பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி, செப். 30–
பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விழாவில் விருது வழங்கப்படும் என மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மிர்கயா என்ற படத்தின் மூலம் மிதுன் சக்கரவர்த்தி நடிகராக அறிமுகமானார். தனது அறிமுக படத்திலேயே தேசிய விருது வாங்கிய மிதுன் சக்கரவர்த்தி, சுவாமி விவேகானந்தா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றவர்.
பாலிவுட்டில் டிஸ்கோ டான்சர் படம் மூலம் புகழ் பெற்றவர். ஹிந்தி சினிமாவை தாண்டி இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பிரபலமானது. குறிப்பாக அந்த படத்தில் வரும் ‛ஐ யம் ஏ டிஸ்கோ டான்சர்’ பாடல் இந்திய அளவில் பிரபலமானது.
தி நக்சலைட்டிஸ், கவாப், கஸ்தூரி, சித்தாரா, ஹிம்மத்வாலா, அக்னிபாத் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்துள்ளார். நிறைய டிவி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இவர் வங்காளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.
தமிழில் கடந்த 2015ம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான ‘யாகாவாராயினும் நாகாக்க’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
1989ம் ஆண்டில் 19 படங்களில் நடித்தமைக்காக லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். 3 முறை தேசிய விருது, பிலிம் பேர் விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார். இந்தாண்டு பத்ம பூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
கொல்கத்தாவைச் சேர்ந்த 74 வயதான மிதுன் சக்கரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இவர் தற்போது பா.ஜ.க. கட்சியில் உள்ளார். சினிமாவில் இவரது கலைச் சேவையை பாராட்டி மத்திய அரசு இந்திய சினிமாவின் உயர்ந்த விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதை அறிவித்துள்ளது. தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள மிதுன் சக்கரவர்த்திக்கு பாலிவுட் திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வாழ்த்து
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், இந்திய சினிமாவுக்கு மிதுன் சக்ரவர்த்தியின் ஈடு இணையற்ற பங்களிப்பை அங்கீகரித்து அவருக்கு மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மிதுன் சக்ரவர்த்தி ஒரு கலாச்சார சின்னம், அவரது பல்துறை நடிப்பிற்காக தலைமுறைகள் கடந்து போற்றப்படுகிறார். மிதுன் சக்ரவர்த்திக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.