பால் உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
சென்னை, ஜூன் 20–
சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், விவசாய பிரதிநிதிகள் உடனான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள், சங்க பணியாளர்கள், உறுப்பினர்கள் சார்பில் பால் கொள்முதல் விலையை அதிகரிக்கவும், உடனடி ஒப்புகைச்சீட்டை மேலும் விரிவுபடுத்துமாறும், கால்நடை தீவனத்திற்கு மானியம் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில் மாவட்ட பொது மேலாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு உடனடி ஒப்புகைச்சீட்டு வழங்குதல், 10 நாட்களுக்கு ஒருமுறை பால்பணம் பட்டுவாடா, கால்நடை தீவனத்தின் தரத்தை உறுதி செய்தல், குறைந்த வட்டியில் கால்நடைக் கடன் என கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக சீர்திருத்த நடவடிக்கையின் மூலம் தற்போது ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு சுமார் 34.42 லட்சம் லிட்டர் பாலை விவசாயகளிடமிருந்து கொள்முதல் செய்து ஒரு நிலையான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
சென்ற நிதி ஆண்டில் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு கறவை மாட்டுக்கடன், கால்நடை பராமரிப்பு கடனாக – ரூ. 221 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. பரிசீலனை செய்து கடன் வழங்கவும் உள்ளது.
தற்போது பால் பொருட்கள் விற்பனையிலும் ஆவின் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பால் விற்பனை 23% அதிகரித்துள்ளது. தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை மொத்த விற்பனையாளராக நியமனம் செய்யப்பட்ட பிறகு தற்போது வரை 1 கோடியே 27 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளது.
துணை மையங்களை சங்கங்களாக பதிவு செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும், அனைத்து வகை சங்கங்களிலும் நிலுவையில் உள்ள ஆண்டு இறுதி தணிக்கை பணிகளை இந்த மாத இறுதிக்குள் விரைந்து முடிக்குமாறும் துணைப்பதிவாளர்களிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.
பால்வளத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளவாறு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு கணினி மயமாக்கும் பணியினை விரைந்து செயல்படுத்தவும், டிஜிட்டல் சிக்னேச்சர் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவின் உபபொருட்கள் மற்றும் கால்நடை தீவன விற்பனையை அதிகரிப்பதன் மூலம் சங்கங்களுக்கு அதிக அளவில் வருவாய் வருவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் பால்வளத்துறை இயக்குநர் சு.வினீத், முதன்மை விழிப்புக்குழு அதிகாரி சே. மேகலினா ஐடன், ஆவின் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.