சிறுகதை

பால்கனி – ராஜா செல்லமுத்து

விரிந்து பரந்து கிடக்கும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் எல்லா குடியிருப்புகளிலும் பால்கனி இருக்கும்.

சிலர் அந்தப் பால்கனியில் உபயோகமற்ற பொருட்களை அடைத்து வைத்திருப்பார்கள். சிலர் கொடிகளைக் கட்டி துணிகளை அதில் காய வைத்து இருப்பார்கள். சிலருக்கு வெளிச்சம் வரும் வழி. சிலருக்கு பூந்தொட்டிகள் வைக்கும் இடம். சிலருக்கு செருப்புகள் வைக்கும் இடம் என்று பால் கனியைப் பலவிதமாக பயன்படுத்தினார்கள்.

ஆனால், ஜானகி மட்டும் பால்கனியை தன் பொழுதுபோக்கு இடமாக வைத்திருந்தாள்.சில நேரங்களில் அங்கு அமர்ந்து புத்தகங்களை வாசிப்பாள்.

சிலு சிலுவென வரும் காற்று. ஜன்னலைத் தொட்டுப் போகும் தென்னங்கீற்று. எதிர் திசையில் இருக்கும் பூ மரங்களின் பூ வாசம் என்று அந்தப் பால்கனியில் அமர்ந்து அவள் புத்தகம் வாசிக்கும் போது அவளுக்கு ஏற்படும் உணர்வே அலாதியானது.

எதிர் வீடு பக்கத்து வீடுகளில் இருக்கும் பால்கனியைப் பார்ப்பாள். மேலே சொன்னது போலவே எல்லோரும் பால் கனியைப் பயன்படுத்தி இருந்தார்கள்.

ஆனால் ஜானகிக்கு மட்டும் அது வாசிக்கும் தளமாக இருந்தது. அந்த இடத்தில் அமர்ந்து வாசித்தால் அதிகமான அறிவு ஊறுவதாக அவளுக்கு அடிக்கடி தோன்றும்.

அலுவலகம் செல்லும் கணவன் பள்ளிக்குச் செல்லும் தன் பிள்ளை வீட்டை விட்டுப் பாேன பிறகு அந்த இடத்தில் அமர்ந்து இலக்கியம் முதல் சினிமா வரை அத்தனையும் வாசித்துக் கொண்டிருப்பாள்.

வீட்டில் இருக்கும் அறைகளை விட அவள் அதிகமாக பால்கனியில்தான் வாசம் செய்திருந்தாள்.

கணவன் குழந்தைகள் வீட்டை விட்டுப் போனதும் வெறுமையாக இருக்கும் வீட்டில் அவளின் பகல் நேர கோயில் அந்த பால்கனியாகத்தான் இருக்கும்.

சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் தூங்கலாம் என்றில்லை. தொலைக்காட்சி பார்க்கலாம் என்று அவள் ஒருபோதும் விரும்பியதில்லை.

அந்தப் பால்கனிதான் அவளுக்கு வானத்தை, தென்றலை அறிமுகம் செய்தது. மழைக் காலத்தில் வரும் தூற்றலைத் தூவியது.

இரவு நேரத்தில் நட்சத்திரங்களை வாசிக்க வைத்தது. பௌர்ணமி நாட்களில் முழு நிலவைத் தரிசிக்க வைத்தது. அமாவாசை இரவில் இருளை நேசிக்க வைத்ததும் அந்தப் பால்கனி தான் என்பது ஜானகிக்குப் புரியும். .

அது மட்டுமல்ல அவளின் பால்கனியில் இருந்து பார்த்தால் அந்தக் குடியிருப்பு முழுவதும் மனிதர்கள் நடமாடுவது, அவர்களின் செய்கைகள் சேட்டைகள் அத்தனையும் பார்த்துக் கொண்டுதான் இருப்பாள்.

சன்னல் என்பது வானத்தின் வாசல் என்றால் பால்கனி பிரபஞ்சத்தின் வாயிலாக இருந்தது.

ஜானகி எப்போதும் போல கணவன் அலுவலகத்திற்குச் சென்றதும் குழந்தைகள் பள்ளிக்கு சென்றதும் ஓடோடிப் போய் பால்கனியில் அமர்ந்து ஒரு கதையை வாசிக்க ஆரம்பித்தாள்.

வாசிக்கும் அந்தக் கதையில் வரும் கதாபாத்திரத்தில் கரைந்து கண்ணீர் மல்க வாசித்துக் கொண்டிருந்தபோது, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பாதையில் ஏதோ ஒரு வித்தியாசமான சத்தம் வருவதை அவளால் உணர முடிந்தது.

என்ன இது ?என்று திரும்பிப் பார்த்தாள்.

அடுக்குமாடிக் குடியிருப்பில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை ஒரு வீட்டில் திருடி விட்டதாக பக்கத்து அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள் மரத்தில் கட்டி வைத்து அந்த பெண்ணைப் நையப்படைத்துக் கொண்டிருந்தார்கள்.

அம்மா நான் திருடலம்மா. நான் திருடல .என்னைய விட்டுருங்க என்று அவள் அழுது கொண்டிருந்தாள்

அதுவரையில் உருக்கமான கதையில் காலூன்றி இருந்த ஜானகியின் கண்கள் ஒரு அப்பாவிப் பெண்ணை அடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தது. படபடவென பால்கனியை விட்டு இறங்கிப் படிகளில் இறங்கி ஓடினாள்.

அம்மா இந்த பொண்ணு எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும் . நான் ஒவ்வொரு தடவையும் காலையிலிருந்து இங்க பால்கனியில் தான் உட்கார்ந்து நான் பாத்துட்டு இருப்பேன். ரொம்ப நாணயமான ஒழுக்கமான பொண்ணும்மா. எனக்கு தெரியும் இவங்க திருடியிருக்க மாட்டாங்க என்று அந்த வேலைக்காரப் பெண்மணிக்கு ஆதரவாகப் பேசினாள் ஜானகி

உனக்கென்ன தெரியும்? அந்த அப்பார்ட்மெண்ட்ல நடக்கிறது இந்த அபார்ட்மெண்டில் என்ன தெரியும்? என்ற போது

அந்த அப்பார்ட்மெண்ட்ல உட்கார்ந்துட்டு சில விஷயங்கள் நான் கவனிச்சிட்டு தான் இருப்பேன். அதுல இந்த பொண்ணோட நல்ல நடவடிக்கைகள நான் கவனிச்சிருக்கிறேன். அதனால தான் நான் தைரியமா சொல்றேன். இந்த பொண்ணு திருடி இருக்க மாட்டா விட்டுடுங்க என்று வாதாடினாள் ஜானகி

அவள் சொல்வதை கேட்காத அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள் காவல்துறையிடம் ஒப்படைப்பதாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒரு வீட்டில் இருந்து திருடன், திருடன் சத்தம் கேட்டது வேலைக்காரப் பெண்மணி அடித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் திருடனா? என்று திரும்பி பார்த்தார்கள் .

உறவினர் வீட்டிற்கு வருவதாக சொல்லி ஒருவன் அடிக்கடி அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு சென்று நோட்டமிட்டுப் பெரியவர்கள், ஆளில்லாதவர்கள், பலவீனமானவர்கள் இருக்கும் வீட்டில் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது .

சுற்றி வளைத்து அந்தத் திருடனைப்பிடித்து நையப் படைத்தார்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள்.

எதுவும் பேசாமல் ஜானகியை கண்ணீர் மல்க இரு கைகள் எடுத்து கும்பிட்டாள் அந்த வேலைக்காரப் பெண்மணி..

அவளை ஆதரவாக தோள் தொட்டு தேற்றினாள் ஜானகி.

இனிமேல் இங்க வேலை இல்லை வேலை செய்ய வேண்டாம். எங்க வீட்டுல உனக்கு வேலை தாரேன் என்று அந்த வேலைக்காரப் பெண்மணியை தன் வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

மறுநாளில் இருந்து அந்தப் பெண் ஜானகி வீட்டில் வேலை செய்ய ஆரம்பித்தாள்.

எப்போதும் போல அந்தப் பால்கனியில் அமர்ந்து புத்தக வாசிக்கலாம் என்று ஒரு புத்தகத்தை எடுத்தாள்.

ஆனால், அவளின் மனம், சிந்தனை புத்தகத்திற்குச் செல்லவில்லை. எழுதப்படாத கதைகள் இந்த பூமியில் நிறைய இருக்கின்றன. இந்த மனிதர்களை வாசிப்போம் என்று பால்கனியில் அமர்ந்து கொண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளை நோட்டமிட ஆரம்பித்தாள்.

பாதைகள், எதிரில் இருக்கும் பூங்கா, அருகில் இருக்கும் கோயில், கீழே இருக்கும் சூப்பர் மார்க்கெட் என்ற அத்தனையும் விதவிதமான மனிதர்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்குள் எல்லாம் ஒவ்வொரு கதை ஒளிந்திருந்தது.

பால்கனியில் அமர்ந்து இப்போது மனிதர்களை வாசிக்க ஆரம்பித்தாள் ஜானகி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *