கவர்னர் உரையில் அரசு பெருமிதம்
சென்னை, பிப்.12–
மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் வருவாயை உயர்த்தும் நோக்கத்துடன், விவசாயிகளால் வழங்கப்படும் பசும்பால் மற்றும் எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் ஊக்கத் தொகையாக இந்த அரசு அறிவித்துள்ளது. குறுகிய காலத்திலேயே பால் கொள்முதல் விலையை 6 ரூபாய் உயர்த்தியுள்ளது வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். அரசின் இந்த முயற்சிகள், நுகர்வோரின் நலன்களை எவ்விதத்திலும் பாதிக்காமல் மாநிலத்தில் உள்ள 3.87 லட்சத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு பயனளித்துள்ளன என்று என்று கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.
இன்று சட்டசபையில் கவர்னர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:–
76 கோடி ரூபாய் செலவில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியதன் விளைவாக, நடப்பாண்டில் குறுவை சாகுபடிப் பரப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவில் 5.59 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. முழுமையான வேளாண் வளர்ச்சியை எய்திடத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்திட இந்த ஆண்டில் 190 கோடி ரூபாய் செலவில் 2,504 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப்’ பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சாகுபடிச் செலவைக் குறைத்து விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் முயற்சியாக, 2023–24–ம் ஆண்டில் மேலும் 50,000 புதிய வேளாண் மின் இணைப்புகள் இந்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 2021–ம் ஆண்டிலிருந்து இதுவரை, மொத்தமாக 2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நலன்களைப் பாதுகாக்க…
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டிட இந்த அரசு உறுதியாக உள்ளது. இப்பிரச்சினைகளில் நமது மாநில விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், நதிநீர்ப் பங்கீட்டிற்கான அறிவியல்ரீதியான கணக்கீட்டை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவதோடு, காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம்.
இவ்வாறு அந்த உரையில் கூறப்பட்டுள்ளது.