சிறுகதை

பால்ய சினேகம் | சி.சுரேஷ்

பத்து வருடங்கள் கழித்து ஒல்லியான தேகம் உடைய ரவி நண்பன் ராமசாமியை சந்தித்தான்

இவர்கள் இருவரும் பால்ய கால சிநேகிதர்கள்.

ஒன்றாம் வகுப்பில் இருந்து 10 ம் வகுப்பு வரை அடுத்தடுத்து உட்கார்ந்து கதை பேசி அடித்துக் கிள்ளி கொஞ்சி விளையாடி வளர்ந்தவர்கள்.

இப்பொழுது ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

பழைய ஞாபகங்கள் மீண்டும் மீண்டு எழுந்தன.

இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட இடம் தியாகராய நகர் ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் கவுண்டரில்.

“டேய் ராமசாமி என்னடா எப்படி இருக்க” ராமசாமியிடம் எந்த அசைவும் இல்லை.

“யாராக இருக்கும்” என அவன் யோசித்துக் கொண்டிருந்தான்

ரவி யோசித்தான்.

‘‘ஒருவேளை இராமசாமி இல்லயோ? வேற யாராவது இருப்பானோ? ஒரு ரியாக்சனும் இல்லையே” என நினைத்தான்

ராமசாமியின் வலது கண் பக்கம் ஒரு பெரிய மச்சம் இருக்குமே பார்த்தான் ரவி. ஆம் அச்சம் இருக்கிறது . அப்படி என்றால் இவன் ராமசாமியே தான். ஏன் இப்படி பயந்து பயந்து விழிக்கிறான்?

“டேய் என்னடா அப்படி முழிக்கிற .என்னைத் தெரியலையா ? நான் தான்டா உன் பிரண்டு ரவி. திருச்சியில் நாம் ஒன்னா படிச்சமே”

“ரவி நீயாடா” அப்படியே அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.

ராமசாமி ஒல்லியான தேகம் உடையவன். ஆனால் பெரிய தொந்தி. ரவியை அப்படியே பிணைத்துக் கொண்டான். ராமசாமியின் கட்டுக்குள் அடங்க முடியாமல் ரவி திக்குமுக்காடி மூச்சு திணறினான்.

டேய் ராமசாமி நீ அப்ப இந்த மாதிரி இன்னும் டியூப்லைட் டா தான் இருக்கே. எத்தனை மாசம்டா வயிற்றைப் பார்த்து கேட்டான் ரவி.

“டேய்… ரவி இன்னும் உனக்கு அந்த குசும்பு போலடா”

“சரி ராமசாமி. இப்ப நீ எங்க இருக்கிற ?என்ன பண்ற ?பிள்ளைங்க எத்தனை பேரு?”

“டேய் நான் அயனாவரத்தில் ஒரு பேக்கரி வைத்திருக்கிறேன். எனக்கு ரெண்டு ஆம்பளை பசங்கடா. கடவுள் தயவில் வாழ்க்கை நல்லாஓடிட்டு இருக்கு. சரி நீ எப்படி இங்க சென்னைக்கு வந்தே? இப்ப எங்க இருக்கிறே? என்ன பண்றே?”

“நான் சமூக பணியாற்றும் ஒரு நிறுவனத்தில் மேனேஜரா இருக்கேன் டிரான்ஸ்பர் ஆகி இங்கு வந்திருக்கிறேன்.

“அப்பா வீட்ல. மனைவி இரண்டு ஆண் பிள்ளைகள். அவங்க அங்கதான் இருக்காங்க . வாரத்துக்கு ஒரு முறை போயிட்டு வந்துடறேன். கூடிய சீக்கிரம் வீடு கிடைச்ச உடனே அவங்களையும் கூட்டிட்டு வந்துடுவேன்”

“சரி உன் போன் நம்பர் குடு” இருவரும் அவரவர்களுடைய போன் நம்பரை பரிமாறிக் கொண்டார்கள்

“ரவி வா உனக்கு புடிச்ச ஏலக்காய் டீ சாப்பிடலாம்”

சூடான டீ வந்தது .ஆவி பறக்க இருவரும் அங்கிருந்த கல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள்.

இரு உள்ளங்களின் எண்ணங்களும் பால்ய பருவத்திற்குள் நீந்த ஆரம்பித்தது

இப்பொழுது இருக்கும் இடத்தை மறந்தார்கள்.

பழைய கதைகளைப் பேச பேச வயது குறைய ஆரம்பித்தது.

“ஏன்டா ராமசாமி… எவ்வளவுதான் மீசை முளைச்சு நாம பெரிசா இருந்தாலும் அந்த பழைய சிநேகமும் பழைய நாட்களும் இன்னும் மறக்க

முடியல . பசுமையாக இருக்குடா” என்றான் ரவி

எப்படிடா மறக்க முடியும்? கிளாஸ்ல நான் சும்மா உட்கார்ந்திருந்தால் கூட உன்னால சும்மா இருக்க முடியாது. என்னை கிள்ளி என்னை நோண்டி என்னை ஏதாவது பண்ணாதான் உனக்கு சந்தோஷம்”

“ஆமாடா மறக்க மனம் கூடுதில்லையே…..’’

ஆனா என்ன நீ இஞ்சி இடுப்பழகன் இல்லை. வயிறு பெருத்த பேரழகன்”

“பாத்தியா இந்த குசும்புதான் வேண்டாம்ன்றது. இன்னும் நீ மாறலடா”

“எப்படி மாறமுடியும் உன்ன பார்த்த நேரத்துல”

“சரி இப்ப என்ன பண்ற? எங்க வீட்டுக்கு வாடா”

“இன்னொரு நாள் வரேன்டா’’

சரி ராமசாமி உன் வலது கை காட்டுடா.

காட்டினான்.

டேய் அந்த தழும்பு இன்னும் அப்படியே இருக்கு”

“ஆமான்டா”

அந்த வலது கை விரல்களில் இருக்கும் தழும்புக்கு ஒரு கதை உண்டு

ராமசாமிக்கு போண்டான்னா உசுரு. எத்தனை போண்டா கொடுத்தாலும் சாப்பிடுவான். அவங்க எதுத்த வீட்ல போண்டா சுடுவார்கள். சாயங்காலத்தில் நிறைய கூட்டங்கள் கூடும் . போண்டா அவ்வளவு டேஸ்டா இருக்கும்.

அப்ப ராமசாமிக்கு ஆறு வயசு இருக்கும். சாயங்காலத்தில் போண்டா வாங்கப் போனான். அங்கே கூட்டம் இல்லாதிருந்தது. வாணலியில் எண்ணெய் சூடாக காய்ந்து கொண்டிருந்தது.

“அண்ணா எனக்கு போண்டா வேணும்”

“இருடா இப்ப தான் என்னை காயுது”

ராமசாமியால் பொறுத்திருக்க முடியவில்லை.

கடைக்காரர் போண்டா மாவை எண்ணெயில் ஒவ்வொன்றாக விட விட

அதை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த ராமசாமியால் சும்மா இருக்க முடியவில்லை.

கடைக்காரர் எதிர்பாராத நேரத்தில் தன்னுடைய வலது கையை லபக்கென்று அந்த எண்ணைக்குள் உள்ளே விட்டான்.

அந்தக் கடைக்காரர் பதறினார்.

ராமசாமி துடிதுடித்துப் போனான்

“என்னடா தம்பி இப்படி பண்ணிட்ட நான் எப்படி உங்க அப்பா அம்மாக்கு பதில் சொல்லுவேன்”

ஒரு வாரம் ராமசாமி பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை. ஏன் என்ன என்று கேட்க

ரவி அவன் வீட்டுக்கு சென்று அவன் கையைப் பார்த்தான்.

அவன் கையில் எண்ணை சுட்ட கொப்பளம். போண்டாவை போல் வீங்கி இருந்தது.

அன்றிலிருந்து அவனுக்கு ஊரிலே போண்டா ராமசாமி என்னும் பெயர் உண்டானது.

ஊரில் எத்தனை ராமசாமிகள் இருந்தாலும் போண்டா ராமசாமி என்று சொன்னால் அவன் இவன் மட்டுமே.

இன்றுவரை இந்த பெயர் நிலைத்திருக்கிறது.

இருவரும் அந்தக் கதைகளை எல்லாம் பேசி பழைய நாட்களுக்குள் நீந்திக் கொண்டு இருந்தார்கள் சுவாரசியமான அந்த நிமிடங்களை எல்லாம் அசை போட்டுக் கொண்டு இருந்தார்கள் அந்தப் பருவங்கள் மீண்டும் வராதா என ஏங்கினார்கள்

நினைக்க நினைக்க இனிக்கின்ற அந்த பருவங்களும் அந்த நாட்களும் பள்ளி வாழ்வும் இன்னும் மனதிற்குள் மறக்க முடியாத ஒரு திரைப்படமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

இருந்தாலும் காலத்தின் கட்டாயம் பிரிந்து ஆகவேண்டும். அவரவர்கள் வாழ்க்கையில் செயல்பட்டாக வேண்டியது அவசியமாயிற்று. பிரிந்தார்கள்.

தற்போதைய நிலைக்கும் நினைவுக்கும் திரும்பினார்கள்.

டிரெயின் வந்து நின்றது.

“சரி ரவி நானும் கிளம்புறேன் நீயும் கிளம்புடா .திரும்ப ஒரு நாள் நாம சந்திப்போம். கண்டிப்பா எங்க வீட்டுக்கு நீ வரணும் “என்றான் ராமசாமி

ரவி பிரிய முடியாமல் பிரிந்தான்.

இருவரின் பயணங்களும் திசை வேறாகச் சென்றாலும் மனதிற்குள் இன்னும் பால்ய பருவத்தின் சினேகம் நினைவில் இணைந்தே பயணிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *