புதுடெல்லி, மே 4–
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று இரவு போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பாஜக எம்பியாவார். இந்நிலையில் தான் பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிடம் விளக்கம் கேட்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்தபோதும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கினர். கடந்த 23ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்பட 2 பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இருப்பினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் தான் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் எனக்கூறி தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மல்யுத்த வீரர்கள் கூறுகையில், போலீசார் அத்துமீறி நடந்து கொண்டனர். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டினர் என குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையே போலீசார் மற்றும் மல்யுத்த வீரர்கள் இடையே நடந்த கைக்கலப்பு தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.