சேலம் கோர்ட் தீர்ப்பு
சேலம், ஏப். 26–
சேலம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கழுத்து அறுத்து கொன்ற வாலிபரக்கு தூக்கு தண்டனை கொடுத்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்ப்பட்டியை அடுத்த சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் சாமிவேல். இவரின் மனைவி சின்னப்பொண்ணு. இவர்களின் கடைசி மகள் ராஜலட்சுமி (வயது 13). தளவாய்ப்பட்டி நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்கள் வீட்டுக்கு அருகே வசிப்பவர் தினேஷ்குமார் என்கிற கார்த்திக். வயது 26. அவரின் மனைவி சாரதா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இரு குடும்பத்தினரும் நட்பாகவே பழகி வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் தினேஷ்குமார் என்பவரால் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு சிறுமி ராஜலட்சுமி ஆளாக்கப்பட்ட்டுள்ளார். சிறுமி அவரது ஆசைக்கு இணங்க மறுத்ததால் தாய் எதிரிலேயே தினேஷ்குமாரால் கொடூரமான முறையில் தலையை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினேஷ் குமார் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இதுதவிர, குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாராணையின் போது தினேஷ்குமார், என்னை கொன்று விடுங்கள்..! தூக்கில் போடுங்கள்..! என்றும், சினிமா பார்த்து பெரிய தவறை செய்துவிட்டேன் என்றும் கண்ணீர்மல்க புலம்பினார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வாலிபர் தினேஷ் குமாருக்கு தூக்குத் தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.