் இப்படி திடீரென்று ஐயாயிரம் ரூபாய் கேட்கிறானே. நான் எங்கே போவேன். யாருகிட்ட கேட்பேன் என்று வேதனை மேலோங்க புலம்பினார். பின்னே இருக்காதா?
வரதராஜன் மின்சார அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவரின் ஆண் பிள்ளையும் பெண் பிள்ளையும் தனியார் பள்ளியில் படிக்கிறாள்.மகள் பத்தாம் வகுப்பு.
இரு பிள்ளைகளையும் தனியார் பள்ளியில் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அவர் மனைவி பார்வதி ஏங்க நம்ம ரெண்டு பிள்ளைகளையும் அரசாங்க பள்ளியில் படிக்க வைக்கலாமே. ஏன் தனியார் பள்ளியில் படிக்க வைக்கவேண்டும்? செலவு அதிகமாகுமே என்றுக்கேட்க அதற்கு வரதராஜன் தனியார் பள்ளியில் தான் தரமா பாடம் சொல்லி கொடுப்பாங்க. அதுவும் பிள்ளைகள் சீக்கிரத்தில் இங்கிலீஷ் பேசுவாங்க.
அடுத்தடுத்து படிக்க பிள்ளைகளுக்கும் ஆர்வமிருக்கும். செலவப் பத்தி கவலைப் படக்கூடாது என்று பதில்சொன்னார். பதில் சொன்ன வரதராஜனே இப்போது படிப்புச் செலவுகளைப்பற்றி கவலைப்படுகிறார்.
குடும்பச் செலவுகளால் திக்கு முக்காடிப் போன வரதராஜன் பிள்ளைகளின் படிப்பு செலவுகளுக்காக புலம்புகிறார். அவர் மனைவியும் வேலை பார்ப்பதில்லை. இவர் மட்டும் வேலை பார்த்து குடும்பத்தை ஓட்டி வருகிறார். வேறு வருமானமும் அவருக்கில்லை. பேருக்குத் தான் அரசாங்க வேலை. அதில் அவருக்கு எந்த வருமானமும் கிடையாது. பிடித்தம் போக வரக்கூடிய சம்பளத்தில் தான் சமாளித்து வருகிறார்.
இந்த நிலையில் மகன் கமலேஷ் கேட்ட ஐயாயிரத்தை எப்படி ஏற்பாடு செய்வது. ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி வருகிறார். இதில் ஐயாயிரத்துக்கு எங்கே போவது? குழம்பிய சிந்தனைகளுடன் வீட்டு சோபாவில் அப்படியே அமர்ந்துவிட்டார் வரதராஜன்.
நாட்கள் சென்றன. மகனுக்கு பணம்கட்ட இன்னும் இரண்டு நாட்கள் தாம் இருந்தன. அன்று இரவு வரத ராஜன் வீட்டில் எல்லோரும் கண்அயர்ந்து உறங்கிகொண்டிருந்தனர். அவருக்கு மட்டும் தூக்கம் வரவில்லை.
எழுந்து அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார் வரதராஜன். அப்போது அவருக்கு திடீரென்று ஒரு போன் வந்தது. அதை எடுத்து பேசினார். சொல்லுங்க நான் தான் வரதராஜன் பேசுறேன் என்றார்.
எதிர் முனையில் பேசிய நபர், நான் கொடுத்த மனுவுல நீங்க உங்க அதிகாரிக் கிட்ட கையெழுத்து வாங்கி கொடுத்தீங்கன்னா உங்களுக்கு ஐயாயிரத்தை கொடுத்திடுறேன். என்ன சரியா என்று கேட்க, அதற்கு வரதராஜன் ஒன்னும் கவலைபடாதீங்க. நான் எங்க அதிகாரி கிட்ட பிரச்சினையில்லாமல் கையெழுத்து வாங்கித்தர்றேன்.
அவருக்கும் சேர்த்து ஒரு அமௌன்ட கொடுத்துடுங்க. நான் என் பையனோட எக்ஸாம் பீசுக்காகதான் இதுக்கு சம்மதிக்கிறேன். சரி நீங்க நாளைக்கு மதியம் பணத்தோடு வாங்க. பேப்பரை வாங்கிட்டு போங்க என்று போனை அணைத்ததும் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
எதிரில் அவருடைய மகன் கமலேஷ் நின்று கொண்டிருந்தான். அந்த நேரத்தில் வரதராஜனுக்கு மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது. அதை வெளிக்காட்டாமல் என்னப்பா நீ தூங்கலையா என்று கேட்டார்.
உடனே மகன் கமலேஷ் நான் தூங்குவது இருக்கட்டும். நீங்க பேசியனதை எல்லாத்தையும் கேட்டேன்பா,
எனக்கு எக்ஸாம்பீஸை கட்டுறதுக்கு நீங்க லஞ்சம் வாங்கி தான் கட்டணுமா? தவறான வழியில் அதுவும் சட்டத்துக்கு விரோதமா பணம் வாங்கி என்னை படிக்க வைக்கணுமா? அந்த பாவப்பட்ட பணத்தை வாங்கிபடிக்கிறதுக்கு பதில்நான் படிக்காமலே இருந்திடலாம்.
நீங்க வாங்குற லஞ்சம் அதிகாரிகளுக்கு தெரிஞ்சா எவ்வளவுகெட்ட பேரு. உங்க வேலைக்கும் வேட்டு வைப்பாங்க. ஜெயிலுக்கும் போவீங்க. இதையெல்லாம்தேவையப்பா.
இதனால நம்ம குடும்ப பேரு கெட்டு வெளியில் தலைகாட்ட முடியாம போகும்ப்பா.
லஞ்சம் வாங்குறவங்க இதை சிந்திச்சி பாத்தாங்கன்னா லஞ்சம் வாங்குறதுக்கு மனசு வருமா?
திருடனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம். திருடர்கள் எதைபத்தியும் கவலைபடாம தைரியமா திருடுவாங்க. ஆனா ஒரு நாள் நிச்சயமா மாட்டுவாங்க. அது போல தான் லஞ்சம் வாங்குறவங்க. துணிஞ்சு வாங்குவாங்க. ஒரு நாள் திடீர்னுமாட்டிகிட்டு ஜெயிலுக்கு போவாங்கப்பா. இதெல்லாம் தேவையா நமக்கு? பிள்ளைகளுக்கு புத்தி சொல்லவேண்டிய நீங்க இப்ப உங்க பிள்ளையே புத்திசொல்லும்படி ஆயிடிச்சிப்பா.
நல்ல வேளை நான் நீங்க பேசுனதை கேட்டுட்டேன். நினைச்சி பாக்கவே முடியலப்பா.
அப்பா தயவு செஞ்சி லஞ்சம் வாங்காதீங்கப்பா. நம்ம குடும்பம் சீரழிஞ்சி போயிடும்.
அப்பா இன்னொரு முக்கியமான விஷயம்பா எனக்கு நீங்களும் அம்மாவும் கைச் செலவுக்குன்னு கொடுத்த காசுகளைச் சேர்த்து ஆறாயிரம் ரூபாய் வச்சிருக்கேன்பா. அந்தப் பணத்தை எடுத்து நான் எக்ஸாம்பீஸ் பணத்தைக் கட்டுறேன்பா. நீங்க யாருகிட்டையும் தவறான பணம் வாங்காதீங்கப்பா. அது பாவப்பட்ட பணம்பா என்று கண்ணீர் விட்டு அழுதபடி தந்தையின் கரங்களை பற்றியபடி கெஞ்சி மன்றாடி பேசினான் மகன் கமலேஷ்.
இதையெல்லாம் கேட்ட தந்தை வரதராஜன் தன்னுடைய தலையில் ஓங்கிஓங்கி அடித்தபடி, அய்யோ மகனே இதையெல்லாம் நான் யோசிக்காம பெரிய தப்பு பண்ணப் பாத்துட்டேனே. நல்ல நேரத்தில் எனக்கு புத்திசொல்லிட்டுப்பா .எனக்கு நீ மகன் இல்லை. சாமிப்பா என்று தன் மகனைகட்டி அணைத்தபடி அழ ஆரம்பித்தார்.
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மனைவியும் மகளும் எழுந்து நடந்ததை புரிந்து கொண்டு அவர்களும் அழ
பார்வதி நம்ம மகன் என்னோட அறிவுக்கண்ணை திறந்துட்டான். தங்கமான பிள்ளைகளை பெத்து இருக்கோம் என்றபடி மகனை தலையில் முத்தமிட்டார் வரதராஜன். அதிலிருந்து லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அதை மனதிலிருந்து அழித்து விட்டார்.
மகன் நவீன தாயுமானவன் ஆனான். இம்மாதிரி எல்லா குழந்தைகளும் நினைக்க வேண்டும். வாழ்க வாழ்க வளர்க