செய்திகள்

பாலியல் புகார்: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை

விழுப்புரம், ஜூன் 16–

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி, விழுப்புரம் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

முந்தைய அண்ணா திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) ராஜேஷ் தாஸ் மீது புகார் அளிக்கச் சென்றார். அப்போது பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி.கண்ணன் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் 2021-ஆம் ஆண்டில் வழக்குப் பதிந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், 2021 ஜூலை மாதம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதும், முன்னாள் எஸ்.பி.கண்ணன் மீதும் ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

3 ஆண்டுகள் சிறை

இதில், முன்னாள் தலைமைச் செயலர், முன்னாள் உள்துறைச் செயலர், சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி என 68 அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வாதங்கள் முடிவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி எம்.புஷ்பராணி உத்தரவிட்டிருந்தார்.

தொடர்ந்து அரசுத்தரப்பு வழக்குரைஞர் வைத்தியநாதன் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்குரைஞர் ரவீந்ததிரனும், முன்னாள் எஸ்.பி. தரப்பு வழக்குரைஞர் ஹேமச்சந்திரன் ஆகியோர் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தனர்.

வழக்கில் அனைத்து விசாரணையும் நிறைவு பெற்றதாக அறிவித்த நீதிபதி எம்.புஷ்பராணி, ஜூ ன் 16 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து இன்று காலை 10.50 மணிக்கு நீதிபதி எம்.புஷ்பராணி தீர்ப்பளித்தார். இதில், முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *