செய்திகள்

பால் முதல் நெய் வரை இந்திய பொருட்களுக்கு உலகளவில் தேவை அதிகரிப்பு: மோடி பெருமிதம்

9 ஆண்டுகளில் மீன்பிடி தொழில் 2 மடங்கு வளர்ச்சி

புதுடெல்லி, ஜூலை 1–

உலகளவில் சிறுதானியங்களுக்கு புதிய சந்தை உருவாகி உள்ளது என்றும் பால் முதல் நெய் வரை இந்திய பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

டெல்லியில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் இந்திய கூட்டுறவு சங்கத்தின் 17 வது மாநாடு துவங்கியது.

சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் மோடி பேசுகையில்,

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், இடைத்தரகர்கள் தலையீடு இன்றி, கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் பலனடைந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில், இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.2.5 லட்சம் கோடி நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது. 2014க்கு முன்பு, விவசாயத்துறையில் 5 ஆண்டுகளில், ஒரே திட்டத்திற்கு மட்டும் 90 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டது. தற்போது, நாம் அதனை கடந்து விட்டோம். பிரதமர் கிசான் சமான் நிதி திட்டத்தில், இதனை விட 3 மடங்கு நிதி செலவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் கிடைக்கிறது.

டிஜிட்டல் இந்தியா

அரசின் பலன்கள், பயனாளிகளுக்கு நேரடியாக சென்று சேரும் வகையில், டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பணப்பரிமாற்றத்தை சார்ந்து இருப்பதை குறைப்பதே, இந்த திட்டத்தின் நோக்கம். டிஜிட்டல் பரிமாற்றத்தில் இந்தியாவின் ஆதிக்கமானது, உலகளவில் நமது அடையாளமாக மாறி உள்ளது. கூட்டுறவுத்துறையிலும் இதனை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். டிஜிட்டல் பரிமாற்றத்தால் வெளிப்படைத்தன்மை அதிகரித்து உள்ளது. ஆன்லைன் பரிமாற்றம் நாட்டிற்கு பயனளிக்கும். தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகளை மத்திய அரசு தீர்த்து வைத்து உள்ளது.

புதிய சந்தை

பால் பவுடர் முதல் நெய்வரை இந்திய பொருட்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்து உள்ளது. சிறு தானியங்களுக்கு புதிய சந்தை உருவாகி உள்ளது. இதன் மூலம் சிறு விவசாயிகள் பலன் பெற முடியும். ஏற்றுமதியை அதிகரிக்க கவனம் செலுத்தி வருகிறோம். அரிசி மற்றும் கோதுமையில் இந்தியா மட்டுமே தன்னிறைவு பெற்றுள்ளது.

மீன்வளத்துறையில் 25 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இது மீனவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதுடன், அவர்களின் சம்பாதிக்கும் திறனை அதிகரித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் உள்நாட்டு மீன்பிடி தொழில் 2 மடங்கு வளர்ந்து உள்ளது. கூட்டுறவுத்துறைக்கு என தனி அமைச்சகத்தை மத்திய அரசு தான் உருவாக்கியது. நாட்டின் வளர்ச்சியில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அமித் ஷா

முன்னதாக 17வது இந்திய கூட்டுறவு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “நமது நாட்டில் கூட்டுறவு இயக்கம் தொடங்கி 115 ஆண்டுகள் ஆகிறது. சுதந்திரம் பெற்றதில் இருந்து கூட்டுறவுத்துறை ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது, அது கூட்டுறவு அமைச்சகம் தனியாக உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான். 2019-ல் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் ஒரு தனி கூட்டுறவு அமைச்சகத்தை அமைத்தார்” என்று அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *