சிறுகதை

பால்ய காலம் – ராஜா செல்லமுத்து

நீண்ட நாட்களுக்குப் பிறகு பால்யகால நண்பன் பவுலுடன் பேச வேண்டிய ஒரு சூழல் எனக்கு ஏற்பட்டது. இறுகிக் கிடக்கும் மனநிலையிலிருந்து இளகிய வார்த்தைகளை இரண்டு பேர்களும் பேசிக்கொண்டோம். நடுத்தர வயதை ஒட்டிய வயது. அந்த பால்ய கால நினைவுகளை அவருடன் பகிர்ந்து கொண்டேன்.

இருவரும் திசைக்கு ஒன்றாய் சிதறிக் கிடந்தாலும் எண்ணங்கள் எல்லாம் ஒரு இடத்தில் இருந்தது.

இரவு நேரம் ஆகிவிட்டபடியால் அவரைச் செல்போனில் அழைக்கலாமா? வேண்டாமா? என்று ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது. முடிவில் அழைத்துத் தான் பார்க்கலாம் என்று செல்போனை எடுத்து அவருக்கு போன் செய்தேன் . இரண்டு ரிங்குகள் – எடுத்து விட்டார்.

வணக்கம் மாமா. எப்படி இருக்கீங்க? என்று கேட்டேன்.

நல்லா இருக்கேன் மாப்பிள என்றார் பவுல். நோய்களைப் பற்றிய பேச்சு. இத்தியாதி இத்தியாதி என்று பேசி முடித்தபிறகு நினைவுகள் எல்லாம் பால்ய காலத்திற்குப் போய்விட்டது

நீங்க என்ன பண்றீங்க?.

ஒரு பூக்கடையில வேலை பார்த்துகிட்டு இருக்கேன்; தினமும் ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று சொன்னார் பவுல்.

நீங்க என்ன பண்றிங்க ? என்றவர் சிரித்த படியே என்னைப்பற்றி அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததால் அதைப்பற்றி அதிகம் அவர் பொருட்படுத்தவில்லை; கேட்கவில்லை . மற்ற விஷயங்கள் எல்லாம் பேசி விட்டு

மாமா உங்களுக்கு ஞாபகம் இருக்கா? ஒரு ஆறு வயசு ஏழு வயசு இருக்கும்போது ,… நீங்க… நான்… முத்து அப்படின்னு ஒரு அண்ணன் மூணு பேரும் விறகு எடுப்பதற்காக மலைக்குப் போயிருந்தோம். அப்போ விறகு எல்லாம் எடுத்து முடித்த பிறகு, மழை சோ ன்னு கொட்டுச்சு . முத்து அண்ணா முன்னாடி , பின்ன நான், என் பின்னாடி அதுக்கப்புறம் நீங்க மேலும் மூணு பேரும் வந்துட்டு இருந்தோம்.

அப்போ முன்னால நடந்து போனார் முத்து நாம பின்னாடி வந்தோம் . நமக்கு முன்னாடி ஒரு பெரிய பாறை இருந்தது. அந்த பாறை மேலே ஏறினாத் தான் கோயில்க்காடு என்கிற அந்த இடத்தைத் தாண்டி நாம மலையடிவாரத்தை விட்டு வெளியில் வர முடியும் .

அப்போ முத்து அண்ணன் தன்னோட கால்ல போட்டிருந்த செருப்ப தண்ணியில அலசினார். அப்போ தண்ணியில இருந்த பாசி வழிக்கி விட்டு தலையிலிருந்த விறகு நச்சுனு அவரோட நெஞ்சில விழுந்த வேகத்துல அவருக்கு வலிப்பு நோய் வர ஆரம்பிச்சுருச்சு.

ஐயோ என்ன ஆச்சோ? ஏது ஆச்சோன்னு அழுதிட்டு, ஏதோ அந்த எடத்த விட்டு ஓடி வந்தோம். அப்ப அந்த சின்ன வயசுல நமக்கு ஒன்னும் தெரியாது. அத்தனை பேரும் அப்படியே ஓடி வந்து எல்லாரையும் கரட்டுக்கு கூட்டிட்டு ஓடி வந்தோம். ஞாபகம் இருக்கா? என்ற போது

ஆமா மாப்பிள்ளை. என் மனசுல பசுமரத்தாணி மாறி அது பதிஞ்சு இருக்கு.ஒரு சினிமா படம் மாதிரி என் நெஞ்சில அது ஓடுவது என்று பவுல் சொன்னார்.

இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு என்று கேட்டபோது

சொல்லுங்க மாப்ள என்றார் பவுல்.

சங்கராபுரம் கருப்பசாமி கோவில்ல நாம ஒரு குழுவா சேந்து சீட்டு ஆரம்பிச்சோம். வாரத்துக்கு ஆளுக்கு ஐம்பது ரூபாய் போடுறதுன்னு ஒரு தீர்மானம். ஒரு அஞ்சு பேர் ஆறு பேர் சேர்ந்து நமது ஆரம்பிச்சதுல ஆண்டவர்ங்கிறவரு. அவர் வாங்குன ஐநூறு ரூபா இன்னும் தரல என்று சொன்னபோது கடகடவென்று சிரித்தார் பவுல்.

ஆமா மாப்ள, அவர் இப்ப உயிரோட இல்ல . அந்த நோட்டு கூட என்கிட்ட தான் இருக்குது உங்ககிட்ட இருக்கா ?என்றார் பவுல்

என்கிட்ட இல்ல மாமா என்று சொன்னேன்.

அந்த நினைவுகளை பேசப் பேச நிறைய மாற்றங்கள் எங்களுக்கு ஏற்பட்டது

நிச்சயமாக எங்கள் இதயம் இடம் விட்டு இடம் மாறியது.

இன்னொன்னு தெரியுமா உங்களுக்கு?என்று சொன்னபோது

தெரியல சொல்லுங்க என்றார் பவுல்.

நம்ம கூட படிச்ச ஊளைமூக்கு மணிகண்டன் , கறுத்த காளியம்மா, சித்ரா , ராஜன் அப்படின்னு நம்ம படிக்கும்போது எத்தனை பேர் இருந்திருப்பாங்க. சுருளி ஆண்டவர்னு ஒரு வாத்தியாரு எப்பவுமே அவர் தான் நமக்கு சாப்பாடு போடுவார். கோவணம் கட்டிட்டு அவர் எடுக்கிற ஒவ்வொரு வகுப்பும் நாம கிண்டல் பண்ணிக்கிட்டு இருப்போம் . அங்க படிக்கும்போது செல்லம் என்ற ஸ்ரீரங்கன் ரங்கசாமிங்கிறவன மரத்தடியில் உட்காந்து இருக்கும் போது ரங்கசாமியை தொடையில பேனாவ வச்சுக் குத்தி ரத்தம் வர வச்சானே ; ஞாபகம் இருக்கா? என்று என்று நான் கேட்ட போது,

மாப்பிள்ளை எப்படி இவ்வளவு விஷயங்களையும் மனசுல வெச்சு இருக்கீங்க? என்ற போது

எல்லாம் மனசுல ரெக்கார்டு மாதிரி பதில் இருக்கு மாமா; என்னன்னு தெரியல எனக்கு மறக்க மாட்டேன்குது என்று சொன்னபோது…

அவள்….

லேசாகத் அழுதேன்.

மாமாவும் திணறினார்.

என்ன மாமா என்ற போதும்

இல்ல மாப்ள அந்த மாதிரி அழகான வாழ்க்கைய நாம தொலைத்து விட்டோம் என்றார்.

ஆமா மாமா என்று அவருடைய பேச்சை இடைமறித்து

மறுபடியும் ஒன்று சொல்லட்டுமா மாமா என்றேன்.

சொல்லுங்க என்றார் பவுல்.

மாமா உங்களுக்கு ஞாபகம் இருக்கா? நாம 9 வது படிக்கும்போது, 9 சி தான் நம்மோட வகுப்பு. பெண்கள் பாத்ரூம் அருகில்தான் நம்ம வகுப்பு.

அப்ப சின்னச்சாமின்ற ஒரு வாத்தியார் வந்து நம்மள ஏபிசிடி சொல்ல சொன்னார்கள்.

அதுல உங்களுக்கு, எனக்கு ஏபிசிடி தெரியல. அவரு வலது கையில வாட்ச் கட்டுகிற பழக்க இருக்கிறதுனால அந்த வாட்சை கழட்டி வச்சிட்டு நம்மள அடிச்சது ஞாபகம் இருக்கான்னு கேட்டேன்.

அவரின் ஞாபகக் கிடங்கிலிருந்து அந்த பால்ய கால நினைவுகள் பொங்கல் பானை போல பொங்கி வழிந்தது.

ஆமா ஆமா மாப்ள . அதோட நான் வந்தவன்தான் பள்ளிக்கூடத்தை விட்டு, அதுக்கப்புறம் நான் பள்ளிக்கூடத்திற்கு போனதில்லை என்று சொன்னார் பவுல்.

அந்தச் சின்ன வயதில் நடந்த அத்தனையும் கொண்டு பேசி சிரித்துக் கொண்டிருந்தோம்.

எனக்கு பவுல் மாமாவிற்கு ஏபிசிடி தெரியாம அடி வாங்கி இருப்பது இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரத்தான் செய்கிறது.

அத்தனையும் பேசிச் சிரிக்கும் போது எங்கோ தொலைவில் இருக்கும் அவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த பால்ய கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட போது என்னுடைய கண்ணில் ஈரம் துளிர்த்தது.

எவ்வளவு அழகான வாழ்க்கை, எவ்வளவு ரம்மியமான சூழல், இவ்வளவு நுண்ணியமான மனிதர்கள், உறவுகள், அத்தனை தொலைத்துவிட்டு, இந்த நகர நாகரிகத்தில் மூழ்கிக் கிடக்கிறோம்.

இன்றைக்கு நம் கிராமத்தில் உறவுகளுடன் இருப்பது எப்படி என்ற ஏக்கம் என் அடிமனதில் ஆணியாய் இறங்கியது.

அவர் செல்போனில் பேசி முடித்த பிறகு , அந்த நினைவுகள் எல்லாம் என் பால்ய காலத்தை சுற்றிச் சுற்றியே வந்தது.

அவர் பேசி முடித்துவிட்டு, அந்த நினைவுகளில் மூழ்கி இருப்பாரோ என்னவோ எனக்குத் தெரியாது ? அவருடன் பேசிய பழைய கால வாழ்க்கையெல்லாம் என்னை வட்டமடித்துச் சுழன்று கொண்டேயிருந்தது .

என் எண்ணம் முழுவதும் அதுவே வியாபித்திருந்தது.

அன்று இரவு முழுதும் நான் அழுதுகொண்டே இருந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *